2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இஸ்தான்புல் விமான நிலையத்தில் தாக்குதல்: 41 பேர் பலி; 230 பேர் காயம்

Gavitha   / 2016 ஜூன் 29 , மு.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

துருக்கியில் அதிக சனத்தொகையைக் கொண்ட நகரான இஸ்தான்புல்லின் பிரதான விமான நிலையத்தில், 3 தற்கொலைதாரிகள் மேற்கொண்ட தாக்குதல்களில், 41 பேர் கொல்லப்பட்டதோடு, ஏறத்தாழ 230 பேர் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதல், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுததாரிகளாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது என எண்ணுவதாக, துருக்கிப் பிரதமர் தெரிவித்துள்ளார். துருக்கிய நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல், பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பாவிலேயே மூன்றாவது மிகப்பெரிய (சென்றுவரும் மக்களின் அடிப்படையில்) விமான நிலையமான இஸ்தான்புல்லின் அட்டாடேர்க் விமான நிலையத்துக்குள் புகுந்த குறித்த தற்கொலைதாரிகள், அங்கிருந்த காவலர்களை நோக்கி றைபிள்களால் சுட்டுள்ளனர். முதலில் ஒருவரே புகுந்துள்ளதாகத் தெரிவித்த அங்கிருந்துவரும் தகவல்கள், அங்கிருந்தோர் மீது அவர் எழுமாற்றாகச் சுட்டதாகத் தெரிவித்தன. அவரது முகத்தை அவர் மறைத்திருக்கவில்லை எனவும், முழுவதுமாகக் கறுப்பு ஆடையை அணிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதல் நடத்திய நபரை, பொலிஸ் அதிகாரியொருவர் மடக்கிப் பிடிக்க முயன்றபோது, ஏனைய இருவருடன் சேர்ந்து, குறித்த நபரும் தனது தற்கொலை அங்கிகளை வெடிக்க வைத்து, இறந்தார்.

இந்தத் தாக்குதல் தொடர்பான பாதுகாப்புக் கமெராப் பதிவுகளும் வெளியாகியுள்ளன. அவ்வாறு வெளியான இரண்டு பதிவுகளில் ஒன்றில், விமான நிலைய நுழைவாயிலில், பாரிய வெடிப்பொன்று இடம்பெறுவது காட்டப்பட்டுள்ளது. மற்றைய காணொளியில், விமான நிலையத்துக்குள் தாக்குதலாளி ஓடிச் செல்வதும், பின்னர் அவர் நிலத்தில் வீழ்வதோடு, தன்னைத் தானே வெடிக்க வைப்பதும் காண்பிக்கப்படுகிறது.

இந்தத் தாக்குதலுக்கு, எந்தவோர் அமைப்பும் உரிமை கோரியிருக்கவில்லை. ஆனால், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவே மேற்கொண்டிருக்கலாம் என, தங்களை வெளிப்படுத்த விரும்பாத துருக்கி அதிகாரிகள் தெரிவித்தனர். துருக்கியின் அரசாங்கத்துக்கு எதிரான குர்திஷ் படைகளும், தாக்குதல்களை நடத்துகின்ற போதிலும், அவ்வமைப்புப் பிரதானமாக அரச கட்டங்கள் அல்லது அரச இலக்குகள் மீதே தாக்குதல் நடத்துவது வழக்கமாகும். இந்தத் தாக்குதல், மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டதால், ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவே நடத்தியுள்ளது எனச் சந்தேகிப்பதாக, அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

தாக்குதல் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த துருக்கிப் பிரதமர் பினாலி யில்டிரிம், 'அப்பாவிப் பொதுமக்களை இலக்குவைத்த இந்தத் தாக்குதல், இழிவான, திட்டமிடப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் ஆகும்" எனத் தெரிவித்தார். அத்தோடு, ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், தாக்குதலாளிகள் விமான நிலையத்துக்கு வாடகைக் காரிலேயே வந்ததாகவும், அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்களெனக் கருதப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதலை, ஐக்கிய நாடுகள் உட்பட உலகிலுள்ள பல நாடுகளும் தமது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளதோடு, துருக்கிக்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .