2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அமெரிக்கா: கறுப்பர்களின் புதைகுழி

Thipaan   / 2016 ஜூலை 20 , பி.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

கட்டமைக்கப்பட்ட மாயைகள் உடையும் போது ஏற்படும் அதிர்வுகள் பல்வகைப்படும். அவை வௌவேறு வகைகளில் மாறுவதோடு வசதிக்கேற்பப் பொருள்கொள்ளப்படுகின்றன. கறுப்பு அழகிய நிறம்ƒ அதை ஓர் அடையாளமாக, வெறுக்கத்தக்கதாக மாற்றிய பெருமை வெள்ளை நிறவெறியைச் சாரும். அதன் வழியிலேயே 'வெள்ளையானவன் பொய் சொல்ல மாட்டான்' போன்ற பொதுப்புத்தி மனநிலைகள் கட்டமைகின்றன. ஆனால் உலகெங்கும் நிறத்தின் பெயரால் சொல்லொணாக் கொடுமைகள் அரங்கேறுகின்றன. அவை ஜனநாயகத்தின் பெயரால் நியாயப்படுத்தவும் படுகின்றன.

இவ்வாண்டு முழுவதும் அமெரிக்காவில் கறுப்பினத்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வுகள் தொடராக நடைபெற்றுள்ளன. இம்மாதம் இடம்பெற்றவை அமெரிக்க ஜனநாயகத்தின் கோர முகத்தைத் தோலுரித்துக் காட்டுகின்றன. அமெரிக்காவில் பொலிஸார் அப்பாவிக் கறுப்பினத்தவர்களைச் சுட்டுக் கொல்வதும் பொய்க் குற்றம் சுமத்திச் சிறையில் அடைப்பதும் வதைப்பதும் வழமையான நிகழ்வுகள்.

இவை விடாது நடைபெறினும் கறுப்பர்கள் குற்றவாளிகள், அதனாலேயே அவர்கள் தண்டனைக்குள்ளாகிறார்கள் என்ற படிமத்தை ஊடகங்களும் பிற கருவிகளும் பொதுப்புத்தி மனநிலையாக்கியுள்ளன. அதேவேளை, கறுப்பர்கள் வெள்ளையர்களுக்குச் சமமாக நடத்தப்படுகிறார்கள் எனவும் அமெரிக்க ஜனநாயகம் கறுப்பினத்தவர் ஒருவரை ஜனாதிபதியாகத் தெரிவுசெய்திருக்கின்றது எனவும் பேசுவதால் அமெரிக்காவில் வாழும் சாதாரணமான கறுப்பின மக்கள் மீதான வன்முறைகளும் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளும் கவனத்தைப் பெறத் தவறுகின்றன.

இம்மாத நிகழ்வுகள் மூன்று அமெரிக்காவை இரண்டாக பிரித்துள்ளன; ஒன்று வெள்ளை மற்றது கறுப்பு. இம்மாதம் ஆறாம் திகதி லூயிசியானா மாநிலத்தில் சி.டிக்களை விற்றுக் கொண்டிருந்த அல்டன் ஸ்ரேலிங் என்ற கறுப்பினத்தவரை இரண்டு பொலிஸார் சுட்டுக் கொன்றனர். இந்நிகழ்வை அது நடந்த இடத்தில் நின்றோர் ஒளிப்பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியதால் அது உலகறியப்பட்டது. நிகழ்வின் நேரடிச் சாட்சியான ஒருவர், சம்பவம் இடம்பெற்ற கடை உரிமையாளர் ஸ்ரேலிங் அப்பாவி என்றும் பொலிஸார் விசாரிப்பதற்காக எனச் சொல்லியபடி அருகில் வந்து சுட்டதாகவும் சொல்லியிருக்கிறார். 37 வயதான அல்டன் ஸ்ரேலிங் ஐந்து குழந்தைகளின் தந்தையாவார்.

இந்நிகழ்வைத் தொடர்ந்து அப்பகுதியில் அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்த கறுப்பினத்தவர்களைப் பொலி

ஸார் அடித்து விரட்டியதோடு பலரைக் கைதுசெய்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக அமைதியான ஆர்ப்பாட்டம் எதையும் நடத்தவியலாதபடி பொலிஸார் வன்முறையைப் பிரயோகித்து வந்துள்ளனர். நிகழ்வின் காணொளியை முதலில் பதிவேற்றிய கிறிஸ் லெடே என்பவரை இராணுவப் பாதுகாப்புப் பிரிவினர் கைது செய்து மோசமாகச் சித்திரவதை செய்துள்ளனர். கறுப்பரான லெடேயை கைது செய்து இழுத்துச் செல்லும்போது தேடப்படும் குற்றவாளியை ஒத்ததாக இவர் இருப்பதாகச் சொல்லப்பட்டது. பின்னர் 2014 ஆம் ஆண்டு தண்டப் பணத்தைக் கட்டத் தவறியமைக்காக அவரைக் கைது செய்ததாக சொல்லப்பட்டது. அடுத்து 1,231 அமெரிக்க டொலர்களைத் தண்டமாகச் செலுத்திய பின் அவர் விடுதலையானார். தண்டப்பணத்தை 2014 ஆம் ஆண்டே செலுத்திய போதும், கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட பின் அவர் தனது தொழிலை இழந்துள்ளார். இவ்வாறு அவர் பழிவாங்கப்பட்டார். சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட இரண்டு பொலிஸாரும் ஏற்கெனவே கறுப்பின இளைஞர் ஒருவரைக் காரணமின்றிச் சுட்டுக் கொன்றவர்கள். அவர்களுக்கு எதிராக அப்போதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இப்போதும் அவர்களுக்கெதிராக எந்தச் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஊடகங்கள், அல்டன் ஸ்ரேலிங் ஒரு குற்றவாளியென்றும் பொலிஸார் தற்காப்புக்காகச் சுட்டதாகவும் எழுதிக் கொலையை நியாயப்படுத்துவதோடு அதற்கெதிரான போராட்டங்கள் சட்ட விரோதமானவை என்றும் கறுப்பர்களின் சட்டத்தை மதியாத் தன்மையை அவர்களின் போராட்டங்கள் எடுத்துக்  காட்டுவதாகவும் எழுதுகின்றன.

நிகழ்விற்கு மறுநாள் அமெரிக்காவின் மினிசொட்டா மாநிலத்தில் காரில் வந்துகொண்டிருந்த பிலாண்டோ கஸ்டிலோவையும் அவரது துணைவியாரையும் நான்கு வயது மகளையும் இரண்டு பொலி

ஸார் வழிமறித்தனர். பிலாண்டோ கஸ்டிலோவை ஒரு பொலிஸ் அலுவலர் சுட்டுக் கொன்றார். அதைக் கஸ்டிலோவின் துணைவியார் நேரடியாக ஒளிப்படம் எடுத்து பேஸ்புக்கில் பதிவேற்றியதைத் தொடர்ந்து இக்கொலை கவனம் பெற்றது. 32 வயதான கஸ்டிலோ உயர்தரப் பாடசாலையில் சத்துணவு அதிகாரியாகக் கடமையாற்றியவர். மினிசொட்டாவில் கடந்த சில ஆண்டுகளில் மாத்திரம் 150க்கும் மேற்பட்ட கறுப்பினத்தவர்கள் பொலிஸாரால் சுட்டு கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இதுவரை எவரும் தண்டனை பெறவில்லை. ஒவ்வொரு தருணத்திலும் சான்றுகள் போதாது என்று சொல்லி நீதிமன்றம் பொலிஸாருக்குச் சாதகமாகத் தீர்ப்பெழுதியுள்ளது.

மேற்குறித்த நிகழ்வுகளின் எதிரொலியாக அமைதியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான கறுப்பினத்தவர்கள் பொலிஸ் அராஜகத்துக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். ஆத்திரமடைந்த பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கியதோடு 100க்கும் மேற்பட்டோரைக் கைது செய்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகப் பொலிஸாரும் ஊடகங்களும் தெரிவித்தன. ஆர்பாட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபடுவது தவறு எனக் கண்டித்த அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கொல்லப்பட்டவர்கள் பற்றி வாய் திறக்கவில்லை.

இவற்றைத் தொடர்ந்து அமெரிக்காவெங்கும் கறுப்பினத்தவர்களின் உரிமைகளுக்கான குரல்கள் எழத் தொடங்கின. இரண்டு கொலைகள் இடம்பெற்ற மறுநாள் டெக்ஸாஸ் மாநிலத்தின் டலஸ் பகுதியில் கறுப்பின அமெரிக்கப் படைவீரர் ஒருவர் ஐந்து வெள்ளையினப் பொலிஸாரை ஸ்னைப்பர் தாக்குதலில் கொலைசெய்தார். இது அமெரிக்க ஊடகங்களில் முக்கிய செய்தியானது. கறுப்பினத்தவர்கள் வெள்ளையினத்தவர்களைக் குறிவைக்கிறார்கள் என்ற தோரணையில் செய்திகள் வெளியாகின. கடந்த இரண்டு நாட்களில் கொல்லப்பட்ட இரண்டு கறுப்பினத்தவர்கள் தொடர்பான செய்திகள் திரிக்கப்பட்டன. சட்டத்தை மதிக்காத குற்றவாளிகளைக் கொன்ற நல்ல காரியத்தைச் செய்தமைக்காகப் பொலி

ஸார் அநியாயமாகக் கொல்லப்படுகிறார்கள் போன்ற கருத்துக்கள் ஊடகங்களால் முன்வைக்கப்பட்டன.

இந்நிகழ்வு கறுப்பினத்தவர்களின் போராட்டம் வன்முறையைக் கையிலெடுக்கின்றதென்று குற்றம் சாட்ட வழியமைத்தது. கறுப்பினத்தவர்கள் சட்டத்தை மதிக்கக் கற்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. கறுப்பினத்தவர்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தவும் அமெரிக்காவின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடக்கப் பழக வேண்டும் என்றும் நீதி தன் கடமையைச் செய்யும் என நம்பும்படியும் வேண்டப்படுகிறது.

பொலிஸாரைக் கறுப்பினத்தவர்கள் கொன்றதைப் பொதுப்புத்தி மனநிலையைக் கட்டமைக்கும் பணிக்குப் பொருத்தமான தருணமாக அமெரிக்க ஊடகங்கள் கருதின. கொல்லப்பட்ட பொலிஸ் சகாக்களுக்காகக் கண்ணீர்விடும் கறுப்பினப் பொலிஸாரின் படங்கள் பத்திரிகைகளின் முன்பக்கங்களை அலங்கரித்தன. வெள்ளையினப் பொலி

ஸார்கள் கறுப்பினக் குழந்தைகளுடன் விளையாடும் படங்கள் மில்லியன் கணக்கான டொலர்கள் பெறுமதி பெற்றன. 'பொலிஸ் மக்களின் நண்பன்' என்ற கருத்துருவாக்கம் ஊடகங்களால் மக்கள் மத்தியில் நிறுவப்பட்டது.

இவை அமெரிக்க ஜனநாயகம் பற்றிக் காலம் காலமாகக் கட்டியெழுப்பப்பட்டுள்ள மாயைகளை உடைக்கின்றன. அமெரிக்காவில் தினமும் மூவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். இவ்வாண்டு இதுவரை 1,134 பேரைப் பொலிஸார் கொன்றிருக்கிறார்கள். இதில் பெரும்பான்மையினர் கறுப்பினத்தவர்களாகும். இவை சட்டமும் ஒழுங்கும் பற்றிய பிரச்சினைகளாகும். அமெரிக்காவில் பொலிஸார் பெற்றுள்ள வரைமுறையற்ற அதிகாரமும் அதற்கான நீதித்துறையின் ஆசீர்வாதமும் வெள்ளையினத்தவர்கள் அல்லாத மற்றவர்களுக்கு அமெரிக்காவை ஒரு பாதுகாப்பற்ற நாடாக மாற்றியுள்ளது.

எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் பராக் ஒபாமா ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவானபோது, அமெரிக்கா ஒரு முன்மாதிரி ஜனநாயக நாடாக வர்ணிக்கப்பட்டது. ஒபாமா ஜனாதிபதியாகிய போது, வெள்ளையர்கள் விரும்பிக் கறுப்பினத்தவர் ஒருவரைத் தெரிந்தது ஜனநாயகத்தின் உச்சம் என்று புகழப்பட்டது. கடந்த எட்டு ஆண்டுகால ஒபாமாவின் ஆட்சியில் கறுப்பர்களின் நிலையை விளக்கப் போதியளவு உதாரணங்கள் காணப்படுகின்றன. 25 சதவீதமான கறுப்பின அமெரிக்கர்கள் வறுமையில் வாடுகிறார்கள். மூன்றில் ஒரு கறுப்பினக் குழந்தை வறுமையில் வாடுகிறது. ஆனால் எட்டு சதவீதமான வெள்ளையின அமெரிக்கர்களே வறுமையில் வாடுகிறார்கள். குறித்தவொரு வேலைக்கு வெள்ளையின அமெரிக்கர்கள் கறுப்பினத்தவர்களை விட இரு மடங்கு சம்பளம் பெறுகிறார்கள். ஒபாமாவின் ஆட்சியில் கடந்த இரு தசாப்தங்களாக இல்லாதளவு வன்முறைகள் கறுப்பர்களுக்கு எதிராக அரங்கேறியுள்ளன.

இவ்விடத்தில் இரண்டு கறுப்பின அமெரிக்கர்களை நினைவுகூர்வது பொருத்தம். 1968 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பின்னர் பரிசளிப்பின் போது அமெரிக்கத் தேசிய கீதம் பாடப்படும் போது கறுப்புக் கைக்கவசம் அணிந்த தனது முஷ்டியை உயர்த்தி கறுப்பின அமெரிக்கர்களுக்கு நிகழும் அநீதிகளுக்கு உலக அரங்கில் எதிர்ப்புத் தெரிவித்த ஜோன் கார்லொஸ், டொமி ஸ்மித் ஆகியோர், அதன் பின்னர் பல நெருக்கடிகளைச் சந்தித்தனர். ஆயினும் 'இன்னொரு வாய்ப்புக் கிடைத்தால் செய்ததையே மிகுந்த மகிழ்ச்சியுடன் மீண்டும் செய்வோம்' என இருவரும் சொல்வதில் தொனிக்கிற உறுதியையும் வேதனையையும் அநீதியின் வடுக்களையும் ஒபாமாவாலோ அதிகார பீடத்தில் உள்ள ஏனைய கறுப்பின உயர் வர்க்கத்தினராலோ உணர இயலாது.

கறுப்பின அமெரிக்கர்களின் உரிமைகளுக்காகப் போராடிய மார்ட்டின் லூதர் கிங் தனது புகழ்பெற்ற 'எனக்கொரு கனவுண்டு' உரையை ஆற்றி 53 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில் கறுப்பர் ஒருவர் அமெரிக்க ஜனாதிபதியானதால் தனது கனவு நனவாகியதாக மார்ட்டின் லூதர் கிங் அமைதி கொள்வார் என நினைக்கலாமா?

இன்று கறுப்பின அமெரிக்கர்கள் மிக நெருக்கடியான சூழலில் வாழ்கிறார்கள். அவர்கள் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்கொள்கிறார்கள். அவர்களது நிலையின்மை ஜனநாயகத்தின் பெயரில் தொடர்கிறது. அதேவேளை, அமெரிக்கா பற்றியும் மனித உரிமைகள் பற்றியும் கட்டியெழுப்பியுள்ள மாயைகள் உடைகின்றன. பொதுவெளியில் தெரியாத அமெரிக்காவின் இன்னொரு முகம் வெளித்தெரிகிறது.

இப்போது அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள கறுப்பின மக்களின் எழுச்சி வசதிக்கும் உரிமைக்கும் இடையிலானது. ஆண்டாண்டுகாலமாகக் கோரிய வசதிகள் வழங்கப்பட்ட நிலையிலும் உரிமைகள் வழங்கப்படாமையைக் கறுப்பின மக்கள் உணர்கிறார்கள். அவர்கள் வேண்டுவது விடுதலை. ஆனால் துரதிஷ்டவசமாக அவர்கள் அமெரிக்க ஜனநாயகம் என்ற புதைகுழியில் சிக்கியிருக்கிறார்கள்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .