2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

'கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு ஒத்துழைப்பதற்கு தயங்கமாட்டேன்'

Suganthini Ratnam   / 2016 ஜூன் 26 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது நிர்வாகத்தின் கீழ் உள்ள மாகாண அரசாங்க சேவை ஆணைக்குழு செயற்படுகையில் தொழில் வழங்குவதற்காக முதலமைச்சர் எவ்வாறான ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றார் என்று புரியவில்லை என்று சுட்டிக்காட்டிய கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ, கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதற்கு மாகாண ஆளுநர் என்ற வகையில் எந்தவித தயக்கமோ அசௌகரியமோ தனக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்மிரர் பத்திரிகையில் 2016 ஜுன் 23ஆம் திகதி பிரசுரமாகிய 'கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு மாகாண ஆளுநரின் தலையீடு தடையாக உள்ளது' எனும் தலைப்பிலான செய்திக்கு விளக்கமளித்து அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'எனக்கு எதிராக கிழக்கு மாகாண முதலமைச்சர்  2016ஆம் ஆண்டு மே மாதம் மூன்றாம் வாரம் தொடக்கம் குற்றம் சுமத்தி வருகின்றார். கடற்;படை அதிகாரி ஒருவருடனான முரண்பாட்டின் பின்னர் இணையத்தளங்களிலும் செய்திப் பத்திரிகைகளிலும் வெளியாகிய விமர்சனங்களைக் காணும்போது, பிரச்சினையை திசை திருப்புவதற்காக அவர் இவ்வாறு செயற்பட்;டுள்ளார்' என எண்ணுகின்றேன்.

'குறித்த ஊடகங்கள் மூலம் அவருக்கு ஏற்பட்ட அசௌகரியமான நிலைமையின் கீழ் அவரது கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமினின் அதிருப்திக்கு ஆளாக வேண்டி ஏற்பட்டதுடன், மன்னிப்புக் கோர வேண்டியும் நேரிட்டது.

கிழக்கு மாகாணத்தில் பாரிய அபிவிருத்தி செயற்றிட்டங்கள் ஆரம்பிக்கப்பட வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கு நான் இணங்குகின்றேன். அவ்வாறான செயற்றிட்டங்கள் பற்றி என்னிடம் உதவி கோரியபோது, சுயமாக உதவி வழங்குவதற்கு எப்போதுமே முன்வந்துள்ளேன்.

உதாரணமாக, கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணியின் சம்பூர் மீளக்குடியமர்த்துகை, விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம் பிரேரித்த செயற்றிட்டங்கள், சம்பூர் வித்தியாலயத்துக்கு கடற்படையினர் வழங்கிய வசதிகள் ஆகியவற்றை குறிப்பிடலாம்.

இருப்பினும், மாகாண அபிவிருத்திக்கு கிடைக்கும் நிதி தொடர்பில் திட்டமிடல் மற்றும்  நடைமுறைப்படுத்தல் என்பன ஆளுநருக்குரிய ஒரு பணியல்ல. அதை முற்றுமுழுதாக முதலமைச்சரின் கீழ் உள்ள திட்டமிடல் செயலாளரே மேற்கொள்கின்றார். ஆகவே, அதன் அபிவிருத்தி திட்டங்களுக்காக நான் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்ற பிரச்சினை எவ்வாறு எழுகின்றதென எனக்குத் தெரியவில்லை. இது தனக்குத்தானே ஒத்துழைப்பு வழங்காமை என்பதா? என எனக்கு விளங்கவில்லை.

வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்கு அண்மையில் திறந்த போட்டிப் பரீட்சையொன்று நடத்தப்பட்டது. வேலையற்ற பட்டதாரிகளைத் தெரிவு செய்யும் போட்டிப் பரீட்சை மத்திய அரச கல்வித் திணைக்களத்தினால் கடந்த 18ஆம் திகதி  நடத்தப்பட்டது. இதற்கான பதவி வெற்றிடங்கள் பற்றிய பட்டியல் மாகாண கல்வித் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டது. ஆகவே, என்மீது குற்றம் சுமத்துவது நியாயமற்றது.

இவ்வாறு எனது நிர்வாகத்தன் கீழ் உள்ள மாகாண அரசாங்க சேவை ஆணைக்குழு செயற்படுகையில் தொழில் வழங்குவதற்காக முதலமைச்சர் எவ்வாறான ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றார் என புரியவில்லை. சிலவேளை பரீட்சைகளை நடத்தாமல் அரசியல் அல்லது தனிப்பட்ட தலையீடுகளுக்கமைய தொழில் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதா என நான் அறியேன்.

மக்கள் மத்தியில் என்னைப் பற்றிய ஒரு வெறுப்பு உருவாகுவதற்கு முதலமைச்சர் மேற்கொள்ளும் முயற்சியாகவே என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நான் கருதுகின்றேன்.

கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதற்கு மாகாண ஆளுநர் என்ற வகையில் எந்தவித தயக்கமோ அசௌகரியமோ எனக்கு இல்லை. மாகாணத்தின் ஏனைய அனைத்து அமைச்சர்களும் என்னுடன் நட்புறவுடன் பணியாற்றுகின்றார்கள';  என்றும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X