2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சொல்வதைச் செய்கிறார்கள் இல்லை

Niroshini   / 2016 மே 31 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமைச்சர்கள் இங்கு வைத்து வழங்கும் உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் எவ்வித மேலதிக நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா குற்றஞ்சாட்டினார்.

யாழ். மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (31) நடைபெற்ற போது, இணைத்தலைவர்களில் ஒருவராகக் கலந்துகொண்டு அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

“அமைச்சர்கள் இங்கு வருகின்றனர். உறுதிமொழிகளைக் கொடுக்கின்றனர். ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் அக்கறை செலுத்துவதில்லை. மின்சக்தி எரிசக்தி பிரதி அமைச்சர் அஜீத் பீ.பெரேரா யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டபோது, மீள்குடியேறிய மக்களுக்கு இலவசமாக மின்சார இணைப்புக்கள் வழங்கப்படும் என்றும், இது தொடர்பில் கிராம அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் கூறினார்.

ஆனால், இங்கு கிராமஅலுவலர் எவரும் அந்தப் பகுதிகளுக்குச் சென்று தரவுகளைச் சேகரிக்கவும் இல்லை, இது தொடர்பில் அமைச்சும் எதனையும் கவனிக்கவும் இல்லை.

இதேபோல், நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து, காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் கருத்துக்கூறிவிட்டுச் சென்றுள்ளார். அது தொடர்பில் நாங்கள் சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் கதைக்க வேண்டியுள்ளது.

இங்கு விஜயம் செய்த ஜனாதிபதி விரைவில் மீள்குடியேற்றம் பூரணப்படுத்தப்படும் என்ற உறுதிமொழியை வழங்கிவிட்டுச் சென்றிருந்தார். ஆனால் இன்றுவரையில் மீள்குடியேற்றம் பூரணப்படுத்தப்படவில்லை. கொஞ்ச இடங்கள் விடப்பட்டுள்ளன. மிகுதி இடங்களும் விடுவிக்கப்படவேண்டும்” என்றார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,

“மீள்குடியேற்றம் சார்ந்த விடயங்களை கையாள்வது தான்தோன்றித்தனமாகவுள்ளது. அது தொடர்பில் எந்தவித கலந்துரையாடல்களையும் எங்களுடன் மேற்கொள்வது கிடையாது. இந்த மண்ணில் மக்களின் எந்தக் காணிகளும் சுவீகரிக்கப்படக்கூடாது. மக்களின் காணிகளில் தங்கியிருக்கும் இராணுவத்தினரை ஏன் வெளியேறுகின்றீர்கள் இல்லை எனக்கேட்டால்? யுத்த காலத்தில் பயன்படுத்திய உபகரணங்களை அப்புறப்படுத்துவது கடினமாகவுள்ளது என்கின்றனர். இதனை ஒரு விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .