2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

BREXIT: இலங்கையும் தமிழர்களும் இதில் எங்கே?

Thipaan   / 2016 ஜூன் 28 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெய்வீகன்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் வெளியேறுவதற்கான வாக்கெடுப்பைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள அரசியல் அதிர்வுகள், இப்போதைக்கு ஐக்கிய இராச்சியத்தில் மாத்திரம் கணிசமானளவு சலசலப்புக்களை ஏற்படுத்திய வண்ணமுள்ளன. அரசியல் ரீதியான இன்னும் பல வெடிப்புக்களை எதிர்வரும் மாதங்களில் முகங்கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஐக்கிய இராச்சிய அரசாங்கம், தனது நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறது.

ஒருபுறம், ஸ்கொட்லாந்து மற்றும் அயர்லாந்து ஆகியவை, ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியமை தமது நாட்டு மக்கள் தேர்தலில் வழங்கிய ஆணைக்கு எதிரான முடிவு என்றும் இம்மாதிரியான எதிர்கால முறுகல்களைத் தவிர்ப்பதற்கு ஐக்கிய இராச்சியத்திலிருந்து விலகுவதே சிறந்த வழி என்றும் அதற்கான தேர்தல்களை கோருவதற்கு ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்திருக்கின்றன.

மறுபுறம், பிரதமர் டேவிட் கமரூனின் இராஜினாமாவையடுத்து, அந்தப் பதவிக்கு வரப்போகின்ற கென்செவேர்டிவ் கட்சியின் அதிதீவிர லிபரல் கொள்கை சார்ந்தவர்கள், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் எவ்வாறு நாட்டை ஆளப்போகின்றனர். இவர்களுடன் எவ்வாறு வெளிநாடுகள் உறவுகளை கையாளப்போகின்றன போன்ற ஆபத்தான எதிர்வுகூறல்கள் பல்வேறு தரப்பில் கிளம்பியுள்ளன.

இன்னொரு புறத்தில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் வெளியேறுவதற்குக் காரணமான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலில், சரியான வியூகத்தை வகுத்து மக்களை வழிநடத்திவில்லை என்று ஐக்கிய இராச்சியத்தின் எதிர்க்கட்சியான லேபர் கட்சியிலும் அந்த கட்சியின் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது. தற்போதுள்ள லேபர் தலைவரை முன்னிறுத்திக்கொண்டு அடுத்த தேர்தலில் வெற்றிபெற முடியாது என்று கட்சிக்குள் குமுறத்தொடங்கிவிட்டனர்.

இந்த பிரச்சினைகள் ஏனைய நாடுகளை, குறிப்பாக இலங்கையை எவ்வளவு தூரம் பாதிக்கப்போகின்றன, அதிலும் தமிழ் மக்களது பிரச்சினைகளில் இந்தப் பிரிவு எவ்வளவு தூரம் செல்வாக்கு செலுத்தப்போகிறது என்பதை ஆராய்வதுதான் இப்பத்தியின் நோக்கம். ஐக்கிய இராச்சியத்தின் அரசியல் குழப்பம், பொருளாதார ரீதியில் பன்னாட்டு சந்தைகளில் ஏற்படுத்தப்போகும் தாக்கள் குறித்து பலத்த எதிர்வுகூறல்கள் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டாயிற்று.

43 வருடங்களுக்கு பின்னர், யூரோ பிராந்தியத்திலிருந்து வெளியேறியுள்ள ஐக்கிய இராச்சியத்தில், தற்போது பவுண்ட்ஸின் மதிப்பு இருபது சதவீதத்தினால் சரிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு பணவீக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பும் அத்தியாவசியப்பொருள் விலையேற்றங்கள் மற்றும் வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்சினைகள் படிப்படியாக நாட்டின் சகல துறைகளை பீடிக்கப்போவதாகவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இலங்கையைப் பொறுத்தவரை, ஐரோப்பிய ஒன்றியத்துடன் மிகவும் நெருக்கமான உறவினை பேணிவரும் நாடென்ற வகையிலும் பெருமளவான ஏற்றுமதிப்பொருட்களை ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளுடன் வர்த்தகம் செய்துவருவது என்ற வகையிலும் தற்போதைய நிலைவரம் குறித்துக் கவலை கொள்ளவேண்டிய தேவை உள்ளது.

ஐக்கிய இராச்சியத்துக்கு மாத்திரம், வருடம் ஒன்றுக்கு 300 கோடி அமெரிக்க டொலர் பெறுமதியான தைத்த ஆடைகள், டின் மீன் உணவுகள் உட்பட சுமார் நூறுவகையான பொருட்களை இலங்கை ஏற்றுமதி செய்துவருகிறது. இது முழு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் செய்துகொள்ளும் ஏற்றுமதி வர்த்தகத்தின் நாற்பது சதவீதமாகும். இந்த வர்த்தகத்துக்கு தற்போது நிச்சயம் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று கூறலாம். இனிவரும் காலங்களில், ஐக்கிய இராச்சியம் எவ்வளவுதூரம் இந்த இறக்குமதிப் பொருட்களில் தங்கியிருக்கப்போகிறது என்பது குறித்தும் அவ்வாறு தொடர்ச்சியாக இந்தப் பொருட்களை வாங்குவதாக இருப்பினும், ஐரோப்பிய ஒன்றியத்தில் ஐக்கிய இராச்சியம் அங்கம் வகித்தபோது இலங்கை பெற்றுக்கொண்ட ஏற்றுமதி வரிச்சலுகைகளை இனி எவ்வாறு மாற்றுவழிகளுக்குள் கொண்டுவருவது என்பது குறித்தும், ஐக்கிய இராச்சியத்துடன் பேச்சு நடத்தவேண்டிய நிலையில் உள்ளது. இதற்கான பிரத்தியே வர்த்தக உடன்படிக்கைகளை செய்யவேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.

இங்கு பிரச்சினையின் முக்கியபுள்ளி எங்குள்ளது என்று பார்த்தால், ஐக்கிய இராச்சியத்தின் இந்த அரசியல் குழப்பம், எல்லா நாடுகளையும் பாதித்துள்ளது என்பதுதான். ஆகவே, ஏற்றுமதி வர்த்தகத்தில் அதிகம் தங்கியுள்ள இலங்கை போன்ற நாடுகளுக்கு தற்போதைய பன்னாட்டு சந்தை நிலைவரம் எல்லா நாடுகளுடனும் ஒருவித சலனத்தை ஏற்படுத்தப்போவது உறுதி.

நாட்டின் பொருளாதார நிலைவரம் தொடர்பாக ஏற்கெனவே மிகுந்த கரிசனை கொண்டுள்ள நல்லாட்சி அரசாங்கத்துக்கு, தற்போதைய ஐக்கிய இராச்சிய நிலைவரம் மேலும் பெரும் இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்து, இந்தப் பிரச்சினை ஏற்படுத்தியிருக்கின்ற அரசியல் ரீதியான தாக்கத்தை எடுத்து நோக்கினால்,ஐக்கிய இராச்சியத்தின் கென்செவேர்டிவ் கட்சியின் ஆட்சி தற்போது தீவிர வலதுசாரிகளின் (Neoliberalists) கைகளில் அகப்பட்டிருக்கிறது. எங்களது மொழியில் சொல்லப்போனால், இவர்களை எம்மக்கள் துவேசிகள் என்பர்;. இவர்கள் தங்களது பாராம்பிரய அரசியல் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் இனிவரும் மாதங்களில் இறுக்கமான அணுகுமுறைகளைக் கைக்கொள்வர்.

இந்த அதி தீவிர வலதுசாரிகளின் கொள்கைகள் முக்கியமாக இலவசங்களை எதிர்க்கும். சமூக பிரக்ஞையுள்ள அரசியல் விழுமியங்களை முற்றாக நிராகரிக்கும். நாட்டின் ஒவ்வொருவரும் தமக்கு தாமே உழைக்கவேண்டும் என்ற கொள்கையை திணிக்கும். ஒவ்வொருவரது குடும்பமும் ஒரு குட்டி அரசாங்கம். அந்த அடிப்படையில் தமது தேவைகளை அவர்களே பூர்த்தி செய்யவேண்டுமே தவிர, அரசாங்கத்தில் அதிகம் தங்கியிருக்கக்கூடாது என்ற போக்கில் செயற்படும். இதன் உதிரிக்கொள்கைதான், குடியேற்றவாசிகளுக்கு எதிரான கடும்போக்கு. இந்தத் தீவிர வலதுசாரிகள், குடியேற்றவாசிகளை முற்றாக நிராகரிப்பர். முதலீடுகள் என்ற முகமூடியுடன் வருகை தருவோரை மாத்திரம் கைகூப்பி வரவேற்பர். ஏனையோரை எதிர்ப்பர். இடதுசாரிகளை ஒருவித வரட்டு அச்சத்துடனேயே எப்போதும் எதிர்கொள்வர்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியமையானது எவ்வளவு பாரதூரமான விடயம் என்பதை இந்த வலதுசாரிகள் உணர்ந்துகொள்ளும் காலம் மிகவிரைவில் ஏற்படும். குடியேற்றவாசிகளின் வருகையினால் தமது பொருளாதாரம் சுரண்டப்படவில்லை என்ற யதார்த்தத்தை, இந்தத் தீவிர வலதுசாரிகள் உணரும் காலம் வரும். அப்போது, இவரது அரசியல் மக்களால் நிராகரிக்கப்படும்.

ஆனால், இப்போதைக்கு இந்தப்போக்கு உலக அரங்கில் ஒரு குறுகிய கால சுவாரஸ்யங்களையும் அரசியல் சாகசங்களையும் மக்களுக்கு காண்பிக்கும். கிட்டத்தட்ட, தமிழக தேர்தல்காலத்தின்போது சீமானின் பேச்சுக்கள் ஏற்படுத்திய உணர்வுக்கொந்தளிப்பினை ஒத்த அரசியல் கவர்ச்சியைத்தான் இந்த அதிதீவிர வலதுசாரிகள் கொஞ்ச காலத்துக்கு அனுபவிப்பார்கள்.

இந்தப்போக்கு, இலங்கையினதும் தமிழ்மக்களினதும் அரசியலில் ஏற்படுத்தப்போகும் மாற்றங்களை எடுத்துநோக்கினால்,

ஐரோப்பிய ஒன்றியமானது, தமிழ்மக்களைப் பொறுத்தவரை, அன்றுமுதல் தொடர்;ச்சியான வில்லனாகவே இருந்து வந்திருக்கிறது. விடுதலைப் புலிகளின் மீதான தடையாக இருக்கட்டும் அதற்கு பின்னரும் ஏற்பட்ட அரசியல் காரணிகளாக இருக்கட்டும் எல்லாவற்றிலும் இலங்கை அரசுக்கு ஆதரவாகவே அது எப்போதும் செயற்பட்டிருக்கிறது.

ஆனால், தற்போது ஏற்பட்டிருக்கும் பன்னாட்டு அரசியல் பதற்றம், இலங்கை அரசாங்கத்தைப் பல்வேறு வழிகளில் அதன் பொறுப்புக்களிலிருந்து தப்பியோடுவதற்கான கள்ள வழிகளை திறந்துவிட்டிருக்கிறது. இது தமிழ்மக்களுக்கு மிகுந்த துரதிஷ்டவசமானதே ஆகும். இன்றைய காலககட்டமானது, உலகப் பொருளாதார பெரும்புயலில் சிக்கியிருக்கும் அப்பாவி தரப்புக்களை காப்பாற்றும் காலமாகும். இதில் ஒருவருக்கொருவர் ஆதரவளித்தும் ஆபத்துக்களிலிருந்து மீட்டெடுத்தும் பொதுத்தளத்துக்குள் சேர்ந்தியங்கும் வழிகளைக் கண்டறிவதுமே அனைவரதும் நோக்கமாக இருக்கப்போகிறது. இனிவரும் மாதங்கள் இந்த இலக்கை நோக்கிய ஓட்டமாகவே காணப்படப்போகிறது.

இம்மாதிரியான ஒரு பொது ஓட்டத்தின்போது, தமிழரது பிரச்சினை குறிப்பாக இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்கப்பொறிமுறைகளில் காண்பிக்கும் பாராமுகம், ஜெனீவா ஒப்பந்தத்தினை பூரணமாக நடைமுறைப்படுத்துவதில் காண்பிக்கும் இழுபறி போன்றவை அனைத்தும் ஒருவித தேக்கநிலையை அடைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

இந்த விடயங்களை முன்னெடுக்கும் தமிழர் தரப்பானது, தற்போது முழுக்க முழுக்க சர்வதேச சமூகத்தினை நம்பித்தான் இலங்கை அரசாங்கத்தை வழிக்குக் கொண்டுவரும் கருமங்களை ஆற்றிவந்தது. அந்த கருமங்களே பலத்த காயங்களுடன்தான் கடந்த காலங்களில் பயணம் செய்திருக்கிறது. ஆனால், தற்போதைய சர்வதேச நிலைவரம் உள்நாட்டில் உள்ள நிலைமாறு காலப்பகுதி மீதான தமது மனப்பூர்வமான பங்களிப்பிலிருந்தும் பொறுப்பிலிருந்தும் பினவாங்கிக்கொள்வதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

இது தமிழர் தரப்பை பொறுத்தவரைக்கும் ஒரு பின்னடைவாகக் கருதவேண்டிய ஒன்றுதான். ஆனால், சர்வதேச அரசியல், பொருளாதார சரிவு மீண்டும் கொதிநிலையை அடையும் வரையான காலப்பகுதியை தங்களுக்கு ஏற்றவாறு எவ்வாறு தகவமைத்துக்கொள்ளலாம் என்று சிந்திப்பதில்தான் இப்போதைக்குத் தமிழர் தரப்பு ஒரு முழுமையான வெற்றியைக் காணமுடியும். அது புலம்பெயர்ந்த தமிழர் தரப்பாக இருக்கட்டும் தாயக தமிழராக இருக்கட்டும் இரண்டு தரப்பும் இனி வரும் மாதங்களை வெறுமனே சோர்வோடும் விரக்தியுடனும் நகர்த்தாமல், மாற்று வழிகளில் நகரும் பொறிமுறைகளை வடிவமைக்கவேண்டும்.

உலகின் எந்த மூலையில் நடைபெறும் பிரச்சினையும் இன்றைய காலகட்டத்தில் அந்த பிரதேசத்தினை மையமாக மட்டும் வைத்து பார்க்கப்படும் பிரச்சினை அல்ல. அது சர்வதேச சட்டத்தில் எவ்வாறு பொருந்துகிறது. எவ்வளவு கனதியான தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்ற சட்டகத்தின் மீது பொருத்திவைத்துத்தான் அதற்குத் தீர்வு கிடைக்கிறது.

இதற்கு ஈழத்தமிழர் தரப்பு ஒன்றும் விதிவலிக்கானது அல்ல.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X