2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சிறுநீரக வர்த்தக விவகாரம்: எழுவருக்கான பிணை மனுக்களும் நிராகரிப்பு

Gavitha   / 2016 ஜூன் 01 , மு.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோத சிறுநீரக வர்த்தகம் சம்பந்தமாகக் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தியப் பிரஜைகள் எழுவரின் பிணை மனுக்களையும், கொழும்பு பிரதான நீதிமன்ற நீதவான் கிஹான் பிலப்பிட்டிய நிராகரித்துள்ளார்.

செல்லுபடியான விஸா இன்றி, இலங்கையில் தங்கியிருந்த இந்தியப் பிரஜைகள் எழுவரும், சிறுநீரக வர்த்தகத்தில் ஈடுபட்டனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நேற்றுச் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துள்கொள்ளப்பட்டது.

வெளிநாட்டவர்களால், இந்நாட்டின் தனியார் வைத்தியசாலைகளில் 2013ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், சிறுநீரகங்களை மாற்றும் 1,075 செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளமை தனியார் வைத்திய அபிவிருத்திப் பிரிவின் ஆவணங்களின் ஊடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்று, கொழும்பு குற்றப்புலனாய்வு விசாரணைப்பிரிவினர், நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.

இதேவேளை, சந்தேக நபர்கள் தொடர்பான விசாரணைகளை துரிதமாக முடிவுக்கு கொண்டுவருமாறு, குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு, நீதவான் கட்டளையிட்டார்.

சிறுநீரகங்களைச் சட்டவிரோதமான முறையில் வியாபாரம் செய்வதற்கு, இலங்கை ஒரு முக்கிய இடமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றதா என்பது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, சட்டமா அதிபர் தங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக, நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களுக்குப் பிணை வழங்கப்பட்டால், அதன் மூலம் விசாரணைகளுக்குப் பாதிப்புகள் ஏற்பட சாத்தியக்கூறுகள் இருக்கின்ற காரணத்தினால், அவர்களை மேலும் தடுப்புக்காவலில் வைக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

அந்தக் கோரிக்கையை, பிரதிவாதிகளின் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி கடுமையாக எதிர்த்ததுடன், இது குறித்து பரந்த அளவில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமானால் சிறுநீரக அறுவை சிகிச்;சைகளுக்கு அனுமதி வழங்கிய சுகாதார சேவை பணிப்பாளர் பாலித மஹிபால உட்பட பிரதான வைத்தியர்களைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டுமென்றும் கோரிநின்றார்.

சுகாதார சேவை பணிப்பாளர் பாலித்த மஹிபால என்பவரே, கடந்த சில ஆண்டுகளாக இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட சிறுநீரக அறுவைச் சிகிச்சைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக சட்டத்தரணி தெரிவித்தார்.

அவர்களை கைது செய்வதை தவிர்த்து, சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளவர்களை 90 நாட்களுக்கும் மேல் தடுப்பு காவலில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாதென்று கூறிய சட்டத்தரணி, இந்திய அரசாங்கத்தில் அழுத்தங்கள் காரணமாகவே, குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இவ்வாறு செயல்பட்டு வருவதாகவும் நீதிமன்றத்திடம் தெரிவித்தார்.

வாதப்பிரதிவாதங்களை அவதானித்த பிரதான நீதவான், சந்தேகநபர்களை எதிர்வரும் 14ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டு, வழக்கையும் அன்றைய தினத்துக்கே ஒத்திவைத்தார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .