2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

'தோட்டங்களை குத்தகைக்கு வழங்கி தொழிலாளர்களின் நம்பிக்கையை பெறவேண்டும்'

Kogilavani   / 2016 ஜூன் 01 , மு.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

'தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதிலும் அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதிலும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இதயசுத்தியுடன் செயற்படுவாரானால், முதலில் அரசாங்க கூட்டுத்தாபனங்களின் பொறுப்பிலுள்ள தோட்டங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்கி தோட்டத் தொழிலாளர்களின் நம்பிக்கையை பெற வேண்டும்' என மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்தார்.

'அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவின் கருத்து சாதாரணமாக வர்த்தக நிறுவனங்களுடனோ அல்லது இலங்கையின் ஏற்றுமதி வருமானத்துடன் தொடர்புப்பட்டது மட்டுமல்ல. பல இலட்சக்கணக்கான தோட்டத் தொழிலாளர்களின் இருப்பு, மற்றும் வாழ்வாதாரத்துடன் பின்னிப்பிணைந்து காணப்படுகின்றது. மலையக பெருந்தோட்டங்கள் தொடர்பாக தீர்மானங்கள் எடுக்கின்றபோது தோட்டத் தொழிலாளர்களின் கருத்தறிந்து செயற்பட வேண்டும். தோட்டங்களின் எஜமானர்களை மாற்றுவதைவிட கடந்த இருநூறு வருடங்களாக இத் தோட்டங்களை உருவாக்கி உழைத்தவர்களை இத் தோட்டங்களுக்கு உரிமையாளர்களாக மாற்றுவது தொடர்பிலும் அரசாங்கம் சிந்திக்க வேண்டும்' எனவும் அவர் வலியுறுத்தினார்.

இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,

'இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்  தோட்டங்களை யார் நிர்வகிக்கின்றார்கள் என்பதைவிட பெருந்தோட்டங்களில் வாழ்கின்ற இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை யாரால் உயர்த்த முடியும் என்பதிலேயே அதிகம் அக்கரை செலுத்தும். தற்போது பெருந்தோட்டங்களை இருபத்தியிரண்டு தனியார் கம்பனிகளும் அரசாங்க கூட்டுத்தாபனங்களான மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை,  இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனம் ஆகியவை நிர்வகித்து வருகின்றன. இதில் பாரிய நிர்வாக சீர்க்கேடுகள் நிறைந்த நிறுவனங்களாக அரசாங்க கூட்டுத்தாபனங்களால் நிர்வகிக்கப்படுகின்ற தோட்டங்களே காணப்படுகின்றன.

மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை மற்றும் அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனம் ஆகியவறறுக்கு சொந்தமான தோட்டங்களில் தொழிலாளர்களுக்கு வாரத்துக்கு இரண்டு நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுகின்றன. உரிய காலத்தில் முறையாக சம்பளம் வழங்கப்படுவதில்லை. பல்லாயிரக் கணக்கான காணிகள் பயிரிடப்படாமல் ஒதுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு  ஒதுக்கப்பட்ட காணிகள் வெளியாருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.  தோட்டத்தொழிலாளர்களின்  சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி ஆகிவை செலுத்தப்படாமல் நூறு கோடி ரூபாய் நிலுவையாக நிற்கிறது.

முதியவர்கள் தமது வாழ்வாதாரத்துக்கு  கிடைக்க வேண்டிய கொடுப்பனவுகள் கிடைக்காத நிலையில், வறுமையில் மரணிக்கின்றனர். பல அரச தோட்டங்கள் அரசியல் அதிகாரம் உள்ளவர்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு கைமாற்றப்பட்டுள்ளது.

கண்டி, மாத்தளை பிரதேசங்களிலுள்ள அரசாங்க தோட்டங்களில் நிலவுகின்ற அவலங்களை அமைச்சர்களால் மாற்ற முடியவில்லை. இதனால், இத்தோட்டங்களில் வாழும் தொழிலாளர்கள் இந்நிறுவனங்களின் மீது நம்பிக்கையிழந்து இருக்கின்றனர்.  கம்பனிகளால் நிர்வகிக்கப்படுகின்ற தோட்டங்களை கைப்பற்றி அரச தோட்டங்களுக்கு ஏற்பட்ட அதே நிலையை உறுவாக்க இடமளிக்கப்பட முடியாது. அமைச்சர் எதனை நோக்கமாகக் கொண்டு   கம்பனி தோட்டங்களை அரச உடைமையாக்க முயற்சிக்கின்றார்?' என அவர் கேள்வியெழுப்பினார்.

பல வெளிநாட்டு  நிறுவனங்கள் பெருந்தோட்டங்களில் முதலீடு செய்வதற்கு வரிசையில் நிற்பதாக அமைச்சர் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.  சீனா நிறுவனங்களுக்கு தோட்டங்களை வழங்கி வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கமர்த்த திட்டமேதும் உண்டா? என இளைஞர்கள் என்னிடம் கேள்வி எழுப்புகின்றனர்.

தென்னிலங்கையில் உள்ள பல தோட்டங்கள் தற்போது சிறு தோட்ட உரிமையாளர்களுக்கு சொந்தமாக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு உர மானியம், மீள்நடுகை மானியம், வரட்சி நிவாரணம் போன்ற பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றன. அதேபோல மத்திய மலைநாட்டில் உள்ள தோட்டங்களையும் அங்கு தொழில்புரிகின்ற தொழிலாளர்களுக்கு வழங்கி அரசு மானயம் வழங்குமாகவிருந்தால் தேயிலை தொழில்துறையின் அபிவிருத்திக்கு வெளிநாட்டு நிறுவனங்களை பயன்படுத்தும் தேவையேற்படாது' என அவர் சுட்டிக்காட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .