2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

நாட்டின் தலைவிதியையும் நிர்ணயிக்கக்கூடிய ஸ்ரீ.ல.சு.க மாநாடு

Thipaan   / 2016 ஓகஸ்ட் 24 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

செப்டெம்பர் மாதம் நான்காம் திகதி குருநாகலில் நடைபெறவிருக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது மாநாட்டுக்கு வருமாறு முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவரது அணியினருக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக ஸ்ரீ.ல.சு.கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீரவும் கூறியுள்ளனர்.

ஆனால் உண்மையிலேயே மஹிந்த ராஜபக்ஷ மாநாட்டுக்கு வருவதை அக்கட்சியின் மைத்திரிபால அணியினர் விரும்புகிறார்களா? இல்லை‚ என்றே ஊகிக்க முடிகிறது. அதேபோல் தமக்கும் தமது அணியினருக்கும் கட்சித் தலைவர்கள் அழைப்பு விடுக்க வேண்டும் என்று மஹிந்தவும் அவரது அணியினரும் நினைத்திருப்பார்களா? அதுவும் இல்லை என்றே ஊகிக்க முடிகிறது.

தமக்கு அழைப்பு இல்லாவிட்டால் நல்லது என்றே மஹிந்த நினைத்திருப்பார். ஏனெனில் அப்போதுதான், தான் விரும்பாத இடத்திற்கு போகாமல், அழைப்பு விடுக்கவில்லை என்று குற்றம், சாட்டலாம். அதேபோல் அவர்கள் வராமல் இருக்கட்டும் என்பதற்காகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீ.ல.சு.க தலைவர் என்ற முறையில், கட்சியின் மாநாட்டுக்கு இரு வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், மஹிந்த அணியின் 13 பேரைத் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கியும் தமது அணியைச் சேர்ந்த 44 பேரை நியமித்தும் மஹிந்த அணியின் ரோஷத்தை தூண்டியிருக்கிறார்.

இதற்கு முன்னரும் மைத்திரிபால, மஹிந்த அணியின் முக்கியமான சிலரை அமைப்பாளர் நிலையிலிருந்து நீக்கியிருந்தார். முன்னாள் மேல் மாகாண சபை முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, திலும் அமுனுகம, நடிகை கீதா குமாரசிங்க, சாலிந்த திஸாநாயக்க

ஆகியோர் மிக அண்மைக் காலத்தில் அமைப்பாளர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டவர்களாவர். அதற்கு முன்னர் அவர் கட்சியின் மத்திய குழுவில் இருந்த மஹிந்த ஆதரவாளர்களை நீக்கிவிட்டு தமது ஆதரவாளர்களை மத்திய குழுவுக்கு நியமித்தார்.

கட்சிக்குள் தமது எதிரிகளை அடக்க ஜனாதிபதி மைத்திரிபால சாம, பேத, தான, தண்ட ஆகிய நான்கு உத்திகளையும் பாவிப்பதைக் காண முடிகிறது. குறிப்பாக தான மற்றும் தண்ட ஆகிய உத்திகளை பாவிக்கிறார். மஹிந்தவின் நெருங்கிய சகாக்களான ஹெமால் குணசேகர, முன்னாள் அம்பாந்தோட்டை மேயரும் கடந்த ஆட்சியின் இறுதிக் காலத்தில் மத்தல விமான நிலையத்தில் வைத்து ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பிக்களை பிஸ்டலைக் காட்டி விரட்டியவருமான எராஜ் பெர்னான்டோ ஆகியோருக்கு அமைப்பாளர் பதவிகளை வழங்கி சாம மற்றும் தான ஆகிய உத்திகள் மூலம் அவர்களை வளைக்க நடவடிக்கை எடுத்திருக்கிறார். அது ஓரளவு பலனளித்துள்ளதாகத் தெரிகிறது.

அதேவேளை அவர் வெளியேறிய முன்னாள் அமைப்பாளர்கள் விடயத்தில் தண்ட உத்தியைப் பாவித்துள்ளார். சிலரைத் தண்டிப்பதன் மூலம் மஹிந்த அணியில் உள்ள மேலும் பலரது மனதில் பயத்தை ஏற்படுத்தி அதன் மூலமும் அவர்களை வளைக்கவும் ஜனாதிபதி திட்டமிட்டு இருக்கலாம். எனவேதான் அவர் இதற்கு முன்னரும் மஹிந்த அணியின் ஒரு சிலருக்கு எதிராக மட்டும் நடவடிக்கை எடுத்து, வேறு சிலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டார்.

பொதுத் தேர்தலுக்கு முன்னர் தாம் தலைவராக இருக்கும் கட்சியில், பலர் தமக்கு எதிராக செயற்படும் போதும் அவர் கட்சியின் செயலாளராக இருந்த அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னியின் செயலாளராக இருந்த சுசில் பிரேமஜயந்த ஆகியோரை அப்பதவிகளில் இருந்து நிக்கி விடுவதோடு நின்றுவிட்டார். பின்னர் அவர்களுக்கு அமைச்சர் பதவிகளையும் வழங்கினார். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர், மைத்திரிபால சிறிசேனவை வெளிநாட்டுச் சதிகாரர் என்றும் புலிகளின் முகவர் என்றும் கூறிவந்த அவ்விருவரும் இப்போது அந்தத் 'தண்ட' மற்றும் 'தான' உத்திகளின் விளைவாக மஹிந்தவிடமிருந்து கழன்று விட்டனர்.

ஆனால் மைத்திரியின் இடத்தில் மஹிந்த இருந்து கட்சியின் சிலர் இவ்வாறு கட்சித் தலைமையை பகிரங்கமாக விமர்சித்தும் கட்சித் தலைமையின் ஆட்சியை குழப்ப நடவடிக்கை எடுத்தும் இருந்தால் நிலைமை படுபயங்கரமானதாகவே இருந்திருக்கும். அவ்வாறு நடந்திருந்தால் இன்று எத்தனை பேர் சரத் பொன்சேகாவைப் போல் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பார்கள்? மேலும் பலருக்கு என்னென்னவோ எல்லாம் நடந்திருக்கும்.

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவராகவிருந்த வேலுபிள்ளை பிரபாகரனின் மனதை எவருக்கும் வாசித்தறிய முடியாது என்பர். அதேபோல் மைத்திரியும் என்ன செய்யப் போகிறார் என்பதை முன்கூட்டியே கூற முடியாது. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், மைத்திரிபால சிறிசேன எதிர்க்கட்சியுடன் கூட்டுச்சேர்ந்ததை அரச புலனாய்வுத் துறையினரால் அறிந்து கொள்ள முடியவில்லை. பொதுத் தேர்தலுக்கு முன்னர் அவர் மேலும் இரண்டு 'கெரில்லாத் தாக்குதல்களை' மேற்கொண்;டார். நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையொன்றாலும் மஹிந்தவுக்கு அனுப்பிய கடிதமொன்றாலும் அவர் அத்தாக்குதல்களை நடாத்தியிருந்தார். இத்தாக்குதல்களினால் அவர் தமது கட்சியையே தேர்தலில் தோற்கடிக்கச் செய்து மஹிந்தவின் பிரதமர் கனவைச் சிதறடிக்கச் செய்தார்.

உண்மையிலேயே ஸ்ரீ.ல.சு.கவிற்குள் ஏற்பட்டிருக்கும் இந்தப் பூசலுக்கு எந்தவித கொள்கைப் பிரச்சினையும் காரணமாகவில்லை. ஸ்ரீ.ல.சு.கட்சியும் ஐ.தே.கட்சியும் கூட்டு சேர்ந்து இருப்பதைக் காரணமாக காட்டி, அதனாலேயே தாம் மைத்திரியை எதிர்ப்பதாக சில மஹிந்த ஆதரவாளர்கள் கூறினாலும், அதனைக் காரணமாகக் கொள்ள அவ்விரு கட்சிகளுக்கிடையே கொள்கையளவில் எவ்வித வேறுபாடும் இல்லை.

இவ்விரு கட்சிகளுக்கிடையே கொள்கை வேறுபாடு இருந்தால், பலர் இவ்விரு கட்சிகளில் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு அடிக்கடி மாறுவது எவ்வாறு? எஸ்.பி. திஸாநாயக்க, ஜீ.எல். பீரிஸ், ராஜித்த சேனாரத்ன, மஹிந்த சமரசிங்க, கெஹெலிய ரம்புக்வெல்ல, கரு ஜயசூரிய போன்றோர் எத்தனை முறை அந்தப் புறத்திலிருந்து இந்தப் புறத்திற்கும் இந்தப் புறத்திலிருந்து அந்தப் புறத்திற்கும் மாறியிருக்கிறார்கள்? கொள்கை என்று ஒன்று இருந்தால் அவ்வாறு நடக்கலாமா? மைத்திரிபாலவை 'மேற்கத்திய நாடுகளின் சதிகாரர்' என்று கூறிய ஸ்ரீ.ல.சு.க தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் அவர் ஜனாதிபதியான உடன் அவரை அக்கட்சியின் தலைவராகவே நியமிக்க முடியும் என்றால் அங்கு ஏது கொள்கை?

65 ஆண்டுகளுக்கு முன்னர் முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க ஸ்ரீ.ல.சு.கட்சியை ஆரம்பித்த காலத்தில் அவ்விரு கட்சிகளுக்கிடையே பாரிய கொள்கை வேறுபாடுகள் இருந்தன. 1950 ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் ஐ.தே.கட்சியே பதவியில் இருந்தது. அக்கட்சி ஏகாதிபத்திய நிறுவனங்களுடனேயே தொடர்பு வைத்திருந்தது. புதிதாக உருவாகிய தேசிய முதலாளிகள் மதிக்கப்படவில்லை. தேசிய மருத்துவர்கள் புறக்கணிக்கப்பட்டு இருந்தார்கள். பௌத்த பிக்குகளை விட கிறிஸ்தவ மதகுருக்கள் அரச மட்டத்தில் மதிக்கப்பட்டார்கள். அவ்வாறு புறந்தள்ளப்பட்டு இருந்தவர்களே பண்டாரநாயக்கவின் ஆதரவாளர்களாயினர்.

அதேவேளை பண்டாரநாயக்கவும் அவரது மனைவி சிறிமாவும் தனியார் துறையை வளர்ப்பதை விட அரச தொழில்முறையை வளர்க்க முற்பட்டனர். இதற்காக அவர்கள் தனியார் துறையினரிடம் இருந்த சில தொழில்களை தேசியமயமாக்கினர். 1957 ஆம் ஆண்டு பஸ் போக்குவரத்தும், 1964 ஆம் ஆண்டு பெட்ரோலிய எண்ணெய்த் தொழில் துறையும் தேசியமயமாக்கப்பட்டமை இதற்கு சிறந்த உதாரணங்களாகும். அவர்கள் சோஷலிச நாடுகளுடன் பொருளாதார தொடர்புகளை ஆரம்பித்தனர். சோஷலிச நாடுகளின் உதவியைப் பெற்று தேசிய பொருளாதாரத்தைக் கட்டி எழுப்ப வேண்டும் என்றனர். அதன்படிதான் இலங்கையில் டயர் தொழிற்சாலை, ஒட்டுப்பலகைத் தொழிற்சாலை ஆகியன இலங்கைக்கு கிடைத்தன. எனவே ஐ.தே.க ஏகாதிபத்தியவாதிகளின் அடிவருடிகள் என்றும் தாம் தேசப்பற்றாளர்கள் என்றும் ஸ்ரீ.ல.சு.கட்சிக்காரர்கள் கூறிவந்தனர்.

ஏகாதிபத்தியவாதிகளின் அடிவருடிகளுக்கு எதிராக தேசிய முதலாளித்துவ வர்க்கத்துடன் கூட்டு சேரலாம் என்ற சோவியத் ஒன்றியத்தின் ஜோசப் ஸ்டாலினினதும் சீனாவின் மா சேதுங்கினதும் கொள்கையை ஏற்றுக் கொண்ட இலங்கையின் இடதுசாரி கட்சிகளும் ஐ.தே.கவுடன் கூட்டுச் சேராது ஸ்ரீ.ல.சு.கவுடன் கூட்டு சேர விரும்பினர். மக்கள் விடுதலை முன்னணி தவிர்ந்த சகல இடதுசாரி கட்சிகளிடமும் இன்னமும் அந்தச் சித்தாந்தம் நிலைத்திருக்கிறது. பிற்காலத்தில் இரு பிரதான கட்சிகளினதும் கொள்கை வேறுபாடுகள் இல்லாமல் போனதாகக் கூறும் மக்கள் விடுதலை முன்னணி, இரு கட்சிகளும் ஒன்றுதான் என்ற அர்த்தத்தில் அவசியமான நேரங்களில் அக்கட்சிகளில் எதனுடனும் கூட்டு நடவடிக்கை எடுக்கத் தயங்குவதிலலை.

உண்மையில் மக்கள் விடுதலை முன்னணி கூறுவது சரியே. 1994 ஆம் ஆண்டின் பின்னர் ஐ.தே.கவுக்கும் ஸ்ரீ.ல.சு.கவுக்கும் இடையே எவ்வித கொள்கை வேறுபாடும் காணக்கூடியதாக இல்லை. 1994 ஆம் ஆண்டின்; பின்னர் ஸ்ரீ.ல.சு.கவும் தனியார் மயமாக்கலை ஏற்றுக் கொண்டது. 1994 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பதவியேற்ற சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்திலும் 2005 ஆம் ஆண்டு ஆரம்பித்த மஹிந்தவின் ஆட்சிக் காலத்திலும் பல அரச முறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டன. அவ்விரு ஆட்சிக் காலங்களின் முடிவின் பின்னர் பார்க்கும் போது, தனியார் மயமாக்கக்கூடிய எந்தவொரு பலமான பொது நிறுவனமும் எஞ்சியிருக்கவில்லை.

வெளிநாட்டுக் கொள்கையிலும் இப்போது இவ்விரு கட்சிகளிடையே வேறுபாடு இல்லை. இரு கட்சிகளும் மேற்கத்தைய நாடுகளினதும் உலக வங்கியினதும் சர்வதேச நாணய நிதியத்தினதும் ஆலோசனையை பெற்றே ஆட்சி புரிகின்றன. இரு கட்சிகளும் சீனா போன்ற நாடுகளுடனும் அமெரிக்கா போன்ற நாடுகளுடனும் ஒரே விதமாக அரசியல் மற்றும் வர்த்தக உறவுகளைப் பேணி வருகின்றன. தற்போது இவ்விரு பிரதான கட்சிகளும் தேசிய மயமாக்கல் கொள்கையை வெறுக்கின்றன.தனியார் மயப்படுத்தலை ஏற்றுக் கொள்கின்றன. தாராள பொருளாதார கொள்கையை ஏற்றுக் கொள்கின்றன. சந்தைப் பொருளாதாரத்தைப் பின்பற்றுகின்றன. இரு கட்சிகளும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதைப் பற்றி மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

இனப்பிரச்சினை விடயத்திலும் இரு கட்சிகளும் ஏறத்தாழ ஒரே கொள்கையைத் தான் கடைப்பிடித்து வந்துள்ளன. அதாவது ஆளும் கட்சியாக இருக்கும் போது சிங்கள மக்கள் ஆத்திரப்படாத வகையில் இனப்பிரச்சினைக்கு ஏதாவது தீர்வு காண முயற்சிப்பதும் எதிர்க் கட்சியில் இருக்கும் போது அரசாங்கம் எடுக்கும் அந்த முயற்சிகள் தமிழர்களுக்கு நாட்டைத் தாரைவார்த்து கொடுப்பதாக சித்தரிப்பதுமே அந்தக் கொள்கையாகும்.

ஆனால் 2000 ஆம் ஆண்டிலிருந்து இது சற்று வித்தியாசமாகத் தான் செயற்படுகிறது. 2000 ஆம் ஆண்டிற்குப் பின்னர் 2015 ஆம் ஆண்டு வரை எதிர்க் கட்சிகள்; சிங்கள மக்களைப் பெரிதாகத் தூண்டவில்லை. 2002 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் ரணில் விக்கிரமசிங்ஹவின் அரசாங்கம் புலிகளுடன் சமஷ்டி முறையைப் பற்றி உடன்பாடு ஏற்படுத்திக் கொண்ட போது, அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அதற்கு எதிராக சிங்கள மக்களைத் தூண்டாது, தாம் 2000 ஆம் ஆண்டிலேயே சமஷ்டித் தீர்வொன்றை முன்வைத்ததாக கூறினார்.

அதேபோல் மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் நல்லிணக்க ஆணைக்குழு, உதலாகம ஆணைக்குழு மற்றும் பரணகம ஆணைக்குழு ஆகியவை நியமிக்கப்பட்ட போது எதிர்க் கட்சியில் இருந்த ரணிலும் அவற்றை எதிர்த்துக் கூச்சலிட்டு, சிங்கள மக்களைத் தூண்ட முற்படவில்ல. 2015 ஆம் ஆண்டு மஹிந்த தோல்வியடைந்ததன், பின்னர்தான் அவரது அணி புதிய அரசாங்கம் இனப் பிரச்சினை விடயத்தில் எடுக்கும் நடவடிக்கைகளைக் காட்டி இனவாதத்தை தூண்ட முயற்சிக்கிறது.

எனவே, தற்போது ஸ்ரீ.ல.சு.கவில் ஏற்பட்டுள்ள உட்பூசலானது எவ்வகையிலும் கொள்கைப் பிரச்சினையல்ல. தனியே போட்டியிட்டு; பிரதேச சபையொன்றிலேனும் ஓர் ஆசனத்தையாவது வெற்றி பெற முடியாத ஆறு சிறிய கட்சிகள், தமது இருப்புக்காக மஹிந்தவை துண்டுவதனாலும் ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காகியுள்ள மஹிந்த தமது இருப்புக்காக செயற்பட வேண்டியேற்பட்டுள்ளதனாலும் அவ்விரு சாராரும் ஏற்படுத்தும் குழப்பம் பிரச்சினையின் ஒரு புறமாகும். அந்த குழப்பத்தினால் தமது இருப்புக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தினால் ஜனாதிபதி மைத்திரிபால எடுக்கும் நடவடிககைகள் அதன் மறுபுறமாகும்.

எனவே, இந்தச் சச்சரவானது பொது மக்களின் நலன் சார்ந்தது அல்ல. இது சில அரசியல்வாதிகள் தமது இருப்பைப் பாதுகாத்துக் கொள்ள நடத்தும் சண்டையாகும். இதன் விளைவாக மஹிந்த விரைவில் ஏதாவது ஒரு முறையில் பிரதமராகவேனும் மீண்டும் பதவிக்கு வந்தால் சரத் பொன்சேகா பழிவாங்கப்பட்டதைப் போல் பெரும் எண்ணிக்கையில் பலர் பழிவாங்கப்படலாம். பல அடக்குமுறை சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படலாம். அது நாட்டில் பதற்ற நிலையை ஏற்படுத்தலாம். தம்மைத் தோற்கடித்த சிறுபான்மை மக்கள் விடயத்தில் அவர் எவ்வாறு நடந்து கொள்வார் என்பதும் கேள்விக்குறியே. அது அல்லாது ஸ்ரீ.ல.சு.கவின் உட்பூசலானது குறுகிய கால அர்த்தத்தில் பொது மக்களுக்கு தேவையற்ற வம்பாகும்.

ஆனால,; அவ்வாறு மஹிந்த மீண்டும் அதிகாரத்திற்கு வந்தால் சிலவேளை ஸ்ரீ.ல.சு.க அவர் பின்னால் ஐக்கியப்படலாம். அது நாட்டில் இரு கட்சி ஜனநாயகத்திற்கு சாதகமான நிலைமையாகும்.

இச்சர்ச்சை காரணமாக தற்போது ஸ்ரீ.ல.சு.க மேலும் ஒரு படியால் பிளவுக்கு நெருங்கி விட்டது. அந்த பிளவின் போது மைத்திரி கட்சியின் பெரும்பாலானவர்களை வென்றெடுத்தால் கட்சி அவர் பின்னால் ஐக்கியப்படவும் கூடும். அவ்வாறாயின் அதுவும் இரு கட்சி ஜனநாயகத்திற்கு சாதகமானதாக அமையும். பிளவின் போது கட்சி சரி சமமாக பிளவுபட்டால், அது சிலவேளை ஐ.தே.கவை நீண்ட காலமாக பதவியில் அமர்த்தி வைக்கக் கூடும். அது நாட்டின் இரு கட்சி ஜனநாயக முறையை ஓரிரு தசாப்தத்திற்கு இல்லாமல் செய்துவிடவும் கூடும். எனவே

ஸ்ரீ. ல. சு.கவின் இந்த மாநாடு மிகவும் முக்கியமானதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .