2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

'இனவாத போக்கை கடைபிடித்தால் வீதிக்கு இறங்கி போராட தயார்'

Kogilavani   / 2016 ஜூலை 29 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா     

ஒன்றிணைந்த எதரிணயினர் தொடர்ந்தும் சிறுபான்மை சமூகத்தினருக்கெதிரான இனவாதப் போக்கை முன்னெடுப்பார்களேயானால், அவர்களுக்கெதிராக இலட்சக்கணக்கான மலையக மக்களை வீதிக்கிறக்கி போராட்டங்களை முன்னெடுக்க  தயாராக இருப்பதாக, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  வடிவேல் சுரேஸ் குறிப்பிட்டார்.

பதுளை ஹெரிடேஜ் விடுதியில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு மேலும் கூறிய அவர்,
 
'ஜனாதிபதியும் பிரதமரும் நாட்டில் இனவாதம் தலைதூக்க இடமளிக்கப்போவதில்லை. மூவின மக்களும் ஒருதாய் மக்கள் போன்று வாழும் ஆரோக்கியச் சூழலை ஏற்படுத்துவதே, இத் தலைவர்களின் இலக்காக இருந்து வருகின்றது.

இவ்வேளையில், நாடாளுமன்றத்தின் ஒருங்கிணைந்த எதிரணியினர், இனவாதம் போக்குடன் செயற்பட்டு, குறுக்கு வழியில் ஆட்சியைக் கைப்பற்ற திட்டமிடுகின்றனர்.  அவர்களுடைய இந்நோக்கம் பகற் கனவாகவே முடியும். தவறின் நாட்டில் இனவாதக் குழப்பத்தை ஏற்படுத்த முனைவர். தொடர்ந்தும் அவர்கள் இனவாதப் போக்கை கடைப்பிடிப்பார்களேயானால், அவர்களுக்கெதிராக, எமது மக்களை வீதிக்கு இறக்கி போராட்டத்தை மேற்கொள்வேன். இவர்களின் செயற்பாடுகளுக்கு தொடர்ந்தும் பொறுமை காக்க முடியாது' என்றார்.

'அரசியல் ரீதியிலான பழிவாங்கல்களை இனிமேல் அனுமதிக்க முடியாது. அதன்மூலம் பாதிக்கப்படுபவர்கள் இருப்பின், அவர்கள் அது குறித்து எனது கவனத்துக்கு கொண்டு வரலாம். எனக்கு வழங்கப்பட்டிருக்கும் புதிய பதவி மூலம், அத்தகைய பழிவாங்கல்களுக்கு தீர்வை பெற்றுத் தருவேன்' என்றார்.

'கல்வி, உயர்கல்வி, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல திணைக்களங்களை உள்ளடக்கிய வகையிலான சபைக்கு என்னை தலைவராக நியமித்துள்ளனர். பாதிக்கப்படும் சிறுபான்மை சமூகத்துக்கு இப்பதவியினூடாக நியாயத்தை பெற்றுக்கொடுப்பேன். ஊழல் மோசடிகள் எவ்வகையிலும் தலைதூக்கவும் இடமளியேன்.  எமது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் எவ்வேளையிலும், அம்மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்க, எனது உயிரையும் துச்சமாக மதித்து செயல்படுவேன்' என அவர் மேலும் கூறினார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .