'கயாஸ் தியரி'
10-06-2016 10:27 AM
Comments - 0       Views - 128

எரிமலை 'மக்மாவின்' கொதிப்பு
பூகம்பத்தின் தோற்றுவாய்
சூறைக்காற்றின் சுழலுகை
புயலின் பூச்சாண்டித்தனம்
ஆழி பொங்குதலின் அசுர வேகம்
பிரளய வெள்ளத்தின் பின்முன் அதிர்வுகள்
இன்னும் மனித இயலுமைகளின்
பூட்டுக்களை உடைக்கின்ற
பேரண்டப் பெரு வெளியில்
'அயன்டின' கொள்கையை
அடிசாய்த்துவிடுகின்ற கடவுளின்துகள்
மேற்போந்த அனைத்திற்கும்
ஒரு வண்ணத்துப் பூச்சியின்
சிறகடிப்பிற்கும் தொடர்புண்டாம்.

அசாத்திய திறமை படைத்தனை
எனதருமை வண்ணத்துப் பூச்சியே
இனக்கூறொன்றின் தசைகளில்
உதிரத்தில் எலும்புகளில் நிணத்தில்
மாட்சிமை உயிர்களில்
இன்னோர் இனக்கூறு
கூட்டாஞ்சோறு சமைத்து
கூடியுண்டு மகிழ்ந்த கதை
அறிகுவையோ என தருமை வண்ணத்துப் பூச்சியே
கொத்துக் குண்டுகளின்
சன்னத்துகள்கள் சதைத்துண்டங்களை
கொத்திக் காவிச்சென்ற வேகம்
எத்தனை 'கிலோமீற்றர் பே செகண்ட்'
உணர்தியோ என தருமை வண்ணத்துப் பூச்சியே
உயிர்சுமை மெய்வருத்த
நாடொன்று நத்தையென சுருங்கி
நச்சு ஈறுகளின் கூர்களில்
நசுங்கிக் கிடந்த அந்திமத்தவர்களின்
நெஞ்சதிர்வுகள் எத்தனை 'ரிச்டர்'
தெரிகுவையோ எனதருமை வண்ணத்துப் பூச்சியே.
நிர்வாணிகளின் நிழலைக்கூட
குறிகளால் குத்திப் பிளக்குங்காலை
அன்னவருற்ற வலியின் மின்னுந்தல்
எத்தனை  மெகாவாட்ஸ்
பகர்வையோ எனதருமை வண்ணத்துப் பூச்சியே.
பிரபஞ்ச உயிர்ப்பின் மர்மப்
பள்ளங்களைப் போல
இனக்கூட்டமொன்றின் மேல்
எரிகல் விழுந்த கதை
அம்மானுடர்களைப் போலவே
மரணித்து மாண்டுவிடுமா
சொல்லுவை எனதருமை வண்ணத்துப் பூச்சியே
மனுப்புத்திக்கு புலனாகாத
இயற்கையின் அக புற தெறிவினையை
உன் சிறகடிப்பில் கண்டுணர்த்தும்
அறிவுசால் அறுகாற் சிறுபறவாய்
உனது இறக்கை அதிர்வினால்
அது சொல்லும் 'தியரி' யினால்
என்னினத்தின் மர்ம முடிச்சுக்களை
அவிழ்ப்பாயோ எனதருமை வண்ணத்துப் பூச்சியே

"'கயாஸ் தியரி'" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty