2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

பொருளாதார மையம் தொடர்பில் வடக்கில் பொதுகருத்து ஏற்பட வேண்டும்

Niroshini   / 2016 ஜூன் 25 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

“வடமாகாணத்துக்கான பொருளாதார மையம் எங்கே அமைய வேண்டும் என்பதில் வடமாகாண முதல்வர், வடமாகாண நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோர் மத்தியில் ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும். அதை வடமாகாண முதல்வர் சி. வி. விக்னேஸ்வரன் மூலமாக அதிகாரப்பூர்வமாக அறிந்துக்கொள்ள அரசாங்கம் காத்து கொண்டு இருக்கிறது” என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

வடமாகாணத்துக்கு என அமைக்கப்படவுள்ள பொருளாதார மையம், வேறு மாகாணங்களுக்கு கொண்டு செல்லப்பட முயற்சி எடுக்கப்படுமானால், அதை தமிழ் முற்போக்கு கூட்டணி கடுமையாக எதிர்க்கும். அமைச்சரவையில் எல்லா அமைச்சுகள் தொடர்பாகவும் அனைத்து அமைச்சர்களுக்கும் கூட்டு பொறுப்பு இருக்கின்றது.

இடம் பற்றிய இறுதி முடிவு எடுக்கப்பட முன் ஏன் இது தொடர்பில் அமைச்சவை பத்திரம் கொண்டு வந்தீர்கள் என நான் துறைசார் அமைச்சர் பி. ஹரிசனிடம் கேட்டேன். இந்த பிரச்சினை கிளறப்பட்டு ஒரு தீர்வை நோக்கி நகரவேண்டும் என்பதற்காகவே, கடந்த அமைச்சரவையில்  தான் இது  தொடர்பாக அமைச்சரவை பத்திரம் கொண்டு வந்ததாகவும் இந்த வேளையில், இந்த அமைச்சரவை பத்திரத்தை ஏன் கொண்டு வந்தீர்கள் என பிரதமரும்  தன்னிடம் கேள்வி எழுப்பியதாகவும் அமைச்சர் பி. ஹரிசன் என்னிடம் கூறியுள்ளார்.    

எனவே, வட மாகாணத்து உழைப்பாளர்களின் நலன் கருதி உருவாக்கப்பட உள்ள இந்த பொருளாதார மையத்தை வேறு இடங்களுக்கு எவரும் காவிக்கொண்டு செல்லும் முயற்சி அமைச்சரவையில் எடுக்கப்படுமானால் அதை நானும் அமைச்சர் திகாம்பரமும் அமைச்சரவையில் அனுமதிக்க மாட்டோம்.

வடமாகாணத்துக்கான பொருளாதார மையம் எங்கே அமைய வேண்டும் என்பதை வடமாகாணத்து மக்கள் பிரதிநிதிகள்தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால், வடமாகாணத்து மக்கள் பிரதிநிதிகள் மத்தியில் ஒருமித்த கருத்து இல்லாததுதான் இப்போது பிரச்சினையாக இருக்கின்றது. இத்தகைய ஒரு சூழலைத்தான் வெளியில் இருப்போர் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

இப்போது இந்த நிதியாண்டின் ஆறாவது மாதம் நடக்கின்றது. எனவே, இனியும் இதை தாமதிப்பது உசிதமானது அல்ல.

ஓமந்தை, தாண்டிக்குளம், வவுனியா நகரம் என்ற ஏதாவது ஒரு இடம் தீர்மானிக்கப்பட வேண்டும்.  வடமாகாணத்துக்கான பொருளாதார மையம் எங்கே அமைய வேண்டும் என்பதை வடமாகாணத்து மக்கள் பிரதிநிதிகள்தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால், வடமாகாணத்து மக்கள் பிரதிநிதிகள் மத்தியில் ஒருமித்த கருத்து இல்லாததுதான் இப்போது பிரச்சினையாக இருக்கின்றது. இத்தகைய ஒரு சூழலைத்தான் வெளியில் இருப்போர் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

இந்த மையம் ஓமந்தையில் அமைவதையே தான் விரும்புவதாகவும் ஆனால் இந்த விஷயம் இழுத்தடிக்கபட்டால்இ இம்மையம் வேறு மாகாணங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு விடும் என்ற அச்சம் காரணமாகவே வடமாகாணசபை உறுப்பினர்கள் வேறு ஒரு முடிவுக்கு தள்ளப்பட்டார்கள் என முதலமைச்சர் என்னிடம் கூறியுள்ளார்.

ஆனால், கூட்டமைப்பு எம்.பி.க்கள் சிலரும் மாற்று கருத்தை என்னிடம் தெரிவித்தார்கள் என நான் முதல்வரிடம் அமைச்சரவையின் போதே கூறினேன். அதை தான் அறிந்து இருக்கவில்லை என அவர் என்னிடம் கூறினார்.

வடமாகாணத்துக்கு பொருத்து வீடுகள் பொருத்தமானவை அல்ல என முதல்வர் ஆரம்பத்திலேயே கூறினார். அதை அப்போது பலர் ஏற்றுக்கொள்ளவில்லை. சிலர் பொருத்து வீட்டு திட்டத்தை நியாயப்படுத்த முயன்றார்கள். ஆனால், இன்று முதல்வரின் கருத்து ஜனாதிபதியாலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஆகவே, முதல்வரின் கருத்துக்கு உரிய அவதானத்தை தந்து, உரிய முடிவு கூடிய விரைவில் எடுக்கப்படவேண்டும்” எனவும் குறிப்பிப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .