2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மெஸ்ஸியின் ஓய்வு: வேண்டாமென ஜனாதிபதியும் மரடோனாவும் கோரிக்கை

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 28 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ள ஆர்ஜென்டீன அணியின் நட்சத்திர வீரர் லியனல் மெஸ்ஸியை, அவ்வாறு ஓய்வுபெற வேண்டாமென்ற குரல்கள் அதிகரித்துள்ளன. ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட ஜாம்பவானான டியகோ மரடோனா, அந்நாட்டின் ஜனாதிபதி மௌரிசியோ மாக்ரி ஆகியோரே, இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோப்பா அமெரிக்கா தொடரின் இறுதிப் போட்டியில் சிலியை எதிர்கொண்ட ஆர்ஜென்டீனா சார்பாக, பெனால்டி உதையில் முதலாவதாக உதைந்த மெஸ்ஸி, அதைத் தவறவிட்டிருந்தார். இதனையடுத்து இறுதிப் போட்டியில், 2-4 என்ற பெனால்டி அடிப்படையில் அந்நாடு தோல்வியடைந்திருந்தது. இப்போட்டியின் முடிவில், சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக, மெஸ்ஸி அறிவித்திருந்தார்.

அவரது இந்த முடிவு, 2018ஆம் ஆண்டு ரஷ்யாவில் இடம்பெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள் தொடர்பான ஆர்ஜென்டீனாவின் தயார்படுத்தலைக் கேள்விக்குள்ளாக்கியிருந்தது.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்த மரடோனா, 'அவரது (மெஸ்ஸி) விளையாடும் நாட்கள், இன்னமும் உள்ளதால், அவர் தொடர்ந்தும் விளையாட வேண்டும். நல்ல போர்மில் ரஷ்யாவுக்குச் சென்று, உலகச் சம்பியனாக வருவார்" எனத் தெரிவித்தார். கடந்த 9 ஆண்டுகளில் ஆர்ஜென்டீனா தோல்வியடைந்த நான்காவது இறுதிப் போட்டி இதுவென்பதால், விமர்சனங்கள் அதிகரித்திருந்த நிலையில், ஆர்ஜென்டீன கால்பந்தாட்டச் சங்கம் மீது, தனது கோபத்தை மரடோனா வெளிப்படுத்தினார்.

'அவர் பதவி விலக வேண்டுமெனத் தற்போது சொல்வோர், ஆர்ஜென்டீன கால்பந்தாட்டம் எவ்வளவு மோசமாக வந்துவிட்டது என்பதை நாம் பார்க்கக்கூடாது என்பதற்காகவே அவ்வாறு சொல்கின்றனர்" என, மரடோனா தெரிவித்ததோடு, மெஸ்ஸிக்கு ஆதரவளிக்க அச்சங்கம் தவறிவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

இந்நிலையில், இவ்விடயம் தொடர்பான ஜனாதிபதி மௌரிசியோ மாக்ரியும் தனது கவனத்தை வெளிப்படுத்தியுள்ளார். 'அவருக்கு (மெஸ்ஸி) ஜனாதிபதி அழைப்பெடுத்து, தேசிய அணியின் பெறுபேறுகள் தொடர்பாக அவர் (ஜனாதிபதி) எவ்வாறு பெருமிதமடைகிறார் என்பதைத் தெரிவித்ததோடு, விமர்சகர்களைக் கேட்க வேண்டாமெனக் கேட்டுக் கொண்டார்" என, ஜனாதிபதியின் பேச்சாளரொருவர் குறிப்பிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .