2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மனித உரிமைகள் ஆணையாளரின பற்றுறுதியை வரவேற்கின்றோம்

Kogilavani   / 2016 ஜூலை 01 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அரசாங்கத்தின் நீதித்துறையானது, நம்பகத்தன்மையற்றது என்பதால், சுயாதீனமானதும்  பக்கச் சார்பானதுமான பொறுப்புக்கூறல் செயன்முறைக்கு சர்வதேச பங்களிப்பு அத்தியாவசியமான ஒரு கடப்பாடு என்பதில், மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் தொடர்ந்தும் பற்றுறுதியுடன் இருப்பதை நாங்கள் வரவேற்கிறோம்' என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32ஆவது கூட்டத் தொடரில், இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை ஆணையாளரின் அறிக்கை பற்றி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நேற்று வியாழக்கிழமை (30) உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார். அவரது உரையில்,

'இலங்கை அரசாங்கத்தினால் இழைக்கப்பட்ட பெரும் குற்றங்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களாகிய தமிழர்களும், இதே காரணத்துக்காகவே, பொறுப்புக்கூறல் செயன்முறைகள் உள்ளக ரீதியாக நிர்வகிக்கப்படுவதை நிராகரித்தும், சர்வதேச பொறுப்புகூறல் செயன் முறைகளையும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்கள்.

இருந்த போதிலும், துரதிர்ஷ்டவசமாக இச்சபையில் கடந்த 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட 30ஃ1 இலக்க தீர்மானமானது, ஏறத்தாழ ஓர் உள்ளகப் பொறிமுறையினையே ஏற்படுத்தி அதில் வெளிநாட்டு  மற்றும் பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகள், வழக்குத்தொடுநர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் விசாரணையாளர்களை ஈடுபடுத்துவதை ஊக்குவிப்பதாக தெரிவித்து இருந்தது.

இப்படியாக, குறிப்பிடத்தக்க தளர்வுபோக்கை  இலங்கை அரசுக்கு, மனித உரிமைகள் பேரவை வெளிப்படையாக காட்டியிருந்த போதிலும், இலங்கை அரசாங்கமானது, பொறுப்புக்கூறல் செயன்முறையின் மிக அடிப்படையான விடயத்திலிருந்து பின்வாங்கிச் செல்வதில் மிகமுனைப்புடன் செயற்படுகின்றது.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பொறுப்புக்கூறல் பொறிமுறையில் வெளிநாட்டு பங்குபற்றல் தொடர்பாக இந்த அவைக்கு எந்த ஒரு வாக்குறுதியை வழங்கினாலும், இலங்கை அரசில் அவரைவிட    பொறுப்பும் அதிகாரமும் மிக்க இலங்கையின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் போன்றவர்களே  இந்த அவைக்கு வழங்கப்படும் வாக்குறுதிகளை தொடர்ச்சியாக  நிராகரித்து வருகிறார்கள். அதாவது  இலங்கையின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் சிங்கள மக்களுக்கு பொறுப்புக்கூறல் பொறிமுறையில் வெளிநாட்டு பங்குபற்றல் இருக்காது என்பதனை தொடர்ச்சியாக தெளிவாகவும் அழுத்தமாகவும் தெரிவித்து வருகின்றனர்.   இச்செயற்பாடுகள்,  பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசின் அரசியல் விருப்பின்மையை தெட்டத்தெளிவாக பிரதிபலிக்கின்றது.

தமிழருக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களுக்கான  தண்டனைகளில் இருந்து குற்றவாளிகளை தப்ப வைக்கும் விடயத்தில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த இலங்கை அரசுகள், உறுதியாக இருந்து வந்துள்ளன. தமிழ் மக்கள், தமக்கு எதிராக இன அழிப்பு நடைபெற்றது என்ற குற்றச்சாற்றை முன் வைக்கும் நிலையில், பொறுப்புக்கூறல் பொறிமுறையில் வெளிநாட்டு பங்குபற்றல் என்ற அடிப்படை வாக்குறுதியிலிருந்து இலங்கை அரசாங்கமானது விலகாதிருக்க,  உறுப்பு நாடுகள் காத்திரமான நடவடிக்கை எடுக்கும்படி நாம் அவர்களை ஆணித்தரமாக வேண்டி நிற்கின்றோம்' என்று அவர் உரையாற்றினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X