2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

'அரசியலில் அதிகாரம் என்பது தொடர்ந்தேர்ச்சியாக இருப்பதல்ல'

Suganthini Ratnam   / 2016 ஜூன் 26 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

'அரசியலில் அதிகாரம் என்பது ஒருவருக்கு தொடர்ந்தேர்ச்சியாக இருக்கும் விடயம் அல்ல. அரசியல் என்பதும் அதிகாரம் என்பதும் அந்தஸ்து என்பதும் குறுகிய காலத்துக்குள் இருக்கின்ற விடயம். இது முதலமைச்சருக்கும் பொருந்தும் அமீர் அலிக்கும் பொருந்தும் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பொருந்தும். எனவே அதிகாரம் இருக்கின்றது என்ற மமதையில் ஆடி ஓடி நாங்கள் எங்களைப் படைத்த இறைவனை மறந்து நடந்தவைகளை மறந்து செயற்பட்டு கேவலம் கெட்ட அரசியல்வாதியாக நான் இருக்க மாட்டேன்' என கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவில் உள்ள ஹிஜ்ரா நகர் மற்றும் அரபா நகர் கிராமங்களில் தார் வீதி அமைப்பதற்கான வேலைத்திட்டத்தை நேற்று சனிக்கிழமை மாலை ஆரம்பித்துவைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'ஒரு நல்ல அரசியல்வாதியாக இந்த மாவட்டத்தில் உள்ள முஸ்லிம், தமிழ் மற்றும் சிங்கள மக்கள் மத்தியில் நம்பிக்கையோடு இருக்கின்ற ஒரு அரசியல்வாதி தொடர்ந்து மக்களின் நம்பிக்கையோடு இருந்து விட்டு மரணிக்க வேண்டும் என்பதுதான் எனது பிரார்த்தனை.

வெறுமனே பந்தா காட்ட வேண்டும் என்பதற்காக நாங்கள் அரசியல் செய்வதற்கு தயாரில்லை. தற்போது ஏறாவூர் மற்றும் ஓட்டமாவடி பிரதேசத்தில் புதிய வீடுகளை கட்டுவதற்கு யாரும் தயாரில்லை. வீடுகளை கட்டி முடித்ததும் கிழக்கு மாகாண முதலமைச்சர் எனது மாகாணத்திற்குள் கட்டப்பட்டது. அதை நான்தான் திறந்து வைக்க வேண்டும் என்று சொல்லிவிடுவார் என்ற அச்சத்தில் இருக்கின்றார்கள். அடுத்த மாகாண சபை தேர்தல் வந்த பிறகு அவருக்கு நிச்சயமாக இந்த சந்தர்ப்பம் கிடைக்கப்போவதில்லை. அப்போதுதான் புதிய வீடுகளைக்கட்டுவார்கள் என்று நினைக்கின்றேன்.

கிழக்கு மாகாண முதலமைச்சரின் இவ்வாறான செயற்பாடுகள் கவலையாகவுள்ளது. யாரும் செய்யும் அபிவிருத்தி திட்டத்திற்கு தனது பெயரை ஏன் பதிக்க விரும்புகின்றார் என்று தெரியவில்லை. சில தினங்களுக்கு முன் ஓட்டமாவடியில் திறந்து வைக்கப்பட்ட மீன் சந்தை கட்டடத் தொகுதி எவ்வாறு அமைய வேண்டும் என்று அழகு பார்த்து கட்டியது நான் திறந்து வைக்க வேண்டும் என்பதற்காகவல்ல. பிரதேசத்திலே இருக்கின்ற மக்கள் பயன் பெற வேண்டும் என்பதற்காகத்தான் அதை செய்தேன். அதனை கிழக்கு மாகாண முதலமைச்சர் பின்வழியால் வந்து திறந்து வைப்பது நல்லதல்ல. முதலமைச்சரைப் பொறுத்தவரை அவருக்கு எப்போதும் பின்வழியால் சென்று காரியங்களைச் செய்வதில்தான் அலாதிப்பிரியம். இவ்வாறு நடப்பது அரசியலிலே அந்தஸ்து என்று நினைக்கின்றார் அது அரசியலிலே கேவலமான செயற்பாடாகும்.

ஒருவர் செய்யும் முயற்சியை மறைத்து எவரும் இதற்கு முயற்சிக்கவில்லை' என்றார்.

ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவில் உள்ள மீள்குடியேற்ற கிராமங்களான ஹிஜ்ரா நகர் மற்றும் அரபா நகர் போன்ற கிராமங்களுக்கான 02.2 கிலோ மீற்றர் தூரம் தார் வீதி அமைப்பதற்கா மகநெகும திட்டத்தில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மூலம் ஒரு கோடியே 40  இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கண்காணிப்பில் இவ்வீதி அமையப்பெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .