2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

'இலங்கை நீதித்துறையில் நம்பிக்கை இல்லை'

Princiya Dixci   / 2016 ஜூன் 28 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொத்தணிக் குண்டுகள் தொடர்பில் விசாரணை தேவை
வெள்ளை வான் பாணியில் கைதுகள் இடம்பெறுகின்றன
சிங்க லே உள்ளிட்டவை தொடர்பிலும் கவனம்

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக் கூறுதல், மனித உரிமைகள் சம்பந்தமான விவகாரங்களின் முதன்மையான கேள்வியாக, சர்வதேச நீதிபதிகளினதும் வழக்குத் தொடருநர்களினதும் புலனாய்வாளர்களினதும் சட்டத்தரணிகளின் பங்கெடுப்பே காணப்படுவதாகத் தெரிவித்துள்ள மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல்-ஹுஸைன், அது குறித்துத் தனது கவனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக் கூறுதல், மனித உரிமைகள் தொடர்பாக, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகரதும் அவரது அலுவலகத்தினதும் செயலாளர் நாயகத்தினதும் வருடாந்த அறிக்கையின்,

முற்கூட்டிய பதிப்பிலேயே, இவ்விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக் கூறுதலையும் மனித உரிமைகளையும் ஊக்குவிப்பது தொடர்பாகக் கடந்தாண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானமான 30ஃ1இன்படி, இலங்கையின் விசாரணைப் பொறிமுறையில், சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்புக் காணப்பட வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்ட போதிலும், அவ்விடயத்திலிருந்து இலங்கை நழுவிச் செல்வதை, உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.

குறிப்பாக, இவ்வாண்டு மே மாதத்தில், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுக்கு மத்தியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றும் போது, சர்வதேச நீதிபதிகள் பங்குபெற மாட்டார்கள் எனத் தெரிவித்ததைச் சுட்டிக்காட்டியுள்ள அந்த அறிக்கை, 'பாதிக்கப்பட்டோரின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்கான நம்பிக்கைத்தன்மையை இலங்கையின் நீதித்துறை தற்போது குறைவாகக் கொண்டிருப்பதன் காரணமாக, பாதிக்கப்பட்டோரின் பார்வையில் சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான பொறுப்புக்கூறல் பொறிமுறையை உறுதிப்படுத்துவதற்கு, சர்வதேசப் பங்கேற்பு அவசியமென, உயர்ஸ்தானிகர் தொடர்ந்தும் கருதுகிறார்' எனத் தெரிவிக்கிறது.

இலங்கையின் இறுதி யுத்தத்தில், கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன என, இங்கிலாந்தின் த கார்டியன் ஊடகம் செய்தியொன்றை அண்மையில் வெளியிட்டிருந்த நிலையில், அது தொடர்பில் கவனத்தைச் செலுத்திய அந்த அறிக்கை, 'முரண்பாட்டின் இறுதிக் கட்டத்தில் கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக வெளிவந்த செய்தி அறிக்கைகளைத் தொடர்ந்து, இதற்கு முன்னரும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் புலனாய்வு அறிக்கையிலும் அவ்வாறான குற்றச்சாட்டுக் காணப்பட்ட நிலையில், சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணையொன்று மேற்கொள்ளப்பட வேண்டுமென, உயர்ஸ்தானிகர் கோருகிறார்' எனத் தெரிவித்தது.

கடந்தாண்டு ஜனவரியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து வெளியாகும் மனித உரிமைகள் சம்பந்தமான ஐ.நா அறிக்கைகளைப் போன்று, புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை, இந்த அறிக்கையும் பல இடங்களில் வரவேற்றுள்ளது. குறிப்பாக, இவ்வாண்டு பெப்ரவரியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட உயர்ஸ்தானிகரின் வருகை மூலமாக, இந்த அறிக்கை மேலும் வளப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் அவ்வறிக்கை, தனது விஜயத்தின் போது வழங்கப்பட்ட ஒத்துழைப்புகளுக்காக, அவர் நன்றியைத் தெரிவிப்பதாகவும் தெரிவிக்கிறது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சிய ஆகியன இணைந்து உருவாக்கியுள்ள தேசிய அரசாங்கத்தின் மூலமாக, மறுசீரமைப்புகளை மேற்கொள்வதற்கான அரசியல் சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் அந்த அறிக்கை, ஆனால், அரச மறுசீரமைப்பு, இடைக்கால நீதி வழங்கல், பொருளாதார மீட்சி ஆகியன தொடர்பான முழுமையான வாக்குறுதிகள், இன்னமும் வழங்கப்படாமல் உள்ளன எனவும், அவை தேக்கமடையும் ஆபத்து உள்ளதாகவும் தெரிவிக்கிறது. கட்சி அரசியல் தொடர்பான பேரம் பேசல், கூட்டணிக்குள் அதிகாரப் பகிர்வு ஆகியன, முரண்பாடாக மாறியுள்ளதாகத் தெரிவித்த அந்த அறிக்கை, இதன் விளைவாக, விரிவடைந்த அமைச்சரவை ஒன்று உருவாகியுள்ளதாகவும், அமைச்சுகளின் பணிப்பொறுப்புகள், ஒன்றுக்கொன்று மேவிக் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழு, இன்னமும் பலப்படுத்தப்பட வேண்டியுள்ள போதிலும், அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைச் சுட்டிக்காட்டியுள்ள அறிக்கை, ஏனைய அரச அமைப்புகளும், இடைக்கால நீதியிலும் அரசியலமைப்பு மறுசீரமைப்பிலும் முழுமையான ஒத்துழைப்பை, இவ்வாணைக்குழுவுக்கு ஒத்துழைப்பையும் மதிப்பையும் வழங்குமென உயர்ஸ்தானிகர் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பட்டியற்படுத்தப்பட்டிருந்த வெளிநாட்டிலுள்ள தமிழ் அமைப்புகள், கடந்தாண்டு நவம்பரில் பட்டியலிலிருந்து அகற்றப்பட்டதோடு, இவ்வாண்டு இடம்பெற்ற சுதந்திர தினத்தில் சிங்கத்திலும் தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டமையையும் சுட்டிக்காட்டிய அவ்வறிக்கை, சுதந்திர தினத்துக்கு மறுநாள், விஹாரைக்குச் சென்ற வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் நடவடிக்கையையும் முன்னேற்றகரமான விடயங்களாகக் குறிப்பிட்டுள்ளது. அத்தோடு, போரால் பாதிக்கப்பட்ட, இடம்பெயர்ந்துள்ள மக்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சென்று பார்வையிட்டமை, தன்னைக் கொல்ல முயன்று சிறைத்தண்டனை வழங்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினரை ஜனாதிபதி மன்னித்தமை ஆகியவையும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இவ்வாறான நடவடிக்கைகள், நம்பிக்கைகொண்ட சூழலொன்றைக் கட்டியெழுப்புவதில் முக்கிய பங்காற்றும் என உயர்ஸ்தானிகர் எதிர்பார்க்கின்ற போதிலும், அவற்றுக்கு மேலாக, நிறுவனரீதியான மாற்றங்களும் ஏற்படுத்தப்பட வேண்டுமெனத் தெரிவித்தார். குறிப்பாக, சிங்க லே போன்ற ஆக்ரோஷமான பிரசார நடவடிக்கைகளையும் சமூக ஊடக இணையத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் ஏனைய பிரசாரங்கள் தொடர்பாகவும் கரிசனை கொண்டுள்ளதாகத் தெரிவித்த உயர்ஸ்தானிகர், அண்மையில் சில மாதங்களில், முஸ்லிம் சமூகங்கள், சீர்திருத்தசபை கிறிஸ்தவர்கள், எல்.ஜி.பி.டி (ஆண், பெண் சமபாலுறவாளர்கள், இருபால் விளைஞர்கள், அரவாணிகள்) குழுக்கள் மீதான இலக்குவைத்தலையும் சுட்டிக்காட்டி, இவ்வாறான பாகுபாடுகளுக்கெதிராக நடவடிக்கை எடுப்பதற்கு, நேரடியான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டுமெனக் கோரினார்.

2015இலும் 2016இலும் 5,788 ஏக்கர் காணிகள், இராணுவத்தால் விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களைச் சுட்டிக்காட்டிய உயர்ஸ்தானிகர், காணிகளை விடுவிப்பதற்காக அமைக்கப்பட்ட நடவடிக்கைச் செயற்குழுவின் நடவடிக்கைகள் குறித்துக் கேள்வியெழுப்பினார். யாழ்ப்பாணத்துக்கு உயர்ஸ்தானிகர் விஜயம் செய்த போது, இடம்பெயர்ந்துள்ள மக்களிடையே குழப்பமான மனநிலை இருப்பதை அவர் இனங்கண்டுகொண்டதோடு, 'நல்லாட்சி இப்போது இருக்கிறது. ஆனால் நாம் வீடுகளுக்குச் செல்ல விரும்புகிறோம்' என அகதியொருவர் தெரிவித்த கருத்தும், மேற்கோளிடப்பட்டுள்ளது. அத்தோடு, விவசாயம், சுற்றுலாத்துறை உட்பட வர்த்தக நடவடிக்கைகளில், இராணுவத்தினர் தொடர்ந்தும் ஈடுபட்டுவருவதாக அறிக்கைகள் கிடைத்துள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தொடர்பாகவும் கவனஞ்செலுத்திய அறிக்கை, அதன் கீழ் கைது செய்யப்பட்ட 39 பேருக்குப் பிணை வழங்கப்பட்டாலும், ஏறத்தாழ 250 பேர், தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுவதாகத் தெரிவித்தது. அத்தோடு, 2015-16 காலப்பகுதியில் புதிதாக 40 கைதுகள், இச்சட்டத்தின் கீழ் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கும் அவ்வறிக்கை, சாவகச்சேரியில் குண்டு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 25 பேரும் இதில் உள்ளடங்குவதாகத் தெரிவித்தது. இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்ட விதத்தையும் விமர்சித்த அந்த அறிக்கை, அவை, முன்னைய வெள்ளை வான் கடத்தல்களை ஞாபகப்படுத்துவதாகவும் தெரிவித்தது.

அத்தோடு, பாதுகாப்புக் காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்டோர் மீதான சித்திரவதைகளும் தவறாகக் கையாளப்படுதலும் தொடர்பான குற்றச்சாட்டுகள் - முன்பை விடக் குறைந்துள்ள போதிலும் - கிடைத்திருப்பதாகத் தெரிவித்த அவ்வறிக்கை, தமிழீழ விடுதலைப் புலிகளோடு சம்பந்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுவோர் நாட்டுக்குத் திரும்பும் போது சித்திரவதைக்கும் பாலியல் துன்புறுத்தல்களுக்கும் உள்ளாகுவதாகவும் தெரிவிக்கிறது.

சாட்சிகளையும் பாதிக்கப்பட்டோரையும் பாதுகாப்பதற்கான சட்டமூலம், கடந்தாண்டு பெப்ரவரியில் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், சாட்சிகளையும் பாதிக்கப்பட்டோரையும் பாதுகாப்பதற்கான பொருத்தமான திட்டமொன்று காணப்படவில்லை எனத் தெரிவிக்கும் அவ்வறிக்கை, அந்தச் சட்டத்தை மீளாய்வு செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாகவும் அவ்வறிக்கை மேலும் தெரிவிக்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .