2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

'மாகாண சபையை குழப்பும் உறுப்பினரை நீக்காதீர்கள்'

Menaka Mookandi   / 2016 ஜூன் 29 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வடமாகாண சபையை வினைத்திறனுடன் செயற்படவிடாமல் தடுக்கும் வகையில், குழப்பங்களை ஏற்படுத்தி வரும் வடமாகாண சபை உறுப்பினர் ஒருவரை இடைநிறுத்துவதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் எடுத்த முடிவை மாற்றுமாறு வலியுறுத்தி, வடமாகாண சபையின் 4 உறுப்பினர்கள், கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

இம்மானுவேல் ஆர்னோல்ட், கேசவன் சயந்தன், அரியகுட்டி பரஞ்சோதி, சந்திரலிங்கம் சுகிர்தன் ஆகியோர் இணைந்தே, இந்தக் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளனர். அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'அண்மையில் இடம்பெற்ற த.தே.கூ.வின் அங்கத்துவக் கட்சிகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் 'மாகாண சபையைக் குழப்புகின்றார்கள்' என்னும் தலைப்பில், ஒரு சில மாகாணசபை உறுப்பினர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்ட முறைப்பாடொன்றை, அங்கத்துவக் கட்சியொன்றின் தலைவர் முன்வைத்ததாக செய்திகள் வெளியாகின.

மேற்படி குற்றச்சாட்டானது, உண்மை நிலையை மறைப்பதற்காக, ஜனநாயக மரபுகளை மதிக்காது, ஜனநாயக செயற்பாடுகளை கொச்சைப்படுத்தும் விதத்தில் முன்வைக்கப்பட்ட கீழ்த்தரமான அரசியல் ரீதியான ஆற்றாமையின் வெளிப்பாடாகவே அமைந்துள்ளது.

இதனை நாம் வன்மையாகக் கண்டிப்பதோடு, அதனை முற்றாக நிராகரித்து மறுதலிக்கின்றோம். இவ்விதம் ஜனநாயக ரீதியாக மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களின் ஆற்றாமையாகவே மேற்படி குற்றஞ்சுமத்தல்கள் அமைந்திருக்கின்றனவே தவிர, உண்மைகள் சுட்டிக்காட்டவில்லை என்பதையும் தெளிவாகத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

'மாகாண சபையைக் குழப்புகிறார்கள்' என்ற குற்றச்சாட்டு, எவ்விதமான அடிப்படைகளும் இல்லாது. உண்மைகளையும் ஆதாரங்களையும் கொண்டிராத விடயம் என்பதை நாம் முதலில் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகின்றோம்.

மேற்படி குற்றச்சாட்டானது, அரசியல் வங்குரோத்துத்தனத்தினதும் முறைகெட்ட அரசியல் எண்ணங்களின் வெளிப்பாடு என்பதை யும்மிகவும் தெளிவாக தெரிவித்து நிற்கின்றோம்' என்று அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .