2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

'வரித்திருத்தத்தை மேற்கொள்ள நடவடிக்கை'

Niroshini   / 2016 ஜூன் 29 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய வரிகள் நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர் நாட்டின் சாதாரண பொதுமக்களின் அன்றாட வாழ்கையில் ஏற்பட்டிருக்கும் அசௌகரியங்களைக் கருத்திற்கொண்டு மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் ஒரு வரித்திருத்தத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கிராந்துருகோட்டை மகாவெலி விளையாட்டரங்கில் இன்று முற்பகல் நடைபெற்ற சிறுநீரக நோய் ஒழிப்பு தொடர்பான தேசிய நிகழ்ச்சித்திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத்

இங்கு  மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“மத்திய வங்கியின் தற்போதைய ஆளுனரின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடைவதால் இன்னும் சில மணித்தியாலங்களில் மத்திய வங்கிக்கு ஒரு புதிய ஆளுனரை நியமிக்கவுள்ளோம்.

அரசாங்க அதிகாரிகளின் வாகன அனுமதிப்பத்திரம்  தொடர்பாக எழுந்துள்ள நிலைமைகளைக் கவனத்திற்கொண்டு அவர்களின் இழந்துபோன சலுகையை மீண்டும் பெற்றுக்கொடுக்க சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், மக்களின் சுகாதாரத்துக்கு பாதிப்பானது என தெரியவந்துள்ள கிலைபோசிட் பீடைக்கொல்லியை இந்நாட்டுக்கு இறக்குமதி செய்வதை அரசாங்கம் தடைசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதற்குப் பதிலாக இறக்குமதி செய்யவுள்ள மாற்று பீடைக்கொல்லி தொடர்பாக தற்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. அவ்வறிக்கை கிடைக்கப்பெற்றதும் அப்பீடைக்கொல்லியும் பயன்பாட்டுக்குப் பொறுத்தமற்றது எனக் கண்டறியப்பட்டால் அதனையும் உடனடியாக தடைசெய்வதற்கு நடவடிக்கை எடுப்படும்” என்றார்.

“இன்று பாரிய சமூகப் பேரழிவாக மாறியிருக்கும் சிறுநீரக நோயை ஒழித்துக்கட்டுவதற்கு முடியுமான எல்லா நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். சிறுநீரக நோய் பரவலாகக் காணப்படும் பிரதேச மக்களுக்கு சுத்தமான குடிநீரைப்பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டங்களும் அடுத்தவருடம் முழுமையாக நிறைவு செய்யப்படும்” என்றும் குறிப்பிட்டார்.

இதன்போது, பதுளை மாவட்ட சிறுநீரக நோய் ஒழிப்பு நடமாடும் சிகிச்சை நிலையம் தொடர்பான அறிக்கை பதுளை மாவட்ட பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் திருமதி ஜனிதா தென்னகோனினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

மேலும், சிறுநீரக நோய்  காரணமாக பெற்றோரை இழந்த உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் 10 மாணவர்களுக்கு அடையாளமாக புலமைப்பரிசில்களும் ஜனாதிபதியினால் வழங்கிவைக்கப்பட்டன.

அத்துடன், சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானங்களைப்பெறும் குடும்பங்களுக்கு வீட்டில் பயன்படுத்தும் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை வழங்குதல், பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு நீர்சுத்திகரிப்பு நிலையங்கள் வழங்குதல், பதுளை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் சிறுநீரக நோயாளிகளை அடையாளங்காணும் நிகழ்ச்சித்திட்டத்துக்கு பங்களித்தவர்களுக்கு விருதுகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்றன.

இதேவேளை, பதுளை பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகமும் ஏனைய நிறுவனங்களும் இணைந்து 'உங்களை நோயின்றி மகிழ்ச்சியாகவைத்திருக்க நாம் இவ்வாறு இணைந்துள்ளோம்' என்ற கருப்பொருளின் கீழ் ஒழுங்கு செய்திருந்த கண்காட்சியையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.

அத்தடன், கிராந்துரு கோட்டே பொதுவைத்தியசாலையின் சிறுநீரகநோய்  சிகிச்சை நிலையத்தையும் பார்வையிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X