2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

'உயர்ஸ்தானிகர் எமக்கு அழுத்தம் கொடுக்கவில்லை'

Thipaan   / 2016 ஜூலை 30 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட், எம்.முபாரக், பொன் ஆனந்தம்

ஐ.நா மனித உரிமை உயர்ஸ்தானிகர், எமக்கு அழுத்தம் கொடுக்கவோ, எம்மீது அதிகாரத்தைப் பயன்படுத்தவோ இல்லை. இந்நாட்டின் மக்களின் நலனுக்காகவும் சட்டத்துறையினை மேம்படுத்துவதற்குமாகவே உயரஸ்தானிகர், இச்சட்டத்துறையின் சுயாதீனம் பற்றி பேசியுள்ளார்  என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று (29) தெரிவித்தார்.

நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற,

34 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட மூதூர் நீதிமன்ற கட்டடத்தொகுதியை திறந்து வைத்ததன் பின்னர், உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

பொதுமக்களின் நலன்கருதி இத்துறையை மேம்படுத்தவும், அபிவிருத்தி செய்யவும் உச்ச கட்ட நிதியியை செலவிட அரசாங்கம் தயாராக இருக்கிறது. ஒவ்வொருவரும் தமது பொறுப்புக்களையும் கடமைகளையும் மனசாட்சிக்கு விரோதமில்லாத வகையில் முன்னெடுக்க வேண்டும்.

மூதூரின் வரலாறு பற்றி இரசனையுடன் சட்டத்தரணி ஒருவர் குறிப்பிட்டிருந்தார். மூதூரின் வரலாறானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதனை நான் வரலாற்றை படிக்கும் போது தெரிந்து கொண்டேன்.

ஐ.நா.சபையின் மனித உரிமை அமைப்பினால் அடிக்கடி பேசப்படுகின்ற மனித உரிமை மீறல்கள் பற்றி நாம் அறிந்திருக்கின்றோம்.

இந்த நாட்டின் மனித விழுமியங்களை பாதுகாப்பதற்காக அரசாங்கம் அதன் முனைப்பான செயற்பாடுகளை காட்டியும் செயற்படுத்தியும் வருகின்றது. ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர், இந்நாட்டின் சட்டத்துறையின் சுயாதீனத் தன்மை பற்றி கடந்த நாட்களில் என்னோடு அடிக்கடி பேசியுள்ளார்.

அதேவேளை, மனித உரிமை உயர்ஸ்தானிகர், எமக்கு அழுத்தம் கொடுக்கவோ, எம்மீது அதிகாரத்தை பயன்படுத்தவோ இல்லை. இந்நாட்டின் மக்களின் நலனுக்காகவும் சட்டத்துறையினை மேம்படுத்துவதற்குமாகவே உயரஸ்தானிகர், இச்சட்டத்துறையின் சுயாதீனம் பற்றி பேசியுள்ளார் என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

இந்நாட்டின் அரசியலமைப்பும் சட்டத்துறையும் சர்வதேச ரீதியாக எமக்கு வரவேற்பை பெற்றுத்தரக்கூடியதாக இருக்க வேண்டும். இது தனிப்பட்ட கட்சிக்கான வேலைத்திட்டமில்லை. நாட்டின் புலகாங்கிதத்தை எடுத்துகாட்டுகின்ற விடயமாக இருக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் நீர்வழங்கல் மற்றும் நகர திட்டமிடல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணாண்டோ, கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட், உயர்நீதிமன்ற நீதியரசர் கே.ஸ்ரீபவன் உட்பட திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.தௌபீக், அப்துல்லா மகருப், இம்றான் மகருப், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எச்.எம்.நசீர், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி மாகாண சபை உறுப்பினர்கள் சட்டத்தரணிகள், பல அரச நிறுவனங்களின் தலைவர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .