2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சிறுபான்மையினர் தொடர்பான மஹிந்தவின் புதிய பரிவு

Thipaan   / 2016 ஜூன் 29 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுபான்மை மக்கள் விடயத்திலான தமது நிலைப்பாட்டின் விளைவுகளை ஏற்றுக் கொள்ள, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிரப்பந்திக்கப்பட்டுள்ளார் போலும். அவர், அண்மையில் இரண்டு இடங்களில் வெளியிட்டிருந்த கருத்துக்களால் அது புலனாகிறது.

தாம் தோல்வியடைந்தமைக்கு முக்கிய காரணம், முஸ்லிம்கள் தமக்கு வாக்களிக்காமையே என, அவர் அண்மையில் ஜப்பானுக்குச் சென்றிருந்த போது, ஜப்பான் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியொன்றில் கூறியிருந்தார். அதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை, பொலன்னறுவையில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போது, நல்லிணக்கத்தைக் கொண்டுவருவதற்காகவே தாம், புலிகளைத் தோற்கடித்ததாகக் கூறியிருக்கிறார்.

தமது தேர்தல் தோல்வி தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த கருத்து முற்றிலும் உண்மையே. 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது, அவர் முஸ்லிம்களின் வாக்குகளில், ஏறத்தாழ அரைவாசியைப் பெற்றுக் கொண்டார். ஆனால், கடந்த முறை அவருக்கு ஐந்து சதவீதத்துக்கும் பத்து சதவீதத்துக்கும் இடைப்பட்ட முஸ்லிம்களே வாக்களித்திருந்தனர். 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போதும் பொதுத் தேர்தலின் போதும், சிறுபான்மை மக்களின் வாக்குகள் இல்லாவிட்டாலும் மஹிந்த வெற்றி பெறும் நிலையே ஏற்பட்டிருந்தது. எனவே, இனி சிறுபான்மைத் தலைவர்கள், தமது வாக்கு வங்கியைக் காட்டிப் பேரம் பேசும் நிலை வரப்போவதில்லை என மஹிந்த நினைத்தார் போலும். அப்போது, அவருடன் இருந்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க, அதனைப் பகிரங்கமாகவே கூறியிருந்தார்.

ஆனால், அன்று இருந்த நிலைமை நிரந்தரமானதல்ல என, கடந்த வருடம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் நிருபித்துவிட்டது. எனவே தான், எதிர்காலத்தில் ஜனாதிபதியாவதற்குக் கனவு காணும் அமைச்சர் சம்பிக்கவும் சில மாதங்களாக சிறுபான்மையினர் விடயத்தில் கவனமாகக் கருத்து வெளியிடுகிறார் போலும்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவே, புலிகளைத் தாம்  தோற்கடித்ததாக மஹிந்த கூறும் கருத்து உண்மையல்ல. புலிகளை தோற்கடித்ததன் பின்னர், நல்லிணக்கத்தை ஏற்படுத்த மஹிந்தவுக்கே மிகவும் சிறந்த சூழ்நிலைமை கிடைத்தது. ஆனால், அவர் அதனால் பயன்பெறத் தவறிவிட்டார் என்பதே உண்மை.

தாம் பதவிக்கு வந்தவுடன், சமாதானப் பேச்சுவார்த்தை மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சித்தததாகவும் புலிகள் அதற்கு இடமளிக்கவில்லை என்றும் மஹிந்த கூறியிருந்தால், அதில் மேலோட்டமான உண்மை இருக்கிறது. ஏனெனில், அவர், 2005ஆம் ஆண்டு பதவிக்கு வந்ததன் பின்னர், புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இரண்டு முறை தமது அமைச்சர்களை, ஜெனீவா நகருக்கு அனுப்பினார். அதேவேளை, புலிகள், உலகை ஏமாற்றுவதற்காகவே சமாதானப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டனர் என அவ்வமைப்பின் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளராகவிருந்த தமிழினி, தமது சுயவரலாற்றில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், மஹிந்த எந்தளவு இதய சுத்தியுடன் பேச்சுவார்த்தைகளுக்கு தமது அமைச்சர்களை அனுப்பினார் என்பதும் சர்ச்சைக்குரிய விடயமாகும்.

போர் வெற்றியின் பின்னர், நல்லிணக்கத்தை ஏற்படுத்த உண்மையான நோக்கம் மஹிந்தவிடம் இருக்கவில்லை என்பது, போரின் இறுதிக் கட்டத்தில் மிகத் தெளிவாகத் தெரியவிருந்தது. உதாரணமாக, 2007ஆம் ஆண்டு ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் மஹிந்த கலந்து கொள்ளும் போது, படையினர், கிழக்கு மாகாணத்தைக் கைப்பற்றி வன்னிப் பிரதேசத்திலிருந்தும் சிறியதோர் நிலப்பரப்பை கைப்பற்றியிருந்தனர். அப்போது, அரச படைகளின் போர் வெற்றி அவ்வளவு உறுதியாக இருக்கவில்லை. அந்த நிலையில், ஐ.நா பொதுச் சபையில் உரையாற்றிய மஹிந்த, பயங்கரவாதிகளை சமாதான வழிக்கு எடுக்கவே, தமது படையினர் சண்டையில் ஈடுபட்டுள்ளனர் எனக் கூறினார்.

2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐ.நா பொதுச் சபையின் அடுத்த கூட்டம் நடைபெற்ற போது, படையினர், புலிகளின் நிர்வாகத் தலைநகரமாகவிருந்த கிளிநொச்சியையும் கைப்பற்றும் நிலையிலிருந்தனர். போர் வெற்றி நிச்சயம் என்பதை அறிந்திருந்த நிலையில், அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட மஹிந்த, பயங்கரவாதிகளுடன் இனி பேச்சுவார்த்தை நடத்துவதில்லை எனக் கூறியிருந்தார்.

பயங்கரவாதிகளை சமாதான வழிக்கு எடுக்கவே, தமது படையினர் சண்டையில் ஈடுபட்டுள்ளனர் என்ற, முன்னைய கூட்டத்தில் மஹிந்த கூறிய கருத்து உண்மையாக இருந்தால், தோல்வியின் விளிம்பிலிருந்த புலிகளை சமாதான வழிக்கு எடுக்கக் கூடிய நிலை உருவாகிய போது, பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என்று கூறியிருக்க மாட்டார்.

இதற்கு முன்னர், ஏனைய அரசாங்கங்களையும் சமாதானப் பேச்சுவார்த்தைகள் என்ற போர்வையில் புலிகள் ஏமாற்றினர். எனவே, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் பயனில்லை என அவர் அப்போது நினைத்தார் என ஊகித்தாலும், பேச்சுவார்த்தை மேசைக்குப் புலிகளை இழுக்கவே போர் புரிகிறோம் என முன்னைய ஆண்டில் கூறியிருக்கக் கூடாது. அதேவேளை, அவர் அவ்வாறு நினைத்திருந்தால், புலிகளின் தலைமை அழிக்கப்பட்டதன் பின்னராவது நல்லிணக்கத்துக்காகப் பாடுபட்டிருக்க வேண்டும்.

அதற்காக சில அரசியல் விடயங்களையும் தமிழ் மக்களின் வாழ்வாதார விடயங்களையும், அவர் பூர்த்தி செய்ய வேண்டியிருந்தது. அரசியல் விடயங்களில், போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்யும் விடயத்தில் அவருக்கும் ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ முனுக்கும் இடையே ஓர் இணக்கப்பாடு ஏற்பட்டது. போர் முடிவடைந்து ஒரு வார காலத்தில் இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா பொதுச் செயலாளருடன் மஹிந்த செய்து கொண்ட அந்த இணக்கப்பாட்டின் படி, இலங்கை அரசாங்கம்தான் அந்த விசாரணையை நடத்த வேண்டியிருந்தது.

அதேவேளை, போர் இடம்பெற்ற பிரதேசங்களில், மக்கள் தமது பிரதிநிதிகள் மூலம் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளும் வகையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களையும் மாகாண சபைத் தேர்தலையும் நடத்த வேண்டியிருந்தது.

மக்களின் வாழ்வாதாரத் துறையைப் பொறுத்தவரையில், இடம்பெயர்ந்த மக்களின் பிரதேசங்களில் புதைக்கப்பட்டிருந்த நிலக்கண்ணிவெடிகளை விரைவில் அகற்றி, அவர்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்துவது அவசரத் தேவையாக இருந்தது. அதேபோல், உயர் பாதுகாப்பு வலயங்களில் இருந்த மக்களின் வீடுகளையும் விளைநிளங்களையும் விடுவிப்பதும் அவசரத் தேவையாக இருந்தது. பல குடும்பங்களில், தொழில் செய்யக்கூடியவர்கள் சிறையில் இருந்தமையால், அவர்கள் தொடர்பான சட்ட நடவடிக்கைகளைப் விரைவில் பூர்த்தி செய்து, அவர்களை விரைவில் விடுதலை செய்வதும் மற்றொரு தேவையாக இருந்தது.

ஆனால், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கே தாம், புலிகளைத் தோற்கடித்ததாக இன்று கூறும் மஹிந்த, இந்த விடயங்கள் எதிலும் போதிய அக்கறை காட்டவில்லை. அன்று தாம் பதவியில் இருக்கும்; போது அக்கறை காட்டாதது மட்டுமல்லாமல், இன்று தற்போதைய அரசாங்கம், அரசியல் கைதிகளையும் காணிகளையும் விடுவிக்கும் போதும் அரசாங்கம் புலிகளுக்கு சாதகமாக செயற்படுவதாக மஹிந்தவின் ஆதரவாளர்கள் கூறித் திரிகின்றனர்.

அவசியம் எனக் கருதியிருந்தால், மனித உரிமை விடயத்தில் பொறுப்புக் கூறல் தொடர்பில் உலகத்தையே வியக்க வைக்கும் வகையில் உலகுக்குச் சிறந்த முன்மாதிரியாக மஹிந்த இருந்திருக்கலாம். அவர், அன்று பொறுப்புக்கூறல் விடயத்தில் நடவடிக்கை எடுப்பேன் என பான் கீ முனுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்திருந்தால், அதாவது புலிகள் செய்த குற்றங்களுக்காக அவர்களுக்கு எதிராகவும் படையினர் செய்த குற்றங்களுக்காக அவர்களுக்கு எதிராகவும் சாதாரண சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திருந்தால், சிங்கள மக்களிடம் இருந்து எதிர்ப்பு வந்திருக்காது.

அவர் அன்று, அந்தளவு பிரபல்யம் பெற்றிருந்தார். அவர்தான் தமது பாதுகாவலன் எனப் பெரும்பாலான சிங்கள மக்கள், அதிலும் குறிப்பாக, தீவிரப் போக்குடைய சிங்களவர்கள் ஏற்றுக் கொண்டிருந்தனர். அந்தநிலையில் அவர் நடத்தும் விசாரணைகளை சிங்கள மக்கள் எதிர்த்திருக்கமாட்டார்கள். ஏனெனில், இலங்கையில் தேசப்பற்று என்பது அறிவுபூர்வமானதல்ல, அரசியல் சார்பானது. அதற்கு பல உதாரணங்களைத் தரலாம்.

1994ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போதும் ஜனாதிபதித் தேர்தலின் போதும், தமிழ் மக்களுக்குப் பிரச்சினைகள் இருக்கின்றன, அவற்றைத் தீர்க்க அதிகாரப் பரவலாக்கல் செய்யப்பட வேண்டும் என்று கூறியே சந்திரிகா குமாரதுங்க வாக்குக் கேட்டார். அவர் அம்முறை, 62 சதவீத வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியானார். ஏனெனில், அன்று சிங்கள மக்கள் மத்தியில் ஆதரவு அலை அவர் பக்கமாகத் தான் வீசியது.

போர் முடிந்து ஒரு வருடம் பூர்த்தியாகும் முன், 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் புலிகளுககு எதிராகப் போரை வழிநடத்திய இராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவுக்கே வாக்களித்தனர். ஏனெனில், அன்று தமிழ் மக்கள் மத்தியில் மஹிந்த எதிர்ப்பு அலையே வீசியது.

புலிகள், 2002ஆம் ஆண்டு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு வந்த போது, அவர்கள் தமிழீழத்தைக் கைவிட்டார்களா என்ற கேள்வி எழுந்தது. ஏனெனில், எந்தவோர் அரசாங்கமும் பேச்சுவார்தைகள் மூலம் தமிழீழத்தை வழங்கப்போவதில்லை. 2002ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் திகதி நடைபெற்ற புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காகக் கிளிநொச்சிக்குச் சென்றிருந்த போது, இத்தனை ஆயிரம் பேர் உயிரிழந்ததன் பின்னர் தமிழீழத்தைக் கைவிடப் போகிறீர்களா என, புலிப் போராளிகளிடம் கேட்டோம். தலைவர் எடுக்கும் முடிவே தமது முடிவாகும் என அவர்கள் பதிலளித்தனர். தேசப்பற்றானது அரசியல் சார்ந்தது என்பதையே இவையெல்லாம் காட்டுகின்றன.

எனவே, மஹிந்த விரும்பியிருந்தால், மனித உரிமைகள் தொடர்பான அந்த விசாரணைகளை அன்றே முறையாக நடத்தி, சர்வதேச வரவேற்பையும் பெற்று நல்லிணக்கத்தையும் ஓரளவுக்காவது ஏற்படுத்திருக்கலாம். அவர் தமது கடமைகளைச் செய்யப் போவதில்லை என்பதை உணர்ந்த ஐ.நா பொதுச் செயலாளர், மேல் நடவடிக்கைகளுக்காக ஒரு குழுவை நியமித்தார். அப்போது மஹிந்த, அவசர அவசரமாகத் தாமும் ஒரு குழுவை, அதாவது கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்தார்.

அந்த ஆணைக்குழுவின் அறிக்கை வெளியானதன் பின்னர், குழந்தைகள் தமது பொம்மைகளை மற்றவர்களுக்குக் காண்பித்து மகிழ்வதைப் போல், அந்த அறிக்கையை வெளிநாட்டுத் தலைவர்களுக்குக் காட்டித் திரிந்தாரேயல்லாது அதன் பரிந்துரைகளை நிறைவேற்ற முன்வரவில்லை. தொடர்ந்தும் அவர் இழுத்தடிக்கும் போது, ஐ.நா தாமாகவே போர் குற்ற விசாரணையை ஆரம்பிக்க முற்பட்டது. அப்போது காணாமற்போனோர் தொடர்பான ஆணைக்குழுவை அவர் நியமித்தார். அந்தக் குழுவும் இழுத்தடித்துக் கொண்டே இருந்தது.

எனவே, ஐ.நா மனித உரிமைகள் பேரவை, போர் குற்ற விசாரணைக்கான குழுவை நியமித்த போது, போரின் போது இடம்பெற்ற மனித உரிமைகள் தொடர்பாக விசாரிக்கும் அதிகாரத்தையும் மஹிந்த காணாமற்போனோர் தொடர்பான ஆணைக்குழுவுக்கே வழங்கினார். இழுத்தடிப்பே அவரது உத்தியாக இருந்தது.

இடம்பெயர்ந்த மக்களைக் குடியமர்த்துவதில் அவருக்கு எந்த அவசரமும் இருக்கவில்லை. போர்க் காலத்தில் உயர் பாதுகாப்பு வலயங்களுக்காக கைப்பற்றப்பட்ட காணிகளை விடுவிக்கவும் எந்த அவசரமும் இருக்கவில்லை. எனவே, சிறுபான்மை மக்கள் மீதான மஹிந்தவின் பரிவு மற்றொரு ஏமாற்றமேயல்லாது, அவர் உண்மையை உணர்ந்தார் என்பதற்கான ஆதாரமல்ல.

அந்த மஹிந்தவைப் பதவியில் இருந்து வெளியேற்ற தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பெரும் பங்கை ஆற்றினர். ஆனால், பிரச்சினை என்னவென்றால் புதிய அரசாங்கமும் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுமா என்ற சந்தேகம் இப்போது எழுந்துள்ளது. ஏனெனில், பொதுநலவாய நாடுகள் உள்ளிட்ட வெளிநாடுகளின் நீதிபதிகள் உள்ளடங்கிய நீதிமன்றமொன்றின் மூலம் போர்க்கால மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கடந்த ஆண்டு பிரேரணைக்கு தாமும் பங்காளி என அறிவித்த புதிய அரசாங்கம், தற்போது அந்த நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்குகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .