2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அரை பில்லியன் மைற்கல்லை அடைந்தது இன்ஸ்டாகிராம்

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 22 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

புகைப்பட பகிர்வுச் செயலியான இன்ஸ்டாகிராமில், அரை பில்லியனுக்குக்கு மேற்பட்ட பயனர்கள், தற்போது இருப்பதாக இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது. இதில், 300 மில்லியனுக்கு அதிகமானோர், நாளொன்றுக்கு, குறைந்தது ஒரு தடவையாவது இன்ஸ்டாகிராமை பயன்படுத்துவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரு பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கு, கடந்த 2012ஆம் ஆண்டு, 30 மில்லியன் பயனர்களுடன் பேஸ்புக்கினால் வாங்கப்பட்ட இன்ஸ்டாகிராமானது, அது முதல், வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது.

இன்ஸ்டாகிராமின் தகவலின்படி, சராசரியாக, 95 மில்லியன் புகைப்படங்களும் காணொளிகளும் ஒவ்வொருநாளும் பகிரப்படுகின்றன. இந்நிலையில், இன்ஸ்டாகிராமின் வெற்றிக்கு காரணம் கடின உழைப்பே என இன்ஸ்டாகிராமின் இணை நிறுவுநர் Kevin Systrom தெரிவித்துள்ளார்.

தனது ஐந்தரை வருடங்களில், பிரபலங்கள் மற்றும் விளையாட்டு நட்சத்திரங்கள், இன்ஸ்டாகிராமில் நுழைந்தமை காரணமாக, டுவிட்டரை முந்திய இன்ஸ்டாகிராமின் பிரதான போட்டியாளராக 100 மில்லியன் பயனர்களைக் கொண்டிருக்கும் ஸ்னப்சட் விளங்குகின்றது.

2010ஆம் ஆரம்பிக்கப்பட்ட இன்ஸ்டாகிராமை முதல்நாளில் 25,000 பேர் தரவிறக்கியதோடு ஆரம்பித்து, 500 மில்லியன் பயனர்கள் என்ற மைற்கல் வரையில் வளர்ச்சியடைந்தபோதும், கணிசமானளவு சர்ச்சைகளையும் இன்ஸ்டாகிராம் சந்தித்திருந்தது.

2012ஆம் ஆண்டு மாற்றப்பட்ட இன்ஸ்டாகிராமின் சேவை விதிமுறைகள் காரணமாக பயனர்கள் விசனமடைந்திருந்தனர். ஏனெனில், அதில் காணப்பட்ட சொல்லாடலில், பயனர்களால் பதியப்பட்ட புகைப்படங்களுக்கான முழு உரிமையையும் இன்ஸ்டாகிராமுக்கு உண்டு என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக, புகைப்படங்களை, இன்ஸ்டாகிராம் விற்கலாம் என்ற நிலை இருந்தது. எவ்வாறெனினும் மேற்குறிப்பிட்ட மாற்றங்கள், பின்னர் இல்லாமற் செய்யப்பட்டிருந்தன.

தவிர, அண்மைய அறிவிப்பில், புகைப்படங்கள் பதியப்பட்ட வரிசையில் காண்பிக்கப்படாமல், நெறிமுறையொன்றின் படியே காண்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நகர்வானது பலத்த விமர்சனங்களைச் சந்த்திததுடன், விளம்பரங்களை முன்னிலைப்படுத்துவதற்காகவே இவ்வாறு செய்யப்படுகின்றது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போதைய செல்பிக் கலாசாரம், ஒரு விதமான மதமாக இருந்தால், இன்ஸ்டாகிராம், அதன் டிஜிட்டல் மெக்காவாக இருக்கும்.

செவ்வாய்க்கிழமை (21) வெளியிடப்பட்ட அறிவிப்பில், 500 மில்லியன் பயனர்கள் இருக்கின்றார்கள் என்று தெரிவிக்கப்பட்டபோதும், எவ்வகையான பயனர்கள் இருக்கின்றார்கள் என்ற விபரம், பெரிதாக தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. 80 சத வீதமான பயனர்கள், ஐக்கிய அமெரிக்காவுக்கு வெளியே இருக்கின்றனர் என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .