2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

ஒர்லாண்டோவின் மறுபக்கம்: வானவில்லில் கலந்த குருதி

Thipaan   / 2016 ஜூன் 23 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

எந்தச் செய்திக்கும் ஒரு மறுபக்கம் உண்டு. அது அனேகமாக மறுக்கப்பட்ட பக்கமாகவும் அமையும். தொழிநுட்ப வளர்ச்சியும் தகவல் வழங்குநர்களின் மிகையான பெருக்கமும் இணைந்ததால் விளைந்த தகவற் குவியல் யுகத்தில் வாழ்கிறோம். சரியான செய்தியைப் பெறுவது எவ்வாறென்பதே, நம் முன்னுள்ள பெரிய சவால். ஒரு விடயம் பற்றிப் பொதுவெளியில் பேசப்படுவன கட்டாயம் உண்மையாயிருக்கத் தேவையில்லை. ஆனால், அவை ஊடகவெளியின் உதவியால் உண்மையாகின்றன. இந்நிலையில் அவ்வாறான செய்திகளின் மறுபக்கத்தை எழுதுவது சவாலானது. ஒரு செய்தியின் மறுபக்கம் அதிர்ச்சி, வியப்பு, ஏமாற்றம் எனப் பலவித உணர்வுகளைத் தரலாம். மறுபக்கத்தின் வலிமை அதுவே.

கடந்த வாரம், அமெரிக்காவின் ‡புளோரிடா மாநிலத்தின் ஒர்லாண்டோவின் இரவு விடுதியொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, உலகளாவிய கவனம் பெற்றது. இரவு விடுதியொன்றில், ஓமர் மட்டீன் என்ற ஓர் அமெரிக்க இஸ்லாமியர் சுட்டதால், 50 பேர் கொல்லப்பட்டனர் 53 பேர் காயமடைந்தனர். இந் நிகழ்வு 'சமபாலுறவாளர்களின் சந்திப்பிடமாக' அறியப்பட்ட இரவு விடுதியில் நடந்த வேளை, 350க்கு மேற்பட்டோர் ஒரு லத்தீனோ இசை நிகழ்ச்சிக்காகக் கூடியிருந்தனர். கொல்லப்பட்டவர்களிற் பெரும்பாலோர் ஹிஸ்பானியர்கள். அமெரிக்காவின் மிக மோசமான துப்பாக்கிச் சூடாக அறியப்பட்ட இந் நிகழ்வை 'அமெரிக்காவின் ஆன்மாவுக்கெதிரான இஸ்லாத்தின் போர்' என ஊடகங்கள் கூறின.

இக் கொலைகளைச் செய்த 29 வயதினரான ஓமர் மட்டீன் ஆப்கானிஸ்தானிலிருந்து இடம்பெயர்ந்த பெற்றோரின் மகனாவார். இவர் இக் கொலைகளைச் செய்த நோக்கம் தெரியாத நிலையில், அவர் அவசர உதவிக்கு அழைப்பெடுத்துத், தான் ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர் என அறிவித்ததாகச் சொல்லப்படுகிறது. ஐ.எஸ்.ஐ.எஸ் இக்கொலைகளுக்குப் பெருமையுடன் உரிமை கோரியிருக்கிறது.

இவையனைத்தும் அமெரிக்கர்களின் பொதுப்புத்தியில் இஸ்லாமிய வெறுப்பைத் தூண்டவும் உலகநாடுகள் மீது அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு ஆதரவைத் தேடவும் வழிசெய்கின்றன. இச்சம்பவத்தையடுத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமா 'மக்கள் மீதான இந்த படுகொலை ஒரு பயங்கரவாத நடவடிக்கை' என அறிவித்தார். மேலும் 'நமது மக்களைப் பாதுகாக்க, நமது தேசத்தைப் பாதுகாக்க, நம்மை அச்சுறுத்துபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, அமெரிக்கர்களாக, நாம் ஒருமித்து நிற்போம்' என்று அறைகூவினார். இதன் மூலம் ஆக்கிரமிப்புப் பண்புடைய அமெரிக்க வெளியுறவுக் கொள்கைகட்கு உள்நாட்டு ஆதரவைக் கோரினார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய, சொல்லாத சேதிகள் சம்பவம் தொடர்பான இன்னொரு சித்திரத்தை வழங்குகின்றன. அவை, இச்சம்பவத்தின் நோக்கங்களை மற்றுமொரு திசையில் நகர்த்துகின்றன.

கொலையாளி மட்டீனின் தந்தை சித்தீக் மிர் மட்டீன் தனது மகன் சமபாலுறவாளர்களின் உணர்வுகளுக்கு எதிராகக் கடுமையாகக் குரல் கொடுத்திருந்ததாகவும் இந்தாண்டின் தொடக்கத்தில் மியாமியில் இரண்டு ஆண்கள் முத்தமிடுவதைக் கண்டு தனது மகன் கோபித்ததாகவும் தெரிவித்தார்.

சமபாலுறவாளர்கள் என்ற காரணத்துக்காக ஒரு முஸ்லிம் அமெரிக்கர்களைக் கொன்றார் என்பதே இதன் ஒற்றை வரி விளக்கம். இவ் விளக்கம் 2001இல்

நியூ யோர்க்கின் இரட்டைக் கோபுரங்கள் மீதான தாக்குதல்களை அடுத்து அமெரிக்கா முன்னெடுத்த 'பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்துக்கான' கோட்பாட்டுவழி வாதமாக அமைந்த 'நாகரிகங்களுக்கிடையிலான மோதல்' என்ற சாமுவேல் ஹன்டிங்டனின் விளக்கத்துக்குப் பொருந்துகிறது. இக் கோட்பாட்டின்படி, மேற்குலகம் நாகரிகமானது, ஏனையன நாகரிகமற்றன, அதனாலேயே நாகரிகமற்றோர், நாகரிகமானோர் மீது போர் தொடுக்கிறார்கள் எனுமாறான ஒரு படிமம் உருவாகிறது. ஆனாற் கொலையாளியான மட்டீன், இவ் இரவு விடுதியின் நீண்டகால வாடிக்கையாளர் என்பதை அங்கு வந்துபோகும் பலர் தெரிவித்திருக்கின்றனர். மேலும், கெவின் வெஸ்ட் என்பவர் சமபாலுறவாளர்களின் சமூக வலைத்தளமொன்றின் ஊடாகத், தான் கடந்த ஓராண்டுக்கு மேலாக மட்டீனுடன் இடையறாத் தொடர்பில் இருப்பதாகவும் மட்டீனும் ஒரு சமபாலுறவாளர் எனத் தெரிவித்துள்ளார். எனவே இதை வெறுப்பின் அடிப்படையில் நடைபெற்ற தாக்குதலாகக் கொள்ளவியலாது.

மட்டீனின் தந்தை சித்தீக் மட்டீன், அமெரிக்க உயர் மட்டங்களுடன் நெருங்கிய தொடர்புடையவர். அமெரிக்காவில் உள்ள ஆப்கானியர்கள் அமெரிக்காவுக்குச் சார்பாக இயங்க உதவுமாறு அமெரிக்க புலனாய்வு நிறுவனங்களுடன் பணியாற்றிய அவரே தனது மகனின் 'சமபாலுறவு மீதான வெறுப்பு' என்ற கருத்தை முதலில் வெளியிட்டார். அதன் மூலம் இக் கொலைகளுக்கு இலகுவான விளக்கத்தை வழங்க அவர் வழிசெய்தார். மட்டீனைத் தெரிந்தவர்களோ, மட்டீன் அப்படிப்பட்டவர் அல்ல என்கிறார்கள். தந்தை சித்தீக்   தனது மகனைப்பற்றி அப்படியொரு விளக்கத்தை வழங்கக் காரணம் என்ன?

 மட்டீனுடன் பணியாற்றிய சகதொழிலாளி ஒருவர், மட்டீனுக்கு கறுப்பர்களையும் சமபாலுறவாளர்களையும்  யூதர்களையும் பிடிக்காது என்று சொன்னதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால்,

அக்கோரச் சம்பவத்தில் உயிர்பிழைத்த கறுப்பின இளம் பெண் ஒருவர், காயப்பட்ட நிலையில்,தன்னை நெருங்கிய மட்டீன் 'எனக்கு கறுப்பர்களுடன் ஒரு பிரச்சனையும் இல்லை, நீங்கள் ஏலவே மிகத் துன்பங்கட்கு ஆளாகியிருக்கிறீர்கள்' என்று சொன்னதாகக் கூறியிருக்கிறார். இவ் வாக்குமூலம் மட்டீன் பற்றிய சகதொழிலாளியின் கூற்றுடன் முரண்படுகிறது. மொத்தத்தில் மட்டீன் சமபாலுறவு எதிர்பாளர் என்பதையும் அதனாலேயே சமபாலுறவாளர்கள் கூடும் விடுதி மீது தாக்குதல் நடந்தது என்றும் நிறுவும் முயற்சி நடந்துள்ளது.

தனியொருவர் மிகக் குறுகிய காலத்துள் 50 பேரைக் கொன்று 53 பேரைக் காயப்படுத்துவது இயலாத காரியமென இவ்வாறான சூட்டுச் சம்பவங்களை ஆராயும் தடவியல் நிபுணர்கள் தெரிவித்திருக்கின்றனர். கோடி அக்னியூ என்பவர் குறித்த விடுதியில் வேலை செய்யும் தனது சகோதரி குறித்த நாள் இரவு துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகிப் 12 குண்டுகளைத் தாங்கியும் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தாகவும் ஊடகங்கள் ஒரு முக்கிய காரணத்தை மறைப்பதாகவும் தனது பேஸ்புக்கில் எழுதியிருந்தார். கொலையாளி மட்டீனை விட மேலும் இருவர் துப்பாக்கிகளுடன் நடமாடி ஆட்களைச் சுட்டுக் கொல்வதைத் தனது சகோதரி கண்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இப்பதிவைக் குறுகிய நேரத்தில் பேஸ்புக் அகற்றியது. அது ஏனைய சமூக வலைத்தளங்கான டுவிட்டர், ரெட்இட், இன்ஸ்டகிராம் ஆகியனவற்றில் மீள்பதியப்பட்டாலும் அவையும் முற்றாக அழிக்கப்பட்டன. இத் தகவல் கசியாமல் கவனமான கடுங் கண்காணிப்புக்கு உள்ளாகிறது. இத்தகவலின் முக்கியத்துவத்தினும் சமூக வலைத்தளங்களை நடத்துவோர் அது பரவாமற் பார்த்துக் கொண்டமை முக்கியமானது. இத் தகவல் திட்டமிட்ட தணிக்கைக்கு உள்ளாவது ஏன்?

சம்பவத்துக்கு மறுநாள் அமெரிக்கப் பங்குச் சந்தையில் ஆயத உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் கணிசமாக உயர்;ந்தன. ஆயத உற்பத்தி நிறுவனமான ஸ்மித் ரூ வெசனின் பங்குகள் ஒரே நாளில் 8.8 சதவீதம் உயர்ந்தன. இன்னொரு நிறுவனமான ஸ்ற்றம் ரொஜர்ஸின் பங்குகள் 6.9 சதவீதம் அதிகரித்தன. ஒரு கொலை நடந்ததன் விளைவாக ஆயுத உற்பத்தி நிறுவனங்களின் பங்குகளின் விலை ஏன் பங்குச் சந்தையில் உயர வேண்டும்?

கொலையாளி 'கறுப்பு மம்பா' எனப்படுகின்ற MCX AR-15 ரக  இராணுவத் துப்பாக்கியைப் பயன்படுத்தியுள்ளார். அவ்வகைத் துப்பாக்கிகளை உற்பத்தி செய்யும் சிக் சோவர் நிறுவனம் சம்பவத்துக்குச் சில நாட்கள் முன்பு தன் உற்பத்தியை அதிகரிக்க 178 மில்லியன் டொலர்களை வங்கிகளிலிருந்து கடனாகப் பெறறது. அதேவேளை, துப்பாக்கிகளால் ஏற்படும் கொலைகள் காரணமாக, துப்பாக்கிகளை வைத்திருக்கும் அனுமதியை வழங்கக் கூடாது என்ற வாதம் அமெரிக்க மக்கள் மத்தியில் வலுக்கையில், சிக் சோவர் தனது ஆயுத உற்பத்தியை ஏன் அதிகரிக்கிறது?

அமெரிக்காவின் பல மாநிலங்களில் எவரும் சட்டரீதியாக ஆயுதங்களை வாங்கலாம். ஆயுதக் கொள்வனவு பற்றிக் கடுஞ் சட்டமெதும் நடைமுறையில் இல்லை. இவ்வாண்டில் இதுவரை 175 துப்பாக்கிச் சூட்டுச் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. கடந்தாண்டு 372 சூட்டுச் சம்பவங்களில் 475 கொல்லப்பட்டு 1,870 பேர் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் பாதுகாப்புப் பற்றிய அச்சத்தை உருவாக்கியுள்ளது. மக்கள் தம்மை மேலும் மேலும் பாதுகாப்பற்றோராக உணர்விக்கப்படுகிறார்கள். அதன் பயனாக, ஆயுதங்களே ஆயுதங்களிலிருந்து பாதுகாப்பைத் தரும் என நம்ப வைக்கப்பட்டு, மக்கள் ஒருபுறம் தனிப்பட்ட முறையில் ஆயுதக் கொள்வனவுக்குத் தூண்டப்படுகிறார்கள். மறுபுறம் தமது பாதுகாப்புக்குத் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் துணையை நாடவேண்டியுள்ளதாக எண்ணுகிறார்கள். இவ்வாறு ஆயுத விற்பனையும் தனியார் பாதுகாப்புக் கம்பெனிகளின் சேவைக்கான கோரிக்கையும் அதிகரிக்கின்றன.

கொலையாளியான ஓமர் மட்டீன் உலகின் இரண்டாவது பெரிய தனியார் பாதுகாப்பு நிறுவனமான G4S நிறுவனப் பணியாளராவார். அந் நிறுவனம் உலகின் ஐந்து கண்டங்களில் 120 நாடுகளில் 625,000 பணியாட்களைக் பாதுகாப்புக் கடமைகளில் அமர்த்தியுள்ளது. அது நாட்டு அரசாங்கங்கட்கும் நிறுவனங்கட்கும் பாதுகாப்பு வழங்குகிறது. அமெரிக்க, பிரித்தானிய, இஸ்ரேலிய, அவுஸ்திரேலிய அரசாங்கங்களும் அப்பிள், கிரைஸ்லர், பாங்க் ஒவ் அமெரிக்கா ஆகிய தனியார் நிறுவனங்களும் அவற்றுட் குறிப்பிடத்தக்கவை.

G4S நிறுவனத்தில் 2007ஆம் ஆண்டுமுதல் பணியாற்றிய ஓமர் மட்டீன் அமெரிக்க உள்ளகப் பாதுகாப்புத் துறை, அமெரிக்க சுங்கம், எல்லைப் பாதுகாப்பு ஆகியவற்றில் அமெரிக்க அரசால் வேலைக்கமர்த்தப்பட்ட பாதுகாப்புப் பணியாளருமாவார். உலகில் இலாபம் கொழிக்கும் துறைகளில் ஒன்று தனியார் பாதுகாப்புத் துறையாகும். கடந்த ஒரு தசாப்தத்தில் இத் துறை பலமடங்கு விருத்தியடைந்துள்ளது. ஆண்டொன்றுக்கு 200 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் மேலாகத் தனியார் பாதுகாப்புக்குச் செலவாகிறது. இத் துறையில் 15 மில்லியன் பேர் உலகெங்கும் பணிபுரிகிறார்கள். உலகம் மேலும் பாதுகாப்பற்றதாவதால் தனியார் பாதுகாப்புச் செலவு ஆண்டுதோறும் பன்மடங்கு அதிகரிக்கும்.

தனியார் பாதுகாப்புக் கம்பெனிகள் இன்று உலகின் புதிய வியாபாரமாக வியாபித்துள்ளன. அதன் விளைவாக இன்று யுத்தமும் தனியார்மயமாகியுள்ளது. ஒர்லாண்டடோவில் நடந்த படுகொலைகளின் உண்மையான பின்னணி என்றுமே தெரியாமற் போகலாம். ஆனால் இந் நிகழ்வு, சொல்லிய செய்திகளை விட சொல்லாத செய்திகளின் முக்கியத்தை மீண்டுமொருமுறை உணர்த்துகின்றன.

நாம் பார்க்கும் பக்கங்களை விடப் பாராத மறுபக்கங்கள் உண்மையானவையும் சுவாரசியமானவையுமாம்.


You May Also Like

  Comments - 0

  • JN Thursday, 23 June 2016 10:57 PM

    Good and interesting analysis.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X