2024 மார்ச் 28, வியாழக்கிழமை

தமிழக உள்ளாட்சித் தேர்தல்: தொடங்கியது அடுத்த சுற்று

Thipaan   / 2016 ஜூன் 27 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் அடுத்த தேர்தலுக்கான களத்துக்கு தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் தயாராகிக் கொண்டிருக்கின்றன. ஆட்சிப் பொறுப்பேற்றதும் ஆளுநர் உரை தாக்கல் செய்யப்பட்டு, அது பற்றிய காரசார விவாதங்கள் தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடரில் அரங்கேறிய பின்னர், அடுத்த கட்ட பரபரப்பாக அமைந்திருப்பது உள்ளாட்சித் தேர்தல். தமிழகத்தில் உள்ள கிராமப் பஞ்சாயத்து முதல் மாநகரம் வரை நடைபெறப் போகின்ற தேர்தல் அது. கிராமப் பஞ்சாயத்து தேர்தல்களில் அரசியல் கட்சிகளின் சின்னம் இருக்காது. மீதியுள்ள பொறுப்புகளுக்கு மாநகராட்சி மேயர் வரை அந்தந்தக் கட்சியினருக்கு அங்கிகரிக்கப்பட்ட சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும்.

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கான தேர்தல்களை நடத்துவது இந்திய தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு என்றால், மாநிலத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்த வேண்டிய பொறுப்பு மாநில தேர்தல் ஆணையத்துக்கு இருக்கிறது. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் என்றதோர் அரசியல் சட்ட ரீதியான அமைப்பு சென்னை கோயம்பேட்டில் இயங்கி வருகிறது. இதற்கு தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்த சீதாராமன் இப்போது மாநில தேர்தல் ஆணையராக இருக்கிறார். இதுவரை இந்த மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் நேரங்களில் எல்லாம் சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கிறது. சில நேரங்களில் நீதிமன்றத்தின் கண்டனத்துக்குக் கூட ஆளாகியிருக்கிறது. குறிப்பாக, தி.மு.க ஆட்சி நடைபெற்ற காலத்தில் சென்னையில் உள்ள தொகுதி தேர்தல்களையே, உயர்நீதிமன்றம் தலையிட்டு செல்லாது என்று அறிவித்து மறு தேர்தல் நடத்த வைத்தது.

சட்டமன்றத் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலைக் காட்டிலும், உள்ளாட்சித் தேர்தல் சவால் மிகுந்த தேர்தல். ஏனென்றால், போட்டியிடும் வேட்பாளர்களில், கட்சி சார்பற்றவர்களும் இருப்பார்கள். கட்சி சார்புள்ளவர்களும் இருப்பார்கள். மாநில அரசுக்கு செல்வாக்கு இருப்பது போல், உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள தலைவர்களுக்கும் அதிகாரம் இருப்பதால், இந்தத் தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பையும் போட்டியையும் ஏற்படுத்தியிருக்கிறது. கிராமம், ஊராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், நகராட்சி, மாவட்டப் பஞ்சாயத்து, மாநகராட்சி என்று அனைத்து மட்டங்களிலும் அதிகாரத்தை சுவைக்க முடியும். நாடாளுமன்றத்துக்கு, தமிழகத்திலிருந்து 39 எம்.பி.க்கள். தமிழக சட்டமன்றத்துக்கு 234 எம்.எல்.ஏ.க்கள். ஆனால், உள்ளாட்சி அமைப்புகளுக்கோ

1 இலட்சத்துக்கும் மேற்பட்ட அரச பதவிகள். இதனால்தான் உள்ளாட்சித் தேர்தலில் போட்டா போட்டி மட்டுமல்ல, கடும் போட்டி நிலவும். ஒக்டோபர் மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடந்து முடிய வேண்டும் என்பது இந்திய அரசியல் சட்டப்படி விதிக்கப்பட்டுள்ள வரன்முறை.

தற்போது நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் (அ.தி.மு.க) தோல்வியடைந்த திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடையில் உள்ள வாக்கு வித்தியாசம் ஒரு சதவீதம் மட்டுமே.

இது உள்ளாட்சித் தேர்தலை மேலும் பரபரப்பான தேர்தலாக மாற்றியிருக்கிறது. இந்த இரு கட்சிகளும் மட்டுமே தமிழக அரசியல் என்பது சட்டமன்றத் தேர்தலில் நிரூபணம் ஆகி விட்டதால், இனி வேறு கட்சிகளை இந்த இரு கட்சிகளும் தானாகச் சென்று கூட்டணிக்கு அழைக்கும் நிலை இல்லை. உள்ளாட்சித் தேர்தலிலும் தனித்தே போட்டியிடலாம் என்று அ.தி.மு.க கருதும். தி.மு.கவைப் பொறுத்தமட்டில் இருக்கின்ற கூட்டணி போதும் என்றே நினைக்கும். அதனால் பா.ம.க, தே.மு.தி.க போன்ற கட்சிகளுக்குக் கூட இனி தி.மு.க அல்லது அ.தி.மு.கவிடமிருந்து அழைப்பு வராது. 'எதிர்கட்சிகள் ஓரிடத்தில் கூட வெற்றி பெறக் கூடாது' என்று எச்சரிக்கை மணி அடித்து, அ.தி.மு.க நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார் முதலமைச்சர் ஜெயலலிதா. 'இப்போதுள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களை தேர்தல் அதிகாரியாக பயன்படுத்தக் கூடாது. தமிழக தேர்தல் பார்வையாளர்களாக வெளிமாநிலங்களில் இருந்து அதிகாரிகளை அழைத்து வந்து நியமிக்க வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஏற்கெனவே, மாநில தேர்தல் ஆணையர் சீதாராமனிடம் கொடுத்திருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம்.

இந்த இரு கட்சிகளின் இறுக்கமான சூழ்நிலையால், உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி என்பது மற்ற கட்சிகளுக்கும் எட்டாக் கனியாகவே போகும் வாய்ப்பே அதிகம். அதன் தாக்கம் அந்தந்தக் கட்சியின் அறிக்கைகளில் வெளிவரத் தொடங்கி விட்டது. முதன் முதலில் பாட்டாளி மக்கள் கட்சி 'உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் தனித்துப் போட்டி' என்று அறிவித்து விட்டது. பா.ஜ.கவோ 'நாங்களும் தனித்தே போட்டியிடுவோம்' என்று இப்போது அறிவித்துள்ளது.

மக்கள் நலக்கூட்டணி, தே.மு.தி.க கூட்டணியில், இப்போது மக்கள் நலக்கூட்டணி மட்டுமே இன்றைக்கு எஞ்சி நிற்கிறது. தே.மு.தி.கவும், தமிழ்மாநில காங்கிரஸும் தனித்துப் போட்டி என்ற முடிவுக்கு வந்து விட்டன. 'மக்கள் நலக்கூட்டணியில் உள்ள ம.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் அனைத்தும் தனித்து, எப்போதும் போல் உள்ளாட்சித் தேர்தலிலும் போட்டியிடுவோம்' என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தமட்டில், அக்கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், 'தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டும்' என்று எதிர்பார்க்கிறார். ஆனால், மஹாராஷ்டிராவில் ராஜ்ய சபை உறுப்பினர் பதவி பெற்ற ப. சிதம்பரமோ தி.மு.கவுடன் கூட்டணி அமையக் கூடாது என்று நினைக்கிறார். அதனால், 'காங்கிரஸ் தயவு இல்லாமல் தி.மு.க இத்தனை தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க முடியாது' என்று புதுக்கோட்டையில் ஜூன் 25 ஆம் திகதி நடைபெற்ற காங்கிரஸ் ஊழியர்கள் கூட்டத்தில்  'நெருப்பை' கொளுத்திப் போட்டிருக்கிறார். ஏற்கெனவே,

காங்கிரஸுடன் கூட்டணி வைத்ததால்தான் தி.மு.க தோற்று விட்டது என்று பா.ஜகவினர் பேசி வருகின்ற சூழலில், காங்கிரஸ் இல்லாவிட்டால் இந்த இடங்களில் கூட தி.மு.க வெற்றி பெற்றிருக்காது என்ற ரீதியில் சிதம்பரம் பேசியிருப்பது உள்ளாட்சித் தேர்தலில் 'காங்கிரஸ்- தி.மு.க கூட்டணிக்குள்' கல் எறியும் வகையில் இருக்கிறது என்றே ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் ஆதரவாளர்கள் கருதுகிறார்கள். இந்த நிலை நீடித்தால் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் தென்படுகின்றன.

அரசியல் கட்சிகள், ஓரளவுக்கு உள்ளாட்சித் தேர்தலுக்கான 'கூட்டணி' வியூகத்தை வெளிப்படுத்தியிருக்கும் நிலையில், ஆளுங்கட்சியான அ.தி.மு.க ஓர் அதிரடி மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது. சென்னை உள்ளிட்ட  மாநகராட்சிகளில் இருக்கும் மேயர் பதவிக்கு 'மறைமுகத் தேர்தல்' என்று அறிவித்து, அதற்கான சட்டமும் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தை, தொடக்க நிலையிலேயே தி.மு.க எதிர்த்தாலும், இதே போன்றதொரு சட்டத்தை முன்பு தி.மு.கவும் கொண்டு வந்த கட்சிதான்.

அ.தி.மு.க கொண்டு வந்துள்ள இந்த புதிய சட்டத்திருத்தப்படி, மேயரை அந்தந்த மாநகராட்சி மக்கள் நேரடியாக தேர்வு செய்த நிலை மாறுகிறது. இனி மாநகராட்சிகளில் வெற்றி பெறும் கவுன்சிலர்கள் எல்லாம் கூடி, புதிய மேயரைத் தெரிவு செய்வார்கள். 'மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மேயர்' என்பதை விட, 'கவுன்சிலர்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர் மேயர்' என்ற புதிய சூழல் உருவாகியுள்ளது.

இந்த புதிய சட்டதிருத்தத்துக்கு முக்கியக் காரணம், தி.மு.க 89 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று பிரதான எதிர்கட்சியாக அமைந்திருப்பதுதான். அதிலும் குறிப்பாக மாநகராட்சி பகுதிகளான சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சி, வேலூர் ஆகிய பகுதிகளில் இருக்கும் சட்டமன்றத் தொகுதிகளில் தி.மு.க வெற்றி பெற்றிருக்கிறது. சென்னை மாநகராட்சியில், அதிக எம்.எல்.ஏ.க்களை தி.மு.க பெற்றிருக்கிறது. தி.மு.கவுக்குக் கிடைத்த இந்த வெற்றி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரக்கூடும் என்பது புதிய சட்ட திருத்தத்தின் வியூகமாக இருக்க முடியும்.

இது ஒரு புறமிருக்க, சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு பெண்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்தார் முதல்வர் ஜெயலலிதா. அதற்கான சட்ட திருத்தமும் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. ஆனால், இப்போது நடைபெறப் போகும் உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு இருக்காது என்று கூறப்பட்டுள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பை காரணம் காட்டி ஒத்தி வைக்கப்பட்டிருந்தாலும், பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும் வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது. 'மேயரை மறைமுகமாகத் தெரிவு செய்வது' 'பெண்கள் இட ஒதுக்கீட்டை அமுல்படுத்தாமல் ஒத்தி வைப்பது' எல்லாமே உள்ளாட்சித் தேர்தல்களில் முழு அளவில் அ.தி.மு.கவே வெற்றி பெற வேண்டும் என்று வகுக்கப்பட்ட வியூகத்தின் பின்னணி, உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களையும் கைப்பற்ற வேண்டும் என்பது அ.தி.மு.கவின் வியூகம்.

அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பது தி.மு.கவின் நோக்கம். திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக உருவான மற்ற கட்சிகள், கூட்டணிகள் எல்லாம் தங்கள் வாக்கு வங்கியை உள்ளாட்சித் தேர்தலிலாவது நிரூபித்து விடலாமா என்ற போராட்டம். இப்படி பரபரப்பு மிகுந்த காட்சிகளுக்கு பஞ்சமில்லாமல் நடக்கப் போகிறது தமிழக உள்ளாட்சித் தேர்தல்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X