2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ரூ.2,500 இல்லையேல் பொறுக்கமாட்டோம்

Kogilavani   / 2016 ஜூலை 01 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இடைக்காலக் கொடுப்பனவாக வழங்கப்படுவதாகக் கூறப்பட்ட 2,500 ரூபாயை எதிர்வரும் 10ஆம் திகதி வழங்காவிட்டால் வரலாறு காணாத மனித போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

'2,500 ரூபாயை பெற்றுக்கொடுப்பதற்காக நாடாளுமன்றத்துக்குள் எரிபொருளை கொண்டு சென்று போராட்டம் நடத்தினேன். தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் கொள்கை அளவில் இணைந்து செயற்பட்டு, எமது தொழிலாளர்களுக்கு இத்தொகையைப் பெற்றுக்கொடுக்க பாடுபட்டு வருகின்றேன். ஆனால், தோட்ட நிர்வாகங்கள் மற்றும் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் இத்தொகையை வழங்காமல்  சாக்குப்போக்குக் கூறி வருகின்றது' என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,  

'எனது தொப்புள்கொடி உறவானவர்களே தோட்டத் தொழிலாளர்கள். எனது மக்கள் எதிர்கொள்ளும் சம்பள பிரச்சினைக்காக நாடாளுமன்ற உறுப்பினராக அல்லாது தனிமனிதனாக நின்று போராடுவேன். என் மக்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையின் காரணமாகவே நான் வாக்குக் கேட்கும் ஒவ்வொரு சின்னங்களிலும் வெற்றி பெறுகிறேன்.

என் மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுக்க சம்பளத்தை உடனடியாக உயர்த்தித் தரும்படி அரசாங்கத்தை வலியுறுத்தி அன்று எரிபொருளுடன் நாடாளுமன்றத்துக்குச் சென்றேன். ஆனால், இதுவரை சம்பள உயர்வு விடயத்தில் அரசாங்கமும்  கம்பனிகளும்   தீர்வைப் பெற்றுத்தரவில்லை.

எனவே, கடைசியாக எச்சரிக்கின்றேன். தொழில் அமைச்சர் உறுதியளித்தவாறு எதிர்வரும் 10ஆம் திகதி 2,500 ரூபாயை தொழிலாளர்களுக்கு வழங்காவிட்டால் வரலாற்றில் எழுதக்கூடியவாறு மனிதப் போராட்டத்தை நடத்துவேன். இதற்காக அனைவருக்கும் அறைக்கூவல் விடுகின்றேன்' என்றார்.

'தேர்தல் காலங்களில் முன்வைக்கப்பட்ட 1,000 ரூபாய் சம்பள உயர்வுக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. த.மு.கூ வின் கொள்கையான 2,500 ரூபாய்க்கும் எனது கொள்கைக்கும் இடையில் ஒற்றுமை காணப்படுவதால்தான், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக பதுளை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டினேன். நான் கொள்கை அளவிலேயே த.மு.கூயில் இணைந்து செயலாற்றி வந்தேன்' எனவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .