2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கால்பந்தாட்டத்தில் மின்னொளி; கிரிக்கெட்டில் உதயசூரியன் சம்பியனாகின

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 10 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வி.சுகிர்தகுமார்

திருக்கோவில் சுப்பர் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் 25ஆவது வருட நிறைவையொட்டி, சுப்பர் ஸ்டார் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்ற கிரிக்கெட், கால்பந்தாட்ட இறுதிப் போட்டிகளில் முறையே, திருக்கோவில் உதயசூரியன் மற்றும் விநாயகபுரம் மின்னொளி அணிகள் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டன.

அமரர் அமராவதி காளிக்குட்டி ஞாபகார்த்த மென்பந்து கிரிக்கெட் மற்றும் அமரர் அழகவல்லி வன்னியசிங்கம் ஞாபகார்த்த கால்பந்தாட்ட இறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான சம்பியன் கிண்ணங்களை, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வழங்கி வைத்தார்.

10 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட விலகல் முறையிலான கிரிக்கெட் தொடரில் 24 அணிகள் பங்கேற்ற போதிலும், இறுதிப்போட்டியில் திருக்கோவில் உதயசூரியன் மற்றும் விநாயகபுரம் விநாயகர் அணிகள் மோதிக்கொண்டன.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற உதயசூரியன் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் அதிகமான ஓட்டங்களை பெறாதபோதும், பின்வரிசை வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் உதயசூரியன் அணி 10 ஓவர்களில், ஏழு விக்கெட்டுகளினை இழந்து 85 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையை ஏற்படுத்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய விநாயகர் அணியினர், ஓட்டங்களை வேகமாக பெற முயற்சித்தாலும் 10 ஓவர்களில், 69 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவிக் கொண்டனர்.

இறுதிப் போட்டியின் நாயகனாக உதயசூரியன் அணி வீரர் ரி.சுதர்சன் தெரிவு செய்யப்பட்டதுடன், தொடர் நாயகன் விருதை தாண்டியடி சுப்பர் கிட் அணி வீரர் எஸ்.மதி பெற்றுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து கால்பந்தாட்டப் போட்டி நடைபெற்றது. விலகல் அடிப்படையில்  24அணிகள் மோதிக்கொண்ட கால்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டிக்கு சொறிக்கல்முனை சாந்தகுறோஸ் மற்றும் விநாயகபுரம் மின்னொளி அணிகள் தெரிவு செய்யப்பட்டன. விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் விநாயகபுரம் மின்னொளி அணி 1-0 எனும் கோலடிப்படையில் வெற்றி பெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

இறுதிப் போட்டியில் சிறந்த வீரராக மின்னொளி அணி வீரர் எஸ்.தனுஜன் தெரிவு செய்யப்பட்டதுடன் தொடரின் சிறந்த வீரராக சாந்தகுறோஸ் அணி வீரர் எஸ்.விஜிதரன் தெரிவு செய்யப்பட்டார்.

சுப்பர் ஸ்டார் கழகத்தலைவர் கே.சுரேஸ்குமார் தலைமையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கௌரவ அதிதியாக திருக்கோவில் உதவி பிரதேச செயலாளர் எஸ்.ஜெயரூபன், தென்கிழக்கு பல்கலைக்கழக வணிகத்துறை பீடாதிபதி எஸ்.குணபாலன், மட்டக்களப்பு உயர்தொழில் நுட்ப கல்லூரியின் பணிப்பாளர் எஸ்.ஜெயபாலன், பொறியியலாளர் ஆர்.யுவேந்திரா. கிராம உத்தியோகத்தர் ஏ.கந்தசாமி , கோவிலூர் செல்வராஜன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதேவேளை, பொறியியலாளர் ஆர்.யுவேந்திராவின் நிதியுதவியுடன் சுப்பர் ஸ்டார் மைதானத்தில் அமைக்கப்பட்ட வை.இராசையா ஞாபகார்த்த பரிசளிப்பு மேடையின் திறப்பு விழாவும் இங்கு நடைபெற்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .