2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சம்பியனானது வதிரி டயமன்ஸ்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 25 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

வட மாகாண ரீதியில் அழைக்கப்பட்ட 36 முன்னணிக் கழகங்களுக்கிடையில், இளவாலை யங்ஹென்றீசியன் விளையாட்டுக் கழகம், தமது மைதானத்தில் நடாத்தி வந்த ஹென்றீசியன் சவால் கிண்ணம் 2016இனை, வதிரி டயமன்ஸ் விளையாட்டுக் கழகம் கைப்பற்றியுள்ளது.

டயமன்ஸ் விளையாட்டுக் கழகத்துக்கும் மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டுக் கழகத்துக்குமிடையே இடம்பெற்ற இறுதிப் போட்டியில், 5-3 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற டயமன்ஸ் விளையாட்டுக் கழகம், சம்பியனாக முடிசூடிக் கொண்டது. இப்போட்டியில், டயமன்ஸ் சார்பாக, மதுசூதனன், துஷிகரன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் பிறேம்குமார் ஒரு கோலினையும் பெற்றனர். ஞானமுருகன் விளையாட்டுக் கழகம் சார்பாக ஸ்மித் இரண்டு கோல்களையும் தவரூபன் ஒரு கோலினையும் பெற்றனர்.

டயமன்ஸ் அணிக்கு அணிக்கு முதலாவது கோலை 10ஆவது நிமிடத்தில் எம். மதுசூதனன் பெற்றுக்கொடுத்தார். தொடர்ந்து 17ஆவது நிமிடத்தில் ரி. துஷிகரன் கோலைப் பெற்றுக்கொடுத்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் ஞானமுருகன் அணியின் ஸ்மித் 18ஆவது நிமிடத்தில் ஒரு கோலைப் பெற்றார். எனினும், அதனை சுதாகரித்து ஆடிய டயமன்ஸ் அணி, 22 மற்றும் 30ஆவது நிமிடங்களில் கோல்களைப் பெற்றது. இதனை முறையே அவ்வணியின் துஷிகரன் மற்றும் மதுசூதனன் ஆகியோர் பெற்றுக்கொடுத்தனர்.

ஆனால், விடாப்பிடியாக தாக்குதல் ஆட்டம் மேற்கொண்ட ஞானமுருகன் அணி 31 மற்றும் 37ஆவது நிமிடங்களில் அடுத்தடுத்து இரண்டு கோல்களைப் போட்டது. அந்தக் கோல்களை முறையே ஸ்‌மித் மற்றும் தவரூபன் ஆகியோர் போட்டனர். முதல்பாதியாட்டம் 4:3 என்ற கோல்கள் கணக்கில் முடிவடைந்தது. இரண்டாவது பாதியாட்டத்தில் வதிரி அணியினர் தடுப்பாட்டம் மேற்கொண்டமையால் ஞானமுருகன் அணியால் கோலைப் போடமுடியவில்லை. எனினும், கிடைத்த ஒரு வாய்ப்பை பயன்படுத்தி டயமன்ஸ் அணியின், பீமா என்று அழைக்கப்படும் எம்.பிறேம்குமார் 78 ஆவது நிமிடத்தில் ஒரு கோல் போட்டார். முடிவில் டயமன்ஸ் அணி 5:3 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

இறுதிப் போட்டியின் நாயகனாக டயமன்ஸ் விளையாட்டுக் கழகத்தின் பிறேம்குமார் தெரிவானதோடு, தொடரில் ஐந்து கோல்களை பெற்றதோடு, ஆறு கோல்களைப் பெற உதவிய அதேயணியைச் சேர்ந்த மத்தியகள வீரர் மதுசூதனன், தொடரின் நாயகனாகத் தெரிவானார். தொடரின் சிறந்த கோல்காப்பாளராக, தொடரில் ஒரேயொரு கோலினை மட்டுமே விட்டு, 17க்கு மேற்பட்ட கோல் பெறும் வாய்ப்புகளை தடுத்த குருநகர் பாடுமீன் விளையாட்டுக் கழகத்தின் கோல்காப்பாளர் ஆர்.பிரதீபன் தெரிவானார். தவிர, தொடரில் ஏழு கோல்களைப் பெற்றதோடு, நான்கு கோல்களைப் பெற உதவிய ஞானமுருகன் விளையாட்டுக் கழகத்தின் ஜெகதீஸ், தொடரில் அதிக கோல்களைப் பெற்றவராக தெரிவானார்.

தொடரின் வளர்ந்து வரும் வீரராக, சென். ஹென்றீஸ் கல்லூரியின் 17 வயதான ஜி.அன்ரனிராஜ் தெரிவானார். இவர், தொடரில் ஐந்து கோல்களைப் பெற்றதோடு, மூன்று கோல்களைப் பெறுவதற்கு உதவியிருந்தார். தொடரின் சிறந்த பயிற்றுவிப்பாளராக, சென்.ஹென்றீஸ் கல்லூரி அணியின் பயிற்றுவிப்பாளரான எம்.டனிஸ்டன் விஜயகுமார் தெரிவானார். தொடரின் பெறுமதி வாய்ந்த வீரராக, ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகத்தின் கஜகோபன் தெரிவானார். தொடரின் சிறந்த நன்னடத்தையை வெளிப்படுத்திய அணியாக, மன்னார் பனங்கட்டிகொட்டு சென்.ஜோசப் விளையாட்டுக் கழகம் தெரிவானதோடு, தொடரின் சிறந்த போட்டியாக, குருநகர் பாடுமீன் விளையாட்டுக் கழகமும் சென். ஹென்றீஸ் கல்லூரி அணியும் மோதிய காலிறுதிப் போட்டி தெரிவு செய்யப்பட்டிருந்தது.

இது தவிர, இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணிக்குத் தெரிவு செய்யப்பட்ட ஞானரூபனும் இலங்கை தேசிய கால்பந்தாட்ட மகளிர் அணியின் பயிற்றுவிப்பாளர் ஜெ.ஆர்.எம் ஜஸ்மினும், இறுதிப் போட்டி பரிசளிப்பு விழாவின்போது கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .