2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

'நல்லாட்சியில் நாம் பொறுப்பேற்றது திருட்டு பூமியையே'

Thipaan   / 2016 ஜூலை 04 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச, யொஹான் பெரேரா, பிரசாத் ருக்மல்

'எங்களுடைய முதலாவது ஆண்டில், எங்களுடைய செயலாற்றுகை குறித்துச் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். சிங்கப்பூரையோ அல்லது டுபாயையோ நாம் பொறுப்பேற்கவில்லை. மாறாக, திருட்டும் ஊழலும் நிறைந்திருந்த பூமியையே பொறுப்பேற்றோம்' என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்றுத் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கான நிகழ்ச்சித் திட்டமொன்றில் பதுளையில் வைத்து உரையாற்றிய போதே, பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டின் நலனுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட எந்தவோர் அரசியல் கட்சியுடனும் இணைந்து செயற்படுவதே தற்போதைய அரசாங்கத்தின் விருப்பமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கட்சியொன்று, தனது விருப்பத்துக்கு ஏற்பட அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க ஆரம்பிக்குமாயின், அரசாங்கத்துக்கு எதிராக, ஏனைய கட்சிகள் ஒன்றிணையும் என, பிரதமர் ரணில், இதன்போது குறிப்பிட்டார். 'எங்களுக்கெதிராக யாரும் செயற்படுவதைத் தடுப்பதற்காக, எவருடனும் இணைந்து செயற்படக்கூடிய தேசிய அரசாங்கமொன்றை நாம் உருவாக்கியுள்ளோம். தேசிய அரசாங்கத்தின் அங்கமாக இருக்கின்ற எவரும், நல்லதையும் கெட்டதையும் பகிர்வதற்கான திறனைக் கொண்டிருக்கின்றனர்' என அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போதைய அமைச்சரவையில் பதுளையைச் சேர்ந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஹரின் பெர்ணான்டோவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நிமால் சிறிபால டி சில்வாவும் அங்கம் வகிப்பதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், அவர்களை உதாரணமாகக் குறிப்பிட்டார். 'கடந்த காலங்களில் ஒருவருக்கொருவர் எதிரியாக இருந்துவிட்டு, தற்போது அமைச்சர்கள் நிமால் சிறிபால டி சில்வா, ஹரின் பெர்ணான்டோ இருவரும் ஒரே அமைச்சரவையில் காணப்படுகின்றனர். அரசியல் எதிரிகள் அனைவரையும் ஒன்றாகக் கொண்டுவருவதே, எமது நோக்கமாகும்' என அவர் தெரிவித்தார்.

புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர், அதனுடைய செயற்றிறன் பற்றிய கேள்விகள், பரவலாக எழுப்பப்பட்டன. உள்ளூரிலும் வெளிநாட்டிலும், புதிய அரசாங்கம் மெதுவாகச் செயற்படுகிறது என்ற குற்றச்சாட்டுகள் காணப்பட்டன. அவற்றுக்கும், பிரதமர் ரணில் பதிலளித்தார்.

'எங்களுடைய முதலாவது ஆண்டில், எங்களுடைய செயலாற்றுகை குறித்துச் சிலர் கேள்வியெழுப்புகின்றனர். சிங்கப்பூரையோ அல்லது டுபாயையோ நாம் பொறுப்பேற்கவில்லை. மாறாக, திருட்டும் ஊழலும் நிறைந்திருந்த பூமியையே பொறுப்பேற்றோம். இந்த நாடு, தனிமைப்படுத்தப்பட்டிருந்தது, கொலைகாரர்களின் நிலம் எனப் பார்க்கப்பட்டது. ஆனால், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீரவின் நடவடிக்கைகளால், நேர்முகமான ரீதியில் இலங்கையை சர்வதேசம் நோக்குகிறது' என பிரதமர் ரணில் தெரிவித்தார்.

முன்னைய அரசாங்கத்தால் நிர்மாணிக்கப்பட்டு, தோல்வியடைந்த செயற்றிட்டமாகக் கருதப்படும் மத்தல விமான நிலையத்தை, மீளவும் உயர்நிலைக்குக் கொண்டுவருவது குறித்தும், பிரதமர் ரணில் கவனம் செலுத்தினார். அந்த விமான நிலையத்தை, தினமும் 50 விமானங்கள் செல்லும் ஒன்றாக மாற்றவுள்ளதாக, பிரதமர் இதன்போது தெரிவித்தார். அத்தோடு ஹம்பாந்தோட்டை, காலி, அறுகம்குடா, பதுளை ஆகியவற்றை இணைத்து, சுற்றுலாத்துறை வலயமொன்றும் உருவாக்கப்படுமெனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .