2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

அரையிறுதியில் திருநெல்வேலி கிரிக்கெட் கழகம்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 28 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

யாழ்ப்பாண பிறீமியர் லீக்கின் காலிறுதி ஆட்டமொன்றில், அணித்தலைவர்  சிவலிங்கம் சிவராஜ்ஜின் பொறுப்பான ஆட்டத்தால் திருநெல்வேலி கிரிக்கெட் கழகம் அரையிறுதிக்குள் நுழைந்தது.

யுவ பிரண்ட்ஸ் பவுண்டேஸன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஜே.பி.எல் என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் பிறிமியர் லீக் இருபது – 20 கிரிக்கெட் போட்டிகள் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று கடந்த ஜூன் மாதம் 25 ஆம் திகதி முதல் வருகின்றது.

யாழ்ப்பாணத்திலுள்ள 12 முன்னணிக் கழக்கங்கள் இந்தச் சுற்றுப்போட்டியில் பங்குபற்றின. அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, லீக் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் முன்னணி வகித்த நான்கு அணிகள் வீதம் காலிறுதிக்கு 8 அணிகள் தெரிவாகின.

கொக்குவில் மத்திய சனசமூக நிலையம், சென்றலைட்ஸ், சென்ரல், ஸ்கந்தாஸ்ரார், திருநெல்வேலி கிரிக்கெட் கழகம், ஜொனியன்ஸ், ஜொலிஸ்ரார்ஸ், கிறாஸ்கோப்பார்ஸ் ஆகிய 8 அணிகள் காலிறுதிக்குள் நுழைந்தன.

இரண்டாவது காலிறுதியாட்டம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் கடந்த வாரயிறுதியில் நடைபெற்றது. இதில் சென்ரல் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து திருநெல்வேலி கிரிக்கெட் விளையாட்டுக்கழக அணி மோதியது.

நாணயச் சுழற்சியில் வென்று முதலில் ஆடிய சென்ரல் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 153 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் கமலேந்திரன் கலிஸ்ரன் 32, விமலதாஸன் ரஜீவ்குமார், என்.பாலேந்திரா ஆகியோர் தலா 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் திருநெல்வேலி அணி சார்பாக எம்.ஜெசிந்தன் 19 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும், நவரட்ணம் சுரேந்திரன் 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

154 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு ஆடிய திருநெல்வேலி அணி முதல் 5 விக்கெட்களையும் 62 ஓட்டங்களுக்கு இழந்தது. எனினும் அதன் பின்னர் ஜோடி சேர்ந்த அணித்தலைவர் சிவராஜ் மற்றும் கணேசலிங்கம் றோகான் ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டம் மற்றும் சுரேந்திரனின் இறுதிநேர அதிரடி மூலம், 18.3 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் சிவராஜ் 46, றோகான் மற்றும் சுரேந்திரன் ஆகியோர் ஆட்டமிழக்காமல் முறையே 26 மற்றும் 22 ஓட்டங்களைப் பெற்றுனர். பந்துவீச்சில் ஏ.சுபதீஸ் 3 விக்கெட்களையும், பெனடிக் சலிஸ்ரன் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக சிவராஜ் தெரிவு செய்யப்பட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .