2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சுவரொட்டிக்கு, கத்தோலிக்க ஒன்றியம் கண்டனம்

Gavitha   / 2016 ஜூன் 26 , மு.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

'மன்னார் ஆயரையும் கூட்டமைப்பின் கிறிஸ்தவ எம்பிக்களையும் கண்டிக்கின்றோம்' என்ற தலைப்பில், 'திருக்கேதீஸ்வர ஆலயத்தில் அத்துமீறி வைக்கப்பட்டுள்ள மாதா சிலையை அகற்றுங்கள்' என்று அச்சிடப்பட்டுள்ள சுவரொட்டிகள், கொழும்பு, கண்டி மற்றும் வவுனியா உள்ளிட்ட பிரதான பகுதிகளில் ஒட்டப்பட்டு வருவதை, வன்மையாக கண்டிப்பதாக, மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இந்த ஒன்றியம் சார்பில், அதன் செயலாளர் தே.பி.சிந்தாத்துரையால் சனிக்கிழமை (25) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'எமது கத்தோலிக்க திருமறையானது, கி.பி. 1500 ஆண்டுகள் அளவில் கீழைப் பிரதேச நாடுகளில் மக்கள் மத்தியில் ஆழமாக வேறூண்டப்பட்டது. ஆரம்ப காலம் முதலே, மன்னார் மறைமாவட்டத்தில் கத்தோலிக்க மறை தோன்றியதால், மன்னார் பிரதேசத்தின் மக்கள் ஆதிக் கிறீஸ்தவர்களாகியதுடன் கத்தோலிக்கர்களின் முன்னோடிகளாகவும் விளங்கினர்.

இதன் காரணமாக கத்தோலிக்கத் திருச்சபையால் மன்னார் தீவிலும் தீவை அண்டிய பெரு நிலப்பரப்பிலும் 500 ஆண்டுகளுக்கு முன் கத்தோலிக்க தேவாலயங்கள் அமைக்கப்பட்டன. இவற்றுள் மிகப் பழமை வாய்ந்த திருத்தலங்களில் ஒன்றாக மாந்தை மாதா கோவில் உள்ளது. இங்கு 1590இல் தேவதாயாரின் திருச்சொரூபம் ஸ்தாபிக்கப்பட்டு கத்தோலிக்கர்களின் வணக்க ஸ்தலமாக பிரபல்யம் அடைந்தது.

ஆயினும் பின்னர் இப்பிரதேசத்தை கைப்பற்றிய ஒல்லாந்தர், கத்தோலிக்க தேவாலயங்களை சேதமாக்கி கத்தோலிக்கர்களையும் துன்புறுத்தினர். இந்நடவடிக்கையால் மக்கள் ஒன்று சேர்ந்து மாந்தையில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த தேவதாயின் திருச்சொரூபத்தை எடுத்துச் சென்று பாதுகாப்பாக மடுத்தலத்தில் ஸ்தாபித்தனர். இதன் பின்னர் மீண்டும் அதே இடத்தில் 1949இல் சிறிய ஆலயம் கட்டியெழுப்பப்பட்டது.

இந்நிலையில் இவ்விடத்தில் ஆலயம் எழுப்பப்பட்டதை பொறுக்கமுடியாத இந்து சம்மேளனம் தமது உயர்மட்ட செல்வாக்கைப் பயன்படுத்தி எமது புனித மறையை அழித்துவிட முயல்கிறார்கள்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 'இதன் ஒரு பகுதியாக 500 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்று சிறப்புப் பெற்ற மாந்தைமாதா ஆலயத்துக்கு சுமார் 3 ஏக்கர் அளவிலான ஒரு சிறு காணித்துண்டை,  அண்மையில் மன்னார் ஆயருக்கு வழங்க, காணி சீர்திருத்த ஆணையாளர் உத்தரவிட்டிருந்தார். உரிய சட்டநடவடிக்கைகளை மேற்கொண்டு அரச வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட பின்னர், இந்த உத்தரவை எதிர்த்து இந்து சம்மேளனம் என்னும் அமைப்பு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

'சிவ பூமி மன்னாரை மறைபூமி ஆக்காதே' போன்ற சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர். இச்செயற்பாடானது, அப்பாவி இந்துமக்கள் மத்தியில் மத துவேசத்தை தூண்டும் முயற்சியாக காணப்படுவதால் இதனை வன்மையாக கண்டிக்கின்றோம்' என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'எனவே மடு அன்னையின் பூர்வீக வதிவிடமாகிய மாந்தை மாதா ஆலயத்தை காத்து பராமரித்து வருவது எமது கடமை என்பதை வற்புறுத்திக் கூறுகின்றோம். மற்றையோரின் உரிமையை அபகரிக்க நாம் முயலவில்லை. எமது உரிமைகளை பாதுகாக்க மட்டுமே நாம் செயற்படுகின்றோம் என்பதை சம்மந்தப்பட்ட சகோதரர்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றோம்' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X