2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஓய்வுபெறுகிறார் மெஸ்ஸி

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 27 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோப்பா அமெரிக்கா தொடரில் சிலி அணிக்கெதிரான இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த ஆர்ஜென்டீன அணியின் லியனல் மெஸ்ஸி, சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

தோல்வியின் பின்னர் கருத்துத் தெரிவித்த மெஸ்ஸி, "எனக்குக் கிடைக்க வேண்டுமென இருக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை, தேசிய அணி முடிந்துவிட்டது. என்னால் முடிந்த அனைத்தையும் நான் செய்தேன். சம்பியனாக இருக்க முடியாமை, வலிக்கிறது" என்றார்.

உலகில் தோன்றிய மிகச்சிறந்த கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவரான மெஸ்ஸி, லா லிகா சம்பியன் பட்டங்கள் எட்டையும் சம்பியன்ஸ் லீக் பட்டங்கள் நான்கையும், பார்சிலோனா அணிக்காக விளையாடிப் பெற்றுள்ளார். ஆனால், சர்வதேசப் போட்டிகளில் பெரிய தொடர்களில் 2008ஆம் ஆண்டு ஒலிம்பிக் தங்கமே காணப்படுகிறது. தவிர, கடந்த 9 ஆண்டுகளில் 4 இறுதிப் போட்டிகளில் ஆர்ஜென்டீன அணி தோல்வியடைந்திருந்தது.

"நான்கு இறுதிப் போட்டிகளாக இருந்தன. நான் முயன்றேன். நான் அதிகமாக விரும்பியது அது தான், ஆனால் அது முடியவில்லை, எனவே இது முடிந்துவிட்டது என நான் நினைக்கிறேன்" என்றார்.

மெஸ்ஸியின் முடிவு, தோல்வியின் பின்னர் ஏற்பட்ட மனவருத்தத்தால் ஏற்பட்ட சடுதியான முடிவு எனவும் அது மாற்றப்படுமெனவும் எதிர்பார்ப்பதாக, அதிர்ச்சியடைந்த அவரது சக வீரர்கள் தெரிவித்த போதிலும், தனது முடிவில் மெஸ்ஸி, உறுதியை வெளிப்படுத்தினார். "இது கடினமானது, ஆனால் தீர்மானம் எடுக்கப்பட்டு விட்டது. இனிமேலும் நான் முயலமாட்டேன், (எடுத்த முடிவிலிருந்து) திரும்பிச் செல்லவும் மாட்டேன்" என மெஸ்ஸி தெரிவித்தார்.

29 வயதான மெஸ்ஸி, சர்வதேசப் போட்டிகளாக 112 போட்டிகளில் விளையாடி, 55 கோல்களைப் பெற்றிருந்தார். இது, ஆர்ஜென்டீனா சார்பாகப் பெறப்பட்ட அதிக கோல்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .