2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அரச அதிகாரிகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்

Niroshini   / 2016 மே 31 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார்  சொரூபன்

“மாவட்டத்தின் அபிவிருத்தி சார்ந்து இடம்பெறும் கூட்டத்துக்கு அரச அதிகாரிகளான எம்மை அழைத்து விட்டு, கூட்டத்தில் எங்களை அதட்டி கதைக்கக்கூடாது. அதனை நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம். அரச அதிகாரிகளாகிய நாம் படித்தவர்கள். எங்களை மதிக்கவேண்டும்” என யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் எஸ்.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மாவட்ட செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (31) இடம்பெற்றது.

இக்கூட்டத்தில், பொதுச்சுகாதார பரிசோதகர்களால் தொழில் முயற்சியாளர்கள் பாதிப்படைகின்றமை தொடர்பான விடயத்தை தெரிவித்த யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி மு.உதயசிறி, பொது சுகாதார பரிசோதகர்கள் மீது பாரிய குற்றச்சாட்டுகளை முன்வைத்து அரச அதிகாரிகள் மீது கடின வார்த்தைகளை பிரயோகித்தார். இதன் போதே பணிப்பாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

“நான் ஓர் அரச அதிகாரி. இக்கூட்டத்தில் என்னை போன்ற பல அரச அதிகாரிகள் உள்ளனர். எனக்கு இவரைப் போன்று சுவாரசியமாகவும் அதட்டியும் பேசத் தெரியாது. மாவட்ட அபிவிருத்தி கூட்டம் என்ற வகையில் மாவட்டத்தின் அனைத்து துறையினரும் கூட்டத்தில் கலந்து கொண்டு தமது கருத்துகளை தெரிவிக்கலாம். அந்தவகையில் இக்கூட்டத்தில் படித்தவர்கள் உள்ளனர். ஆகவே, அதற்கான வார்த்தை பிரயோகம் என்பது முக்கியம்.

பேச்சில் சுவாரசியம் வேண்டும் என்பதற்காக அதட்டி கதைக்ககூடாது. நான் யாழ். போதனா வைத்தியசாலைக்கு பணிப்பாளராக பொறுப்பெடுத்த ஆரம்பத்தில், வைத்தியசாலையின் பிணவறையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தார், இந்த திடீர் மரணவிசாரணை அதிகாரி உதயசிறி. நீதிமன்றத்துக்குச் சென்று காலை 8 மணியில் இருந்து 11 மணிவரை மன்றில் இருந்து அதற்கான விளக்கத்தை மன்றுக்குத் தெரிவித்தேன். இது நாட்டில் எந்தப் பகுதியிலும் இடம்பெற்றிருக்காது.

மரண விசாரணை அதிகாரி தனது கருத்தை கூறும்போது, மாவட்டச் செயலாளர் பத்திரிகையில் அறிக்கை விட்டார் என்ற ஒரு கூற்றை வெளிப்படுத்தினார். அப்படியாயின் அரச அதிகாரிகள் வெறும் அறிக்கை மட்டும் விடுகிறார்கள், ஒன்றும் செய்வதில்லை என்று அர்த்தமாகின்றது. ஆகவே, பேச்சில் சுவாரசியம் இருக்க வேண்டும் என்பதற்காக அதிகாரிகளை முட்டாள்களாக நடத்தக்கூடாது. இவ்வாறான கூட்டத்தில் எமக்கு பாதுகாப்பு என்பது முக்கியம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .