2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

நிலையான அமைதிக்கு நிரந்தரச் சவால்

Thipaan   / 2016 ஜூன் 25 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு, தென்னிலங்கை சிங்களத் தேசியவாதக் கட்சிகளையும், பொறுப்புக்கூறல் கடப்பாட்டை நிறைவேற்றுவதற்கு, இராணுவத் தரப்பின் எதிர்ப்பையும், ஒரு நொண்டிச்சாட்டாக அரசாங்கம் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறது. போர் முடிவுக்கு வந்து ஏழு ஆண்டுகளாகியுள்ள நிலையில், புதிய அரசாங்கம் கூட ஒன்றரை ஆண்டுகளைக் கடந்து விட்ட நிலையிலும், இந்த இரண்டு விவகாரங்களும் தீர்வு காணப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த வாரம் பி.பி.சிக்கு கருத்து வெளியிட்டிருந்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தெற்கிலுள்ள தேசியவாதக் கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு அஞ்சினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்று குறிப்பிட்டிருந்தார். அதுபோலவே, சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய ஒரு போர்க்குற்ற விசாரணையை ஆரம்பித்தால், இராணுவத்துக்குள் இருந்து எதிர்ப்புக் கிளம்பும் என்றும், இராணுவத்தின் ஒத்துழைப்புக் கிடைக்காது என்றும் இராணுவச் சதி ஒன்று ஏற்படலாம் என்றும் அரசாங்கம் அஞ்சுவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்மக்களின் இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காணப்படுதலும் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறுதலும் இல்லாமல், நிலையான அமைதியை இலங்கைத் தீவினால் ஒருபோதும் அடைய முடியாது. தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு ஒன்று வழங்கப்பட்டால் தான் நிலையான அமைதி நாட்டில் எற்படும் என்பதை சர்வதேச சமூகமும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. அரசாங்கமும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. அண்மையில் கூட, தமிழ் மக்களின் கையில் தான் இலங்கையின் எதிர்காலம் தங்கியிருக்கிறது என்று ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன கூடத் தெரிவித்திருந்தார். தமிழ் மக்களைப் புறக்கணித்தோ, அவர்களின் அபிலாஷைகளை உதாசீனம் செய்து கொண்டோ, இலங்கைத் தீவின் எதிர்காலம் பற்றியே சிந்திக்க முடியாது என்பதே அவரது கருத்தாக இருந்தது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விடயத்தில் சில முன்னேற்றகரமான நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தாலும், தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற கூடுதல் சுயாட்சி அதிகாரங்களைக் கொண்ட ஒரு அரசியல்தீர்வுக்கு இணங்கும் விடயத்தில் அவரும் கூட தொலைதூரத்தில் தான் நிற்கிறார்.

தமிழர் பிரச்சினைக்கான அரசியல்தீர்வு விடயத்தில், எப்போதுமே ஆளும்கட்சியில் இருப்பவர்கள் எதிர்க்கட்சியைக் காரணம் காட்டி தமது பொறுப்புகளைத் தட்டிக்கழிப்பது வழக்கம். இப்போதும் கூட, அந்த வகையில் தான், சிங்களத் தேசியவாதக் கட்சிகளின் எதிர்ப்பைக் காரணம் காட்டி, அரசியல்தீர்வு விடயத்தில் அவசரப்படாத கொள்கை ஒன்றை அரசாங்கம் கடைப்பிடித்து வருகிறது. அரசியலமைப்பு மாற்றத்துக்கான முயற்சிகளுக்கு அப்பால், இனப்பிரச்சினைத் தீர்வுக்கான எந்த முயற்சிகளையும் அரசாங்கம் முன்னெடுக்காதிருக்கிறது. அவசரப்பட்டால், சிங்களத் தேசியவாத சக்திகளின் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும், அதனால், இந்த முயற்சிகள் பாதிக்கப்படும் என்றும் காரணத்தைக் கூறி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாயையும் அரசாங்கம் வெற்றிகரமாக அடைத்து வைத்திருக்கிறது. சமஷ்டி பற்றிய கோரிக்கைகள் அண்மையில் தீவிரமாக எழுப்பப்பட்ட போது, சிங்களத் தேசியவாத சக்திகளின் எதிர்ப்பைக் காரணம் காட்டியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் மக்களின் வாயை அடைத்தது.

ஆனால், இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் அரசாங்கமும் கூட்டமைப்பும் எந்தளவு தூரத்துக்கு முன்னகர்ந்துள்ளன என்று பார்த்தால், ஏமாற்றமே மிஞ்சும். ஏனென்றால், தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்கும் விடயத்தில் இரண்டு தரப்புக்களுமே ஓர் அடி கூட எடுத்து வைக்கவில்லை என்பதே உண்மையான நிலை. தென்னிலங்கையில் உள்ள சிங்களத் தேசியவாத சக்திகள் எப்போதும், இதே போக்கில் தான் இருக்கப் போகின்றன. அவர்கள் தமது நிலையை மாற்றிக் கொள்வார்கள் என்று எதிர்பார்த்தால், தமிழர்களின் நிலை இலவுகாத்த கிளியின் கதையாகிவிடும். தந்தை செல்வாவுடன் செய்து கொண்ட உடன்பாடுகளை பண்டாரநாயக்கவும் டட்லி சேனநாயக்கவும் முறித்துக் கொண்ட போதும், அதன் பின்னணியில் சிங்களத் தேசியவாதிகள் தான் இருந்தனர்.

அதற்குப் பின்னர் இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் ஒவ்வொன்றையும் எதிர்த்து முறியடிப்பதிலும், ஏதோ சிங்களத் தேசியவாத அமைப்பொன்று அல்லது நபர், காரணமாக இருந்ததே வரலாறாக உள்ளது. சிங்களத் தேசியவாத அமைப்புகளுக்கு அஞ்சி, தமிழர் பிரச்சினையைத் தீர்க்க காலத்தை இழுத்தடித்தால், ஒருபோதும் தீர்க்கப்படக்கூடிய ஒன்றாக அது இருக்கப் போவதில்லை. துணிச்சல்மிக்க அரசியல் தலைமைத்துவம் ஒன்றினால், தமிழர் பிரச்சினையை தற்துணிவுடன் தீர்க்க முடியும். அதற்கான வாய்ப்புகளைக் கொண்ட சிங்கள அரசியல் தலைமைகள் அவ்வப்போது உருவாகாமல் இல்லை.

அவர்களுக்கு தமிழர் பிரச்சினையைத் தீர்க்கும் தற்துணிவு இருந்தாலும், அதனைச் செய்வதற்கான அரசியல் விருப்பு அவர்களுக்கு இருந்ததில்லை. அதனால் மறுதரப்பைக் கைகாட்டிக் காலத்தைக் கடத்தி விட்டுப்போவதே அவர்களின் வாடிக்கையாக மாறியிருக்கிறது. அதேபோன்று தான், போர்க்குற்ற விசாரணை விவகாரத்திலும் நடந்து கொண்டிருக்கிறது.  வெளிநாட்டு மற்றும் கொமன்வெல்த் நீதிபதிகள், சட்டத்தரணிகள், வழக்குத்தொடுநர்களின் பங்களிப்புடன், மீறல்கள் குறித்து விசாரிக்கும் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்துவதாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் அரசாங்கம் இணங்கியிருந்தது.

அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதாக மட்டும் அரசாங்கம் ஒப்புக்கொள்ளவில்லை. அதற்கும் மேலாகச் சென்று அந்தத் தீர்மானத்தை முன்வைக்கும் இணை அனுசரணையாளராகவே அரசாங்கம் மாறியிருந்தது. எனினும், வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணைக் குழுவை அமைப்பதில்லை என்பதில் அரசாங்கம் திட்டவட்டமாக இருக்கிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டோர் இந்த விடயத்தில் தெளிவான முடிவை அறிவித்திருக்கின்றனர்.

போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை ஒன்றே வேண்டும் என்று வலியுறுத்தி வந்த தமிழர் தரப்பு, வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய ஒரு கலப்பு விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்படும் என்று கொடுத்த வாக்குறுதியை நம்பியே, தமது நிலைப்பாட்டைத் தளர்த்தியது. இந்த நிலைப்பாட்டுக்குத் தமிழர் தரப்பை இணங்க வைத்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் கூட, வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமளிக்க முடியாது என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு எதிராக வாய்திறக்க முடியாத நிலை காணப்படுகிறது. வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணைப் பொறிமுறை அமைக்கப்பட வேண்டும் என்ற அமெரிக்காவின் நிலைப்பாடு மாறவில்லை என்பதை, இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச்செயலர் நிஷா பிஸ்வால், உறுதிப்படுத்தியிருந்தாலும், இந்த நிலைப்பாட்டுக்கு அழுத்தம் கொடுப்பதற்கு அமெரிக்கா தயங்கி வருகிறது.

இலங்கையின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளி என்ற வகையில், ஜெனீவாத் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துமாறு இலங்கைக்கு அழுத்தங்களைக் கொடுக்கின்ற வாய்ப்பினை அமெரிக்கா கொண்டுள்ளதாகவும் ஆனால் அந்த வாய்ப்பைப் பயன்படுத்த தவறியிருப்பதாகவும் ஒக்லன்ட் நிறுவகம் அண்மையில் கூறியிருந்தது. வெளிநாட்டு நீதிபதிகளை போர்க்குற்ற விசாரணையில் உள்ளடக்குவதற்கு அரசாங்கம் மறுப்பதற்கு வெளிப்படையான காரணங்கள் கூறப்படாவிடினும், இராணுவத்தினர் மத்தியில் உள்ள எதிர்ப்பே அதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

இராணுவத்தினருக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டால், இராணுவச் சதி ஏற்படலாம், இராணுவத்தினர் ஒத்துழைக்க மறுக்கலாம் என்பன போன்ற காரணங்கள் சொல்லப்படுகின்றன.

தற்போதைய அரசாங்கத்துக்கு இராணுவத்துக்குள் செல்வாக்குக் குறைவு என்பதில் சந்தேகமில்லை. இதனால், இராணுவத்துடன் பகைத்துக் கொள்ளாமல் நகர்வுகளை முன்னெடுக்க அரசாங்கம் முயல்கிறது. எவ்வாறாயினும், போர்க்குற்ற விசாரணை என்று வரும் போது, இராணுவத்துக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் கடுமையான முறுகல் ஒன்று ஏற்பட வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன. ஏற்கெனவே, பலாலி படைத்தளத்தில், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன், மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே முரண்பட்டிருந்தார்.

அதைவிட, கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக முப்படைத் தளபதிகளும் விதித்த தடை உத்தரவு, அவர்களின் அதிகார நிலையை வெளிப்படுத்தியது. இப்படியான சூழலில், இராணுவத்தினருக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகளை, முடியுமானவரைக்கும் அரசாங்கம் இழுத்தடித்து வருகிறது. இராணுவத்தினரின் எதிர்ப்புக்கு அஞ்சியே அரசாங்கம் போர்க்குற்ற விசாரணைகளை முன்னெடுப்பதற்கு தயக்கம் காட்டுகிறது. இந்தத் தயக்கம், எதுவரை நீடிக்கப் போகிறது என்ற கேள்வி இருக்கிறது. ஏனென்றால், போர்க்குற்ற விசாரணைகளை நீண்டகாலத்துக்கு அரசாங்கத்தினால் இழுத்தடிக்க முடியாது. எனவே, படையினர் நோகாத வகையில் அதனை முன்னெடுப்பதற்கே அரசாங்கம் முயல்கிறது. படையினருக்கு நோகாத வகையில், ஒரு விசாரணைகளை முன்னெடுக்கும் போது, தமிழர் தரப்புக்கு நம்பிக்கை அளிக்கும் ஒன்றாக அது இருக்காது.

பாதிக்கப்பட்ட தரப்பினரான தமிழர்கள் திருப்திப்படாத எந்தவொரு பொறுப்புக்கூறல் முயற்யும் வெற்றி பெறாது என்பது, சர்வதேச சமூகத்தினால் உறுதிபடக் கூறப்பட்டுள்ளது. இந்தக் கட்டத்தில், பாதிக்கப்பட்ட தரப்பினரான தமிழர்களுக்கு அரசியல்தீர்வு மூலமும் பொறுப்புக்கூறல் மூலமும், நம்பிக்கையையும் திருப்தியையும் ஏற்படுத்த முடியாது போனால், அது இலங்கையின் நிலையான அமைதிக்கு நிரந்தரச் சவாலாகவே இருக்கும். அத்தகையதொரு நிலையை நோக்கித் தான் தற்போது நாடு முன்னகர்ந்து வருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X