2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

யாசகம்

Suganthini Ratnam   / 2016 ஜூலை 01 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முகம்மது தம்பி மரைக்கார்

'உங்களில் ஒருவர் ஒரு கயிற்றை எடுத்துக்கொண்டு, தன்னுடைய முதுகில் விறகுக்கட்டைச் சுமந்து விற்று வாழ்வது மக்களிடம் யாசகம் கேட்பதை விடச் சிறந்ததாகும். இதன் மூலம் அல்லாஹ் அவனுக்கு இழிவு ஏற்படாமல் தடுத்துவிடுவான். மக்கள் அவனுக்கு கொடுக்கவும் செய்யலாம் அல்லது மறுக்கவும் செய்யலாம்' என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி 1471)

பிச்சை எடுப்பதென்பது வெறுப்புக்குரியதொரு செயலாகும். அதனை அநேகமானோர் வெறுக்கின்றார்கள். யாசகம் கேட்பதை இஸ்லாமும் வெறுக்கிறது என்பதற்கு மேலுள்ள ஹதீஸ் ஓர் ஆதாரமாகும்.

பிச்சைக்காரர்கள் இப்போதெல்லாம் தொல்லையாக மாறிவிட்டார்கள். உழைக்கக்கூடிய உடல் பலமும் ஆரோக்கியமும் கொண்ட பலர், பிச்சை எடுப்பதைக் காணும்போது, பிச்சைக்காரர்கள் மீதான அதிருப்தியும் கோபமும் இன்னும் அதிகமாகிறது.

பிச்சைக்காரர்கள் பற்றிய சுவாரசியத் தகவல்கள் ஏராளம் உள்ளன. பிச்சை எடுத்து பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துகளைச் சேர்த்துக் கொண்டவர்கள் உள்ளனர். ஆனாலும், பிச்சை எடுப்பதை அவர்கள் இன்னும் தொழிலாகவே கொண்டுள்ளார்கள். அவர்கள் பற்றிய செய்திகளை ஊடகங்களில் நாம் கண்டு வருகின்றோம். உதாரணமாக, கடந்த வருடம் இந்தியாவின் பணக்காரப் பிச்சைக்காரர்கள் சிலரை அந்த நாட்டு ஊடகங்கள் அம்பலப்படுத்தியிருந்தன. பரத் ஜெய்ன் என்பவர் இந்தியாவிலுள்ள பிச்சைக்காரர்களில் அதிக செல்வம் மிக்கவராவார். ஆசாமிக்கு 50 வயதுதான் ஆகிறது. மும்பாயைச் சேர்ந்தவர். சொந்தமாக இரண்டு அடுக்குமாடி வீடுகளை வைத்துள்ளார். ஒரு அடுக்குமாடியின் இலங்கை நாணயப் பெறுமதி கிட்டத்தட்ட ஒன்றரைக் கோடி ரூபாய். இதுபோக, குளிர்பான கடையொன்றை வாடகைக்கு விட்டும் சம்பாதிக்கிறார். அந்த வாடகை மட்டும் இலங்கைப் பெறுமதியில் 20 ஆயிரத்துக்கும் அதிகமாகும். ஆனாலும், பரத் ஜெய்ன் பிச்சை எடுப்பதை மட்டும் நிறுத்தவேயில்லை.

எல்லாப் பிச்சைக்காரர்களும் மேலே சொன்னவர் போல் இல்லை என்பது உண்மையே.  ஆனாலும், பிச்சை எடுப்பவர்களில் கணிசமானவர்கள் உழைத்துச் சம்பாதிக்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருக்கின்றார்கள் என்பதும் மறுக்கவியலாத உண்மையாகும்.

வீடு, வீடாகப் பிச்சை எடுப்பவர்கள் இப்போதெல்லாம் தொல்லை தருபவர்களாக மாறியுள்ளனர். இவர்கள் பிச்சை எடுக்க வரும்போது தமது கைகளில், தாள் காசுகளை வெளியில் தெரியும்படி அடுக்கி வைத்துக்கொள்கின்றனர். இது திட்டமிட்டதொரு செயலாகும். 'தாள் காசுகளையே எனக்கு நீ வழங்க வேண்டும்' என்று, இதன் மூலம் யாசகம் கொடுப்பவனுக்கு குத்துக்குறிப்பால் இவர்கள் உத்தரவிடுகின்றனர். தற்போது 10 ரூபாயை விடவும் குறைந்த தொகையில் தாள் காசுகள் புழக்கத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு வருகின்றவர்களுக்கு இரண்டு ரூபாயோ ஐந்து ரூபாயோ யாசகமாகக் கொடுத்தால் அதை வாங்காமல் மறுத்து விடுகின்றனர். அல்லது, அதை தூக்கி வீசிவிட்டுப் போகின்றனர்.

ஆரோக்கியமான தோற்றத்தைக் கொண்ட பெண்ணொருவர், நண்பர் ஒருவரின் வீட்டுக்கு பிச்சை எடுக்க வந்திருந்தார். உழைத்துச் சம்பாதிக்கக்கூடிய ஆற்றலுள்ள அந்தப் பெண்ணுக்கு பிச்சை வழங்க நண்பரின் மனைவி விரும்பவில்லை. தனது வீட்டு முற்றத்திலுள்ள குப்பைகளைப் பெருக்கி சுத்தப்படுத்தி, இன்னும் சில சிறிய வேலைகளையும் செய்து தந்தால், 200 ரூபாய் பணம் தருவதாக நண்பருடைய மனைவி, அந்தப் பெண்ணிடம் கூறினார்.

மேற்சொன்ன வேலைகளைச் சாதாரணமாக ஒரு மணித்தியாலத்துக்குள் செய்து முடித்து விடலாம். ஆனால், அதைச் செய்வதற்கு தன்னால் முடியாது என்று சொன்ன அந்தப் பெண், அடுத்த வீட்டுக்கு கையேந்தச் சென்று விட்டார்.

பிச்சைக்காரர்கள் பலருக்கு உழைப்பதற்கான சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போதும், அவர்கள் அதனை ஏற்பதில்லை என்பதை மேலுள்ள சம்பவம் சுட்டிக்காட்டுகிறது.

பிச்சை எடுப்பதற்கு இப்படித்தான் இருக்க வேண்டும் என்றெல்லாம் கிடையாது. தன்மானத்தை இழக்கத் துணிந்தவர்கள் பிச்சை எடுக்கும் முடிவுக்கு வருகின்றனர். கிழக்கு மாகாணத்தில் பிச்சை எடுப்பவர்களில் கணிசமானோர் முஸ்லிம்களாக உள்ளனர். இவர்களில் குறிப்பிட்ட சில ஊர்களைச் சேர்ந்தவர்கள் அதிகமதிகம் யாசகர்களாக உள்ளனர்.

இது குறித்து, சம்பந்தப்பட்ட பிரதேசத்திலுள்ள பொது அமைப்புகள், அரசியல்வாதிகள் அக்கறை செலுத்த வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களின் சொந்த ஊர்களிலிருந்து யாசகம் பெறுவதற்காக வெளியூர் வருகின்றவர்களின் எண்ணிக்கை, கிழக்கில் கணிசமானதாகும்.

கிழக்கு மாகாணத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்கள் செல்வதை நிறுத்த வேண்டும் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட், அடிக்கடி சூழளூரைத்து வருகின்றமையை அடிக்கடி அவதானிக்க முடிகிறது. மேற்படி பெண்களுக்கு உள்நாட்டில் சுயதொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுப்பதன் மூலம் அவர்கள் வெளிநாடு செல்வதை முற்றாக நிறுத்திவிடலாம் என்றும் முதலமைச்சர் நஸீர் அஹமட் கூறிவருகின்றார். இது நல்லதொரு சிந்தனை என்பதில் மாற்றுக் கருத்துகள் இல்லை. அதேவேளை, கிழக்கு மாகாணத்தில் யாசகம் பெறுகின்றவர்கள் தொடர்பிலும் இவ்வாறானதொரு திட்டத்தை  அமுல்படுத்துவதற்கு முதலமைச்சர் முயற்சிக்க வேண்டும். முதலமைச்சரின் சொந்த மாவட்டமான மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து கணிசமானோர் யாசகம் வேண்டி பிற பிரதேசங்களுக்குச் செல்கின்றார்கள் என்பது கசப்பான உண்மையாகும்.

குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களில் கணிசமானோரும் யாசகம் பெறுபவர்களாக உள்ளனர். அந்தச் சமூகத்தினரின் வாழ்க்கை நிலை, மிகவும் கவலைக்குரியதாகும். முன்பெல்லாம் குறவர்கள் வேட்டையாடுவதன் மூலம் கிடைக்கும் உணவு மற்றும் வருமானம் மூலம் தமக்கான ஜீவனோபாயங்களைப் பெற்று வந்தனர். ஆனால், யுத்தத்தின் பின்னர் பாதுகாப்புத் தரப்பினரின் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக இவர்களால் வேட்டையாட முடிவதில்லை. இதனால், இவர்கள் தமது வாழ்வாதாரத்தைச் சடுதியாக இழக்க நேரிட்டது. மாற்றுத் தொழிலாக நன்னீர் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு இவர்கள் முயற்சித்தபோது, அதற்கும் அந்தந்தப் பிரதேசத்திலுள்ள நன்னீர் மீனவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால், இந்த மக்கள் வருமானம் பெறும் வழிகளின்றி உள்ளனர். எனவே, இந்தச் சமூகத்தைச் சேர்ந்த கணிசமானளவு பெண்கள், யாசகம் பெறுபவர்களாக உள்ளனர்.

குறவர் சமூகத்தவர்களின் வாழ்க்கைத்தரமானது மிகவும் கீழ்நிலையிலுள்ளது. அவர்கள் தொடர்பில் அரசாங்கம் போதியளவு கவனம் செலுத்தவில்லை என்பது வெளிப்படை உண்மையாகும். அம்பாறை மாவட்டம் அளிக்கம்பைப் பிரதேசத்தில் குறவர்கள் வாழ்ந்து வருகின்றனர். அங்கு சென்று பார்த்தால், குறவர் சமூகம் தொடர்பில் ஆட்சியாளர்களின் அக்கறையின்மையைப் புரிந்து கொள்ள முடியுமாக இருக்கும்.

சிலர் தமது நாளாந்த தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு பிச்சை எடுத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது ஒருபுறமிருக்க, பிச்சை எடுத்தல் என்பது உலகளவில் பாரியதொரு தொழிலாகவும் உள்ளது.

சிறுவர்களையும் வயதானவர்களையும் பிச்சை எடுக்க வைத்து அதனால், கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் மாபியா கும்பல்களும் உள்ளன. தமிழில் வெளிவந்த 'நான் கடவுள்' திரைப்படம், பிச்சை எடுக்கவைத்து உழைக்கும் மாபியா கும்பல் குறித்து பேசுகிறது.
 
இலங்கையைப் பொறுத்தவரை இவ்வாறான கும்பல்கள் குறைவாகும். பிச்சை எடுக்கவைத்து உழைக்கும் மாபியாக்கள் கிராமப்புறங்களில் இல்லை.

'பசிக்கிறது என்று பிச்சை கேட்பவர்களுக்கு பணம் கொடுக்காதீர்கள். அவர்களுக்கு, ஒரு உணவுப்பொதியை வாங்கிக்கொடுங்கள்' என்று சிலர் கூறுவதுண்டு. பிச்சை எடுப்பவர்களில் கணிசமானோர் தமக்குக் கிடைக்கும் பணத்தில் சிகரெட், சாராயம் மற்றும் போதைப்பொருளை வாங்கி நுகர்கின்றவர்களாக உள்ளனர். எனவே, அதனைத் தவிர்க்கும் நோக்கில் பசி என்று வருபவருக்கு உணவை வாங்கிக் கொடுக்குமாறு கூறப்படுவதுண்டு. நம்மவர்களும் இதற்கொப்ப 'பசிக்கிறது' என்று கூறும் பிச்சைக்காரர்களுக்கு சோற்றுப் பொதியை வாங்கிக் கொடுக்கத் தொடங்கினார்கள். இதனால், கணிசமான பிச்சைக்காரர்களுக்கு ஒவ்வொரு நாளும் ஏராளமான சோற்றுப் பொதிகள் கிடைக்கத் தொடங்கின. அவற்றைக் கடையில் விற்பதை விடவும் சற்றுக் குறைவான விலையில் விற்று இவர்கள் காசாக்கி விடுகின்றனர். நகர் பகுதிகளிலேயே இந்தக் கூத்து அதிகம் நடக்கிறது.

எமது நாட்டில் நகர்ப் பகுதிகளிலுள்ள பொது இடங்களில் பிச்சை எடுக்கின்றவர்களை அவ்வப்போது பொலிஸார் கைதுசெய்வதுண்டு. ஆனால், கிராமப்புறங்களில் இது குறித்து பொலிஸார் அலட்டிக் கொள்வதேயில்லை. பிச்சை எடுக்கும் நடைமுறை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அதேவேளை, உண்மையாகவே பிச்சை எடுக்கும் நிலையிலுள்ளவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளுதல் அவசியமாகும். தீர்வுத் திட்டங்கள் எவையுமின்றி பிச்சைக்காரர்களை ஒழிக்கிறேன் என்று களத்தில் குதிப்பதால் மட்டும் எதையும் சாதித்துவிட முடியாது.

ஒரு சமூகம் எந்த நிலையிலுள்ளது என்பதை அந்தச் சமூகத்தின் சில பண்புகளை வைத்து அறிந்துகொள்ள முடியும். பிச்சை எடுப்பவர்கள் எல்லோரும் அதை விரும்பி ஆசையோடு செய்வதில்லை. இனி எதற்கும் முடியாது என்கிற நிலையிலேயே அநேகமானவர்கள் யாசகம் கேட்கும் நிலைக்கு ஆளாகின்றார்கள்.

அதனால், யாசகம் கேட்டு வருகின்றவர்களிடத்தில் கருணையோடு நடந்துகொள்ளவும் வேண்டியுள்ளது.

 
   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .