2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

7 தமிழர்களின் விடுதலை தொடர்பில் தமிழக அரசாங்கம் சார்பில் சீராய்வு மனு

George   / 2016 ஜூலை 27 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

'இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழரை விடுதலை செய்ய மத்திய அரசாங்கத்திடம் ஆலோசனைதான் கேட்கலாமே தவிர அனுமதிகேட்க வேண்டிய தேவை இல்லை' என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசாங்கம் தாக்கல் செய்த சீராய்வு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் மரண தண்டனைக் கைதிகளாக இருந்தனர். நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோர் ஆயுள் தண்டனைக் கைதிகளாக உள்ளனர்.

இந்நிலையில், பேரறிவாளன் உட்பட 3 தமிழரின் தூக்குத் தண்டனையை உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்தது. இதனைத் தொடர்ந்து ராஜீவ் வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதிகளாக உள்ள 7 தமிழரையும் விடுதலை செய்ய தமிழக அரசாங்கம் முடிவெடுத்தது.

இது குறித்து மத்திய அரசாங்கத்தின் ஆலோசனையை தமிழக அரசாங்கம் கேட்டது. ஆனால் மத்திய அரசாங்கம், இதற்கு முட்டுக்கட்டை போட்டு உச்சநீதிமன்றத்துக்குப் போனது. இந்த வழக்கில் கடந்த டிசெம்பர் மாதம் 2ஆம் திகதி தீர்ப்பளிக்கப்பட்டது.

அதில் ராஜீவ் வழக்கில் 7 தமிழரை விடுதலை செய்ய இந்திய குற்றவியல் சட்டத்தின் 435ஆவது பிரிவின் கீழ் மத்திய அரசாங்கம் ஒப்புதல் பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அதே நேரத்தில் அரசியல் சாசனத்தின் 161ஆவது பிரிவின் கீழ் மாநில அரசாங்கமே 7 பேரையும் விடுவிப்பதற்கு எந்த முட்டுக்கட்டையும் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

இதனால் தமிழக அரசாங்கம், 7 பேரையும் தமக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்ய முடிவெடுத்து மத்திய அரசாங்கத்துக்கு அறிக்கைகளை தமிழக அரசாங்கம் அனுப்பியிருந்தது. ஆனால் மத்திய அரசாங்கம், இது தொடர்பாக எந்த ஒரு பதிலையும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை முன்வைத்து ஒரு சீராய்வை மனுவை தமிழக அரசாங்கம் தாக்கல் செய்துள்ளது.

இந்த சீராய்வு மனுவில் 7 தமிழர் விடுதலை குறித்து 435ஆவது பிரிவின் கீழ் மத்திய அரசாங்கத்திடம் ஆலோசனைதான் தமிழக அரசாங்கம் கேட்கலாமே தவிர மத்திய அரசாங்கம் அனுமதியைப் பெறத் தேவையில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .