2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையிலேயே அமைக்கப்பட வேண்டும்

Niroshini   / 2016 ஜூன் 25 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

“வட மாகாண மக்களுக்கு கிடைக்க வேண்டிய பொருளாதார மத்திய நிலையத்தை சில அமைச்சர்கள் வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல முற்படுகின்றார்கள். இதனை வட மாகாண முதலமைச்சருடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தி வவுனியா ஓமந்தையில் அமைப்பதற்கான முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும்” என முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

“பொருளாதார மத்திய நிலையம் வட மாகாணத்துக்கு அதியாவசியமான விடயமாக கருதப்படுகின்றது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருளாதார சந்தையினை ஏற்படுத்தி தரக் கூடிய இத் திட்டத்தின் தேவையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

வடமாகாண மக்களுக்கு கிடைத்திருக்கும் இந்த அரிய சந்தர்ப்பத்தை எமக்குள் இருக்கும் பிளவுகளினால் வேறு பகுதிகளுக்கு தாரைவார்த்து விடக் கூடாது. இவ்விடயத்தில் அமைச்சர் ஹரிசன் மற்றும் ரிஷாட் பதியுதீன் போன்றவர்கள் மாற்று திட்டத்தை முன்வைத்து குழப்பியடிக்கின்றார்கள். இவர்களின் செயற்பாட்டினால் மதவாச்சியில் பொருளாதார மையம் அமையக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கின்றது. இதனை நாம் வெறுமனே கைகட்டி பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

இன்று பொருளாதார மத்திய நிலையம் எமது மக்கள் மத்தியிலே அதுவும் எமக்கு தேவையான இடத்திலே அமைக்கப்பட வேண்டும் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேசி உறுதி செய்ய வேண்டும். வடமாகாண முதலமைச்சரினால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி வவுனியா வடக்கு ஓமந்தையில் இவ் நிலையம் அமைக்கப்படுவதே சாலச் சிறந்தது.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இவ்விடயத்தில் தலையிட்டு தமக்கு தேவையானவற்றை செய்து கொள்வதற்கு ஒரு போதும் இடமளிக்கக்கூடாது. வட மாகாணத்தில் அதிகூடிய பெரும்பான்மையாக வாழும் தமிழ் மக்களின் நலனில் பிரிதொருவர் கை வைக்க முயல்வதை அனுமதிக்க முடியாது.

ஆகவே, இவ்விடயத்தில் வடமாகாண முதலமைச்சருடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஒருமித்த கருத்துடன் செயற்பட வேண்டும்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X