2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

'சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை விடயம் இழுத்தடிக்கப்படக்கூடாது'

Suganthini Ratnam   / 2016 ஜூலை 01 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

சாய்ந்தமருது உள்ளூராட்சி சபையை ஸ்தாபிக்கும் விடயம் இனியும் இழுத்தடிக்கப்படக்கூடாது என கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீட் கோரிக்கை விடுத்துள்ளார்.

கல்முனை மாநகர சபையின் அமர்வு நேற்று வியாழக்கிழமை மாலை மாநகர முதல்வர் எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, 'சாய்ந்தமருது மக்கள் மிக நீண்ட நாட்களாக தங்களுக்கென தனியான உள்ளூராட்சிமன்றத்தைக் கோரி வருகின்றனர். 1924ஆம் ஆண்டு முதல் 1981ஆம் ஆண்டுவரை கரைவாகு தெற்கு கிராமாட்சி மன்றம் எனும் பெயரில் அது இயங்கி வந்துள்ளது.

1972ஆம் ஆண்டு அன்றைய சிறிமாவோ அம்மையார் அரசாங்கம் முதலாவது குடியரசு சாசனத்தை அறிமுகப்படுத்தியதன் விளைவாக நாட்டிலுள்ள உள்ளூராட்சிமன்றங்கள் அனைத்தும் விசேட ஆணையாளரின் கீழ் கொண்டுவரப்பட்டது. 1981ஆம் ஆண்டு அன்றைய ஐ.தே.க. அரசாங்கம், மாவட்ட அபிவிருத்தி சபை முறைமையை அறிமுகப்படுத்தியதால், உள்ளூராட்சிமன்றங்கள் அனைத்தும் மாவட்ட அபிவிருத்தி சபை உப அலுவலகம் என அழைக்கப்பட்டது. 1985ஆம் ஆண்டு பிரதேச சபைகள் சட்டம் அமுலுக்கு வந்ததனால் கரைவாகு தெற்கு கிராமாட்சி மன்றம், கல்முனை பட்டிண சபையுடன் இணைக்கப்பட்டு ஒரு பிரதேச சபையாக பிரகடனம் செய்யப்பட்டது.

இது சாய்ந்தமருது மக்களுக்கு செய்த பெருத்த அநீதியாகும். இதனை ஏற்றுக்கொள்ளாத சாய்ந்தமருது மக்கள் சார்பில் புத்திஜீவிகள், பொது அமைப்பினர் இணைந்து தனியான உள்ளூராட்சிமன்றத்தை பெற்றுக்கொள்ள வேண்டுமென்பதற்காக காலத்திற்கு காலம் வந்த உள்ளூராட்சி அமைச்சர்களை சந்தித்து கோரிக்கையினை முன்வைத்து வருகின்றனர். ஆனால், அந்த முயற்சி இன்னும் கைகூடாமல் இருந்து வருவது வேதனைக்குரிய விடயமாகும்.

எமது மாநகர சபையின் ஆயுட்காலம் நிறைவுக்கு வருகின்ற நிலையில் உள்ளூராட்சித் தேர்தலானது அடுத்த வருடம் ஜூன் மாதமளவிலேயே நடைபெறக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஆகையினால் அடுத்த தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சிமன்றத்தை நிறுவுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இந்த சபையில் வலியுறுத்துகின்றேன்.

அம்பாறை மாவட்டத்திலுள்ள காரைதீவு, ஆலையடிவேம்பு, லகுகல, இறக்காமம், நாவிதன்வெளி போன்ற பிரதேச சபைகளுடன் ஒப்புநோக்கும்போது சாய்ந்தமருது ஒரு நகர சபையாக மிளிர்வதற்கான தகுதியை கொண்டிருக்கிறது' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .