2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

'வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணையும் சந்தர்ப்பத்தில் சம அந்தஸ்துள்ளதாக அமைய வேண்டும்'

Suganthini Ratnam   / 2016 ஜூன் 26 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணையும் சந்தர்ப்பம் ஏற்படுமாயின், தமிழ் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு மாகாணமும் முஸ்லிம் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு மாகாணமும் சம அந்தஸ்துள்ளதாக அமைய வேண்டும் என்பதே தமது நிலைப்பாடாகும் என தேசிய காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

இது தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை அவர் விடுத்துள்ள அறிக்கையில், 'புதிய அரசியலமைப்பு தீர்வுத்திட்டம் தொடர்பாக பல்வேறு  யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மூன்று தசாப்தகால யுத்தத்தால் பாதிக்கப்பட்டு, நியாயமான அதிகாரப்பகிர்வைக் கோரி நிற்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்கள் மத்தியில் வடமாகாண சபை மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து அரசியல் தீர்வு, புதிய அரசியலமைப்பு யாப்புக்கான முன்மொழிவுகளை வடமாகாண சபையில் சமர்ப்பித்து அம்முன்மொழிவுகள் மீதான விவாதம் மாகாண சபையில் முழுமை பெற்று, தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டு வடமாகாண சபையால், மத்திய அரசாங்கத்துக்கும்  சர்வதேசத்துக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

வடமாகாண முதலமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைகளில் மலையக மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் தன்னாட்சிப் பிராந்தியங்கள் வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடமாகாண முதலமைச்சர் முஸ்லிம் சமூகத்திடமோ, முஸ்லிம் அரசியல் தலைவர்களிடமோ எவ்வித ஆலோசனையும் பெறாமல், தன்னிச்சையாக முஸ்லிம் சமூகம் தொடர்பான தீர்மானத்துக்கு வந்தமை தொடர்பில் முஸ்லிம் சமூகமும் முஸ்லிம் அரசியல் கட்சிகளும் கவலையடைந்துள்ளன' என்றார்.
'தமிழ்;த் தேசியக் கூட்டமைப்பினர் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்திருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் முஸ்லிம்கள் கிழக்கு மாகாணம், வடக்கு மாகாணத்துடன் இணையக்கூடாது என்ற நிலைப்பாட்டிலும் உள்ளனர்.

எது எப்படியிருந்தாலும், வடமாகாண சபை வடமாகாண மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கக்கூடிய வகையில் யோசனைகளை சமர்ப்பித்துள்ளது. இதேவேளை, கிழக்கு மாகாண சபையும் மக்கள் பிரதிநிதிகளும் கிழக்கு மாகாண மக்களின் உணர்வுகளை யோசனையாக தயாரிப்பதற்கு இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கிழக்கு மாகாணத்தில் மூவின மக்கள் வாழ்கின்றனர். அச்சமூகங்கள்; ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் கிழக்கு மாகாண சபை அதனுடைய முன்மொழிவுகளை தயாரித்து, நியாயமான தீர்வுத்திட்ட முன்மொழிவுகளை கிழக்கு மாகாண சபையில் நிறைவேற்ற வேண்டும். இம்முன்மொழிவுகள் எமது நாட்டில் வாழ்கின்ற பல்லின மக்கள் மத்தியில் ஐக்கியம், அமைதி, பரஸ்பர புரிந்துணர்வை கட்டியெழுப்பக்கூடிய வகையில் அமைய வேண்டும்' எனவும் அவர் மேலும் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .