2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பிறீமியர் லீக்கை கைப்பற்றுவது யார்?

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 12 , மு.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

- முருகவேல் சண்முகன்

விளையாட்டுலகத்தில் ஒலிம்பிக் போட்டிகளே தற்போது பேசுபொருளாக இருக்கையிலும், இந்தவார விளையாட்டுலகின் தலையங்கமாக கால்பந்தாட்டமே இருந்தது. ஆம். உலக சாதனைத் தொகையாக 116 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கு, பிரான்ஸ் நாட்டின் தேசிய கால்பந்தாட்ட வீரர் போல் பொக்பா, இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான ஜுவென்டஸ்ஸிலிருந்து, இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டமையே, ஒலிம்பிக்கை தாண்டி இவ்வார பேசுபொருளாக இருக்கின்றது.

மேற்கூறப்பட்டுள்ள உலக சாதனைத் தொகைக்கு, சும்மா ஒன்றும் ஒன்றும் ஒப்பந்தம் செய்யப்படவில்லை. உலகின் பிரமாண்டமான கால்பந்தாட்டத் தொடரான பிறீமியர் லீக்கில், மன்செஸ்டர் யுனைட்டெட் கழகத்தை முதல் நான்கு இடங்களுக்குள் மீண்டும் கொண்டுவரும் பொருட்டே அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். அதுவும் இவ்வளவு பாரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால், மன்செஸ்டர் யுனைட்டெட் அணிக்கு சம்பியன் பட்டத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே எதிர்பார்பாக இருக்கின்றது.

அந்தவகையில், லியனல் மெஸ்ஸி தேசிய அணியிலிருந்து ஓய்வு பெற்ற தென்னமரிக்க நாடுகளுக்கிடையிலான கோப்பா அமெரிக்கா, ஐரோப்பா அணிகளுக்கிடையிலான யூரோ தொடர்கள் முடிவுற்று, அதன் பின்னர் சர்வதேச கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சில சிநேகபூர்வ ஆட்டங்கள் இடம்பெற்றிருந்தன.

இதனையடுத்து, அதிக இரசிகர்களையும் ஈர்ப்பதும் விறுவிறுப்பை வழங்கக் கூடியதுமான இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டத் தொடர் நாளை சனிக்கிழமை (13) ஆரம்பிக்கின்றது. 1992ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்தொடரானது இம்முறை 25ஆவது முறையாக இடம்பெறுகிறது. நாளை ஓகஸ்ட் 13ஆம் திகதி ஆரம்பிக்கும் இத்தொடரானது, அடுத்தாண்டு மே மாதம் 21ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது.

வழமை போன்றே 20 அணிகள் பங்குபற்றும் இத்தொடரில், ஒவ்வொரு அணியும் ஏனைய அணியுடன் தமது மைதானங்களிலும் அவ்வணியின் மைதானங்களிலும் விளையாடி, மொத்தமாக 380 போட்டிகள் இடம்பெறவுள்ளன.

கடந்த பருவகாலத்தில் இறுதி மூன்று இடங்களைப் பிடித்த நியூகாசில் யுனைட்டெட், நோர்விச் சிற்றி, அஸ்டன் வில்லா ஆகிய அணிகள் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதோடு, அவற்றுக்குப் பதிலாக, கடந்த கால்பந்தாட்ட லீக் சம்பியன்ஷிப் தொடரிலிருந்து, பேர்ண்லி, மிடில்ஸ்பேர்க், ஹள் சிற்றி ஆகிய அணிகள் பிறீமியர் லீக்குக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளன. பிறீமியர் வரலாற்றில், இம்முறையே, முதன்முறையாக அஸ்டன் வில்லா வெளியேற்றப்பட்டுள்ளது.

இதுவரையில், மன்செஸ்டர் யுனைட்டெட் 13 தடவை பிறீமியர் லீக்கை கைப்பற்றியுள்ளதோடு, செல்சி நான்கு தடவையும் ஆர்சனல் மூன்று தடவையும் மன்செஸ்டர் சிற்றி இரண்டு தடவையும் பிளக்பேர்ண் றோவர்ஸ் மற்றும் கடந்த முறை பிறீமியர் லீக் பட்டத்தைக் கைப்பற்றிய லெய்செஸ்டர் சிற்றி ஆகியவை தலா ஒரு முறை பிறீமியர் லீக் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளன.

2014/15 பருவகால பிறீமியர் லீக் சம்பியன்களான செல்சி, 2015/16 பருவகாலத்தில் 10ஆம் இடத்தையே பிடித்திருந்த நிலையில், 2015/16 பருவகாலத்தில், அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி சம்பியனான லெய்செஸ்டர் சிற்றி, இம்முறை சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றுமா என்றது கேள்விக்குறியாகவே உள்ளது.

கடந்த பருவ காலத்தில் செல்சியின் முகாமையாளர் ஜொஸ் மொரின்ஹோ பருவகாலத்தின் இடையிலேயே நீக்கப்பட்டு, இடைக்கால முகாமையாளராக கூஸ் ஹிட்டிங் பொறுப்பேற்று, தற்போது முகாமையாளராக அந்தோனியோ கொந்தே பதவியேற்றுள்ளதோடு, மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முகாமையாளர் லூயிஸ் வான் கால் பதவி நீக்கப்பட்டு தற்போது ஜொஸ் மொரின்ஹோவால் பிரதியீடு செய்யப்பட்டுள்ளதோடு, மன்செஸ்டர் சிற்றியின் முகாமையாளர் மனுவல் பெலிகிறனி, பெப் குவார்டியோவால் பிரதியீடு செய்யப்பட்டுள்ள நிலையிலும், ஸல்டான் இப்ராஹிமோவிக், போல் பொக்பா போன்ற வீரர்கள் வெளிநாட்டுக் கழகங்களிலிருந்தும் வந்துள்ள நிலையில், எப்போதும் இல்லாத வகையில் பிறீமியர் லீக் சூடு பிடித்துள்ளது. றியல் மட்ரிட், பார்சிலோனா முகாமையாளர்களாக இருந்த போது விட்ட பகையை மன்செஸ்டர் யுனைட்டெட், மன்செஸ்டர் சிற்றியில் மொரின்ஹோவும் குவார்டிலோவும் தொடரவுள்ளனர்.

அந்தவகையில், கடந்த வருடம் சம்பியனான லெய்செஸ்டர் சிற்றியின் அணியில் பாரிய மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. கடந்த முறை லெய்செஸ்டர் சம்பியனாக காரணமாகவிருந்த மத்திய கள வீரர்களில் ஒருவரான, பிரான்ஸின் என்கோலோ காண்டே மட்டும் செல்சி அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கடந்த பருவகாலத்தில் அணிக்கு அதிக கோல்களைப் பெற்றுக் கொடுத்த முன்கள வீரரான ஜேமி வார்டி, ஆர்சனல் அணிக்குச் செல்லும் வாய்ப்பை நிராகரித்து லெய்செஸ்டரிலேயே தொடருகின்றார். தவிர, லெய்செஸ்டரின் மற்றொரு நட்சத்திர மத்தியகள வீரரான றியாட் மஹ்ரேஸும் அணியில் தற்போது வரையில் நீடிக்கிறார்.

இந்நிலையில், கடந்த பருவகாலத்தைப் போன்றே இப்பருவகாலத்தில் தனது உத்திகளை லெய்செஸ்டரின் முகாமையாளர் கிளாடியோ றைனேரி தொடர்வார் என்பது போன்றதான சமிக்ஞைகளே சிநேகபூர்வ போட்டிகளில் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. என்கோலோ காண்டேக்கு பதிலாக அணியின் சிரேஷ்ட வீரரான அன்டி கிங்கை மத்திய களத்தில் றைனேரி களமிறக்கியிருந்தார். எனவே, அணித்தலைவர் வெஸ் மோர்கனை மத்தியில் வைத்து பின்களத்தை கட்டமைத்துக் கொண்டு, மத்திய களத்தையும் உறுதிப்படுத்திக் கொண்டு, கடந்த பருவகாலம் போன்றே ஜேமி வார்டி மூலம் வேகமான ஓட்டத்தை மேற்கொண்டு கோலைப் பெறுவதே லெய்செஸ்டரின் உத்தியாக அமையப் போகிறது. இதற்கு, அனுபவ முன்கள வீரரான ஷின்ஜி ஒகஸாகியும் உதவுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறெனினும் பணக்கார கழகங்களான மன்செஸ்டர் யுனைட்டெட், மன்செஸ்டர் சிற்றி, செல்சிக்கு லெய்செஸ் ஈடுகொடுக்குமா என்பது பெரியதொரு கேள்விக்குறியாகவே உள்ளது.

அடுத்து, இம்முறை பட்டத்தை வெல்லும் என பெரும்பாலோனாரால் மன்செஸ்டர் யுனைட்டெட்டே கருதப்படுகிறது. முகாமையாளராக மொரின்ஹோ ஒப்பந்தம் செய்யப்பட்டமை, அதைத் தொடர்ந்து பொக்பா, இப்ராஹிமோவிக் உள்ளிட்டோர் ஒப்பந்தம் செய்யப்பட்டமை என அதிரடியாக ஏனைய கழகங்களுக்கு மிரட்டல் விடுக்கும் பாணியில் மன்செஸ்டர் யுனைட்டெட் செயற்பட்டு வருகிறது.

தாக்குதல் ஆட்டத்துக்கு மொரின்ஹோ பெயர் பெற்றவர் இல்லையென்றாலும், உடனடியாக அணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுக்கும் முகாமையாளராக மொரின்ஹோ பார்க்கப்படுகின்றார். அவரின் ஏனைய கழகங்களுடனான வரலாறும் அவ்வாறே உள்ளது. உடனடியாக அணிகளுக்கு வழங்கியுள்ள போதும் அடுத்தடுத்த பருவகாலங்களில் மொரின்ஹோ காணாமல் போய்விடுவார். இது நீண்டகால நோக்கில் கவலையளிக்கக் கூடியது என்றாலும் மன்செஸ்டர் யுனைட்டெட்டுக்கு தற்போது உடனடியான வெற்றியே தேவைப்படுவதுடன், நான்கு வருடங்களுக்கு மொரின்ஹோவையே பயிற்சியாளராக வைத்திருக்கும் என எதிர்பார்க்கப்படவில்லை.

மொரின்ஹோவின் முக்கிய சிக்கலுக்குரிய கேள்வியாக இருப்பது, அணித்தலைவர் வெய்ன் ரூனியை மத்திய களத்திலா அல்லது முன்களத்திலா களமிறக்குவது என்பதே பிரச்சினையாகும். இந்நிலையில், இப்ராஹிமோவிக்குடன் ரூனியை முன்களத்தில் களமிறக்குவதற்கான சமிக்ஞைகளை வெளிப்படுத்தியுள்ளார். இவர்களுக்கு, கடந்த பருவ காலத்தில் திறமைகளை வெளிக்காட்டிய மார்க்கஸ் ரஷ்ஃபோர்ட், அந்தோனி மார்ஷியல் ஆகியோர் உதவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கூறப்பட்ட முன்கள வீரர்களுக்கு உலக சாதனைத் தொகைக்கு வாங்கப்பட்ட பொக்பா உதவுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறெனினும் தான் நன்றாக விளையாடும் நாட்களில், உலகின் தலைசிறந்த வீரர்கள் போல இருக்கும் பொக்பாவுக்கு குறித்த தொகையானது அதிகமாகவே பார்க்கப்படுகிறது. எனவே தனக்குரிய விலையை பொக்பா நியாயப்படுத்துவாரா என்று பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

இதேவேளை, பொக்பா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், அனுபவம் வாய்ந்த மத்தியகள வீரரான பஸ்டியான் ஸ்வாஸ்னேகர் அணியிலிருந்து வெளியேறுவதுடன், வழமையான விளையாடும் பதினொருவரில் இடம்பெறும் ஜுவான் மாத்தாவின் இடமும் பறிபோகவுள்ளது. தவிர, ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள ஹென்றிக் மிகிதராயானும் மாற்று வீரராகவே இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பின்களத்தில், புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட எரிக் பையியுடன் இணைந்து, கிறிஸ் ஸ்‌‌மோலிங், காயத்திலிருந்து குணமடைந்துள்ள லுக் ஷா, டேலி பிளின்ட் ஆகியோர் உறுதியான பின்வரிசையை அமைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்து, பிறீமியர் லீக்கில் முன்னிலை பெற்று சம்பியன்ஸ் லீக்கிலும் முத்திரை பதிக்கும் நோக்கோடு பெப் குவார்டிலோவை முகாமையாளராக மன்செஸ்டர் சிற்றி நியமித்துள்ளது. இதற்கு முன்னர் முகாமையாளராகவிருந்த பெலகிறினியும் குறிப்பிடத்தக்களவு வெற்றியைப் பெற்றிருந்தபோதும் பட்டங்களை வெல்லத் தவறியிருந்தார்.

இந்நிலையில் வேகமான ஆட்டத்துக்கு பெயர்போன குவார்டிலோ, நட்சத்திர முன்கள வீரர் சேர்ஜியோ அக்ரோவுடன் இணைந்து கோல் மழை புரிவதற்காக நொலிட்டோவை ஒப்பந்தம் செய்துள்ளதுடன், பின்களத்தை பலப்படுத்துவதற்காக ஜோன் ஸ்டோன்ஸையும் ஒப்பந்தம் செய்துள்ளார்.

கெவின் டி புரூனை மையப்படுத்தி அணியைக் கட்டமைக்கவுள்ள குவார்டிலோ, தடுமாறி வரும் ரஹீம் ஸ்டேர்லிங்கிடமிருந்து மேம்படுத்தப்பட்ட பெறுபேறுகளை எதிர்பார்க்கின்றார். தவிர, கோல்காப்பாளர் ஜோ ஹார்ட்டை என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளபோதும், ஆரம்பத்தில் வாய்ப்பு வழங்குவார் எனவே எதிர்பார்க்கப்படுகிறது.

இது தவிர, அணியில் நீண்ட காலமாக இருக்கும் யாயா தோரே, எவ்வாறு குவார்டிலோவின் வேகமான ஆட்டத்துக்குப் பொருந்துவார் என்பது சந்தேகமாகவுள்ளபோதும் மற்றொரு வீரரான டேவிட் சில்வா அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தவிர, சமீர் நஸ்ரி அணியை விட்டு வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர, அணித்தலைவர் வின்சென்ட் கொம்பனியின் உடற்றகுதியும் பிரச்சினைக்குரியதொன்றாகக் காணப்படுகிறது.

அடுத்து, 2014/15 பருவகாலத்தில் சம்பியனாகி, கடந்த பருவகாலத்தில் 10ஆவது இடத்துக்குச் சென்ற செல்சியை மீண்டும் முதல் நான்கு இடங்களுக்குள் கொண்டு வர வேண்டிய பொறுப்புடன் முகாமையாளராக கொந்தே பதவியேற்றுள்ளார். அணிக்குள் பிரச்சினைகள் இருக்கின்றன என்று கிசுகிசுக்கப்படுகையில் அவற்றினையும் தாண்டியே வெற்றிகளைப் பெறவேண்டிய நிலையில் கொந்தே இருக்கின்றார்.

பின்களம், மத்தியகளத்தை உறுதியாகக் கட்டமைத்து, நடுக்களத்திலிருந்து பந்தை அனுப்புவதன் மூலம் கோல்களைப் பெறும் பாணியைக் கொண்டுள்ள கொந்தே, ஈடின் ஹஸார்ட்டிடம் எவ்வாறான திறமை வெளிப்பாடுகளை பெறுகின்றார் என்பதிலேயே அணியின் வெற்றி தங்கியுள்ள நிலையில், அண்மையில் இடம்பெற்ற சிநேகபூர்வ போட்டிகளில் தனது போர்முக்கு திரும்பும் சமிக்ஞைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

தவிர, புதிதா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள என்கோலோ காண்டே மத்தியகளத்துக்கும் பின்களத்துக்கும் பாலமாக விளங்குவார் என்ற நிலையில், சீஸ்க் ஃபப்ரிகாஸ், வில்லியன், ஒஸ்கார் கூட்டணி வழமையான சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, டியகோ கொஸ்டாவும் பிரகாசித்தால் செல்சி கோல்களைப் பெறலாம்.

ஆனால், கடந்த பருவகாலத்தில் செல்சிக்கெதிராக அதிக கோல்கள் பெறப்பட்ட நிலையில், கரி காகில், அணித்தலைவர் ஜோன் டெரி, பிரைன்ஸ்லவ் இவானோவிக், கேர்ட் ஸூமா‌ ஆகியோரை உள்ளடக்கி தனது பாணிக்கு ஏற்றவாறு உறுதியான பின்வரிசையை கொந்தே அமைக்கவேண்டியுள்ளது.

அடுத்து, மௌரிசியோ போச்சிட்டினோவின் முகாமைத்துவத்தில் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தி கடந்த பருவகாலத்தில் லெய்செஸ்டருக்கு சவாலாக விளங்கிய டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் அணி, எரிக் டையர், டெலே அலி, ஹரி ஹேனின் கூட்டணியில் மிரட்டக் காத்திருக்கிறது.

அடுத்து கடந்த பருவகாலத்தில் இரண்டாமிடம் பெற்ற ஆர்சனல், 2004ஆம் ஆண்டே இறுதியாக பிறீமியர் லீக் பட்டத்தைக் கைப்பற்றிய நிலையில், 1996ஆம் ஆண்டு தொடக்கம் அவ்வணியின் முகாமையாளராக இருந்து வரும் ஆர்சீன் வெங்கர், எப்போதும் இல்லாத வகையில் அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளார்.

புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட சாகாவுடன் இணைந்து மெசூட் ஒஸில் கடந்த பருவகாலம் போன்று செயற்பட்டு, முன்களவீரர்கள் அலெக்ஸிஸ் சந்தேஸ், ஒலிவர் ஜிரோட்டோடு, ஆரோன் றாம்ஸி, தியோ வோல்கோட் ஆகியோர் சிறப்பாகச் செயற்பட்டாலே அவ்வணி இம்முறை முதல் நான்கு இடங்களுக்குள் வார வாய்ப்புள்ளது. காயமடைந்து தற்போது தேறியுள்ள ஜக் வில்ஷயர், அலெக்ஸ் ஒக்ஸ்லேட்-சம்பர்லின் ஆகியோர் முழுமையாக அணியில் இணையுமிடத்து ஆர்சனலும் ஏனைய அணிகளுக்கு போட்டியை வழங்குவதாய் இருக்கும்.

தவிர, புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட சடியோ மனே, பிலிப்பே கூட்டின்ஹோ, டேனியல் ஸ்டரிட்ஜ், அடம் லலானா, ரொபேர்ட்டோ ஃபேர்மின்கோ, டிவோக் ஒரிஜி‌ ஆகிய இளம் அணியை வைத்து லிவர்பூலின் முகாமையார் ஜுர்ஜன் க்ளோப்பும் முத்திரை பதிக்கக் காத்திருக்கிறார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .