2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

படுகொலை தொடர்பில் அரியநேத்திரனிடம் வாக்குமூலம்

Suganthini Ratnam   / 2016 ஜூன் 28 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

10 வருடங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு புறநகர்ப் பகுதியில் இடம்பெற்ற அரசியல் படுகொலைச் சம்பவம் ஒன்று தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

2004ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 02ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தெரிவாகியிருந்த கிங்ஸிலி இராசநாயகத்தின்; படுகொலை தொடர்பான விசாரணைக்காக தான் அழைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும், அக்காலப் பகுதியில் விடுதலைப் புலிகளின் பிராந்திய அரசியல் துறைப் பொறுப்பாளராகவிருந்த கௌசல்யனின் உறவு முறை பற்றி தன்னிடம் கேட்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், குற்றப்புலனாய்வுத் துறையினரால் திங்கட்கிழமை (27) கொழும்புக்கு அழைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளார் கொழும்பு குற்றப்புலனாய்வுத் தலைமையகத்தில் இந்த விசாரணை இடம்பெற்றது.  

2004ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டுவரை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த பா.அரியநேத்திரன், 2004ஆம் ஆண்டு தேர்தலில் விருப்பு வாக்குகளின்; அடிப்படையில் தெரிவாகவில்லை.
விருப்பு வாக்குகளின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக கிங்ஸிலி இராசநாயகம் தெரிவாகியிருந்த போதிலும், அவர் பதவிப்பிரமாணம் செய்யாமலே ஒரு சில நாட்களில் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்துகொண்டார்.

விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாகவே கிங்ஸ்லி இராசநாயகம் இராஜினாமாச் செய்துகொண்டதாக அவ்வேளையில் அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டது.

கிங்ஸ்லி இராசநாயகம் பதவியை இராஜினாமாச் செய்துகொண்டதை அடுத்து, அந்த வெற்றிடத்துக்கு விருப்பு வாக்குகளின் அடிப்படையில் அடுத்த இடத்திலிருந்த பா.அரியநேத்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

கிங்ஸ்லி இராசநாயகம் பதவியை இராஜினாமாச் செய்து 06 மாதங்கள் கடந்த நிலையில், ஒக்டோபர் 19ஆம் திகதி மட்டக்களப்பின் புறநகர் பகுதியிலுள்ள அவரது காணியை பார்வையிடச் சென்ற வேளை அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தக் கொலைக்கு விடுதலைப் புலிகள் பொறுப்பு என ஏற்கெனவே அவரது குடும்பத்தினரால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
2004க்கு முற்பட்ட காலத்தில் விடுதலைப் புலிகள் அமைப்புடன் நெருக்கமான தொடர்பைப் கொண்டிருந்ததாக கூறப்படும் கிங்ஸ்லி இராசநாயகம், விடுதலைப் புலிகளினால் இயக்ககப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திலும் பொறுப்பான பதவிகளை வகித்திருந்தார்.

கிழக்கு மாகாணத்தில் 2004ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பில் ஏற்பட்ட பிளவின் பின்னர் கிங்ஸ்லி இராசநாயகம் கொண்டிருந்த நிலைப்பாடு காரணமாக அந்த அமைப்பினால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகக்; கூறப்படுகின்றது.(நன்றி: பி.பி.சி.)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .