2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இந்தியாவுக்கு வருகிறது அப்பிள்

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 24 , மு.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

திறன்பேசிகளுக்கான வேகமாக வளர்ந்துவரும் சந்தையைக் கொண்டுள்ள இந்தியாவில், அமெரிக்க தொழில்நுட்ப ஜாம்பவானான அப்பிள், சிறிய பிரசன்னத்தையே கொண்டிருக்கின்ற நிலையில், பல மாத தாமதத்துக்கு பின்னர், தனது முதலாவது சில்லறை விற்பனை நிலையங்களை அப்பிள் திறக்கவுள்ளது.

இந்திய அரசாங்கத்தினால் கடந்த திங்கட்கிழமை (20) வெளியிடப்பட்ட புதிய விதிகளின்படி, விற்பனை நிலையங்களை திறக்க விரும்பும் தனித்த வர்த்தக நாமத்தையுடைய பொருட்களை மட்டும் விற்கும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, தயாரிப்பின் 30 சதவீதமானது இந்தியாயாவைச் சேர்ந்ததாகவே இருக்க வேண்டுமென்ற விதியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. குறித்த விதிவிலக்கானது, மூன்று வருடங்களுக்கு இருக்கவுள்ளதுடன், அப்பிளின் ஐபோன்கள் மற்றும் ஐமக்கள் போன்ற நவீன சாதனங்களுக்கு எட்டு வருடங்கள் வரை நீடிக்க கூடியது.

மெய்நிகராக, தனது அனைத்து சாதனங்களையும் சீனாவிலேயே அப்பிள் தயாரிக்கின்ற நிலையில், மேற்படி விதிவிலக்குக்காக பல மாதங்களாக முயற்சிகளை மேற்கொண்டு வந்ததுடன், அப்பிளின் பிரதம நிறைவேற்றதிகாரி திமோதி டி.குக், இந்தியாவுக்கான தனது முதலாவது விஜயத்தை கடந்த மாதம் மேற்கொண்டிருந்த நிலையில், இது தொடர்பில் அரசாங்க அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருந்தார்.

எவ்வாறெனினும், தமது விற்பனை நிலையங்களை திறப்பதுக்கான விண்ணப்பத்துக்கு, இந்திய அரசாங்கத்திடமிருந்து இதுவரையில் பதிலைப் பெற்றிருக்காத அப்பிள், இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்க மறுத்திருந்தது.

இந்தவருடம், 139 மில்லியன் திறன்பேசிகளை இந்தியர்கள் வாங்குவார்கள் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளபோதும், 120 ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கு குறைவான அன்ட்ரொயிட் வகைகளே திறன்பேசிச் சந்தையில் ஆதிக்கம் செலுத்துகின்ற நிலையில், இந்தியாவின் திறன்பேசிச் சந்தையில் சிறிதளவையே கொண்டிருக்கின்ற அப்பிளுக்கு, தனது விற்பனை நிலையங்களை திறப்பதால், பெரியளவில் முன்னேற்றம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முதலாவது கால் நிதியாண்டில், 56 சதவீதத்தால் தமது விற்பனைகள் அதிகரித்துள்ளதாக அப்பிள் தெரிவிப்பதுடன், கடந்த வருடம், மொத்தமாக, இரண்டு மில்லியன் ஐபோன்கள் விற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .