2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

10 அபிவிருத்திகளுக்காக நிதி ஒதுக்கீடு

Suganthini Ratnam   / 2016 ஜூலை 01 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

கல்முனை மாநகர சபையால், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சுக்கு முன்மொழியப்படட பத்து  அபிவிருத்தி திட்டங்களுக்காக அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் சுமார் இருபது கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாநகர முதல்வர் எம்.நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.

நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற கல்முனை மாநகர சபை அமர்விலேயே அவர் இதனைக் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;
'நூறு நகரங்களை அபிவிருத்தி செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, கல்முனை நகரம் அத்திட்டத்தினுள் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. எனினும் ஆட்சி மாற்றத்தின் பின்னர் அந்த அமைச்சை  முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பொறுப்பேற்றதன் பயனாக அந்த நூறு நகரங்களின் அபிவிருத்தி திட்டத்தில் கல்முனை நகரம் சேர்க்கப்பட்டு, இந்நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத்திட்டத்தில் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சுக்கு திறைசேரியினால் ஒதுக்கப்பட்டுள்ள 250 கோடி ரூபாய் நிதியில் எமது வேண்டுகோளின் பேரில் கல்முனை மாநகர சபையின் பத்து பாரிய அபிவிருத்தி திட்டங்களுக்காக அமைச்சர் ரவூப் ஹக்கீம் சுமார் இருபது கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்திருப்பதானது பெரும் வரப்பிரசாதமாகும். அதற்காக எமது மாநகர சபையின் சார்பிலும் மக்கள் சார்பிலும் அவருக்கு மிகுந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்து கொள்கின்றேன்.

இதன் பிரகாரம் சாய்ந்தமருது தோணா நவீனமயமாக்கல் திட்டத்துக்கு பத்து கோடி ரூபாயும் கல்முனை பொதுச் சந்தை அபிவிருத்திக்கு இரண்டு கோடியே அறுபது இலட்சம்  ரூபாயும் கல்முனை ஏ.ஆர்.மன்சூர் பொது நூலக அபிவிருத்திக்கு இரண்டு கோடியே 25 இலட்சம் ரூபாயும் கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மாகாணத்தின் பார்வையாளர் அரங்கின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிக்கு ஒரு கோடியே எழுபது இலட்சம் ரூபாயும் மருதமுனையில் மாநாட்டு மண்டபம் ஒன்றை அமைப்பதற்காக ஐந்து கோடியே 90 இலட்சம் ரூபாயும் நற்பிட்டிமுனை அஷ்ரப் ஞாபகார்த்த விளையாட்டு மைதான அபிவிருத்திக்கு ஒரு கோடி ரூபாயும் சேனைக்குடியிருப்பு மற்றும் இஸ்லாமாபாத் பிரதேசங்களில் சமூக வைத்திய நிலையங்கள் அமைப்பதற்கு தலா 45 இலட்சம் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் கல்முனை மாநகர பிராந்தியத்தின் வெள்ள அபாய பாதுகாப்பு திட்டத்திற்கு ஒரு தொகை நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு நன்றி தெரிவிக்கும் பிரேரணையும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X