2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

முதலிடத்தில் பாகிஸ்தான்: எழுந்து நின்று பாராட்டுங்கள்

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 24 , மு.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

பாகிஸ்தான் கிரிக்கெட்டின் அண்மைக்கால வரலாற்றில், இரண்டு தினங்கள் முக்கியமானவை. முதலாவது, மார்ச் 4, 2009 - பாகிஸ்தானுக்குச் சென்றிருந்த இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட தினம்: இரண்டாவது, ஓகஸ்ட் 28, 2010 - பாகிஸ்தானின் அப்போதைய தலைவர் சல்மான் பட் உட்பட மூன்று வீரர்கள், பணத்துக்காக ஸ்பொட் ஃபிக்சிங்கில் ஈடுபட்டார்கள் என்பது வெளிப்படுத்தப்பட்ட தினம்.

ஏனைய நாடுகளாக இருந்திருந்தால், இந்த இரண்டு சம்பவங்களாலும் ஏற்பட்ட விளைவுகளால், மோசமான நிலைமையை அடைந்திருக்கும். ஆனால், இரண்டாவது சம்பவம் இடம்பெற்று 6 ஆண்டுகள் ஆகுவதற்கு 6 நாட்கள் முன்னதாக, உலகின் முதல்நிலை டெஸ்ட் அணியாக, பாகிஸ்தான் அணி மாறியிருக்கிறது. பாகிஸ்தானைத் தவிர, வேறெந்த அணியாலும் இந்தப் பெருமையை ஒருபோதும் அடைந்திருக்க முடியாது. ஏனெனில், கிரிக்கெட்டில் எப்போதுமே கணிக்கப்பட முடியாத அணியாக பாகிஸ்தான் இருந்து வந்திருக்கிறது. ஆனால், அதற்கு நடுவிலும், உச்சநிலைத் திறமையாளர்களை அந்நாடு பிரசவித்திருக்கிறது.

ஸ்பொட் ஃபிக்சிங் காரணமாக அணித்தலைவர் பட்டை இழந்ததா? புதிய தலைவராக உருவாகினார் மிஸ்பா உல் ஹக். முன்னணிப் பந்துவீச்சாளர்களான மொஹமட் ஆமிர், மொஹமட் ஆசிப் ஆகியோரை இழந்ததா அவ்வணி? கவலைப்படவில்லை என்றனர் சயீட் அஜ்மல், யாசீர் ஷா, அப்துர் ரெஹ்மான், ஜுனைட் கான், இம்ரான் கான், உமர் குல், வஹாப் றியாஸ்...

மறுபக்கத்தில், இலங்கை அணி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்குச் செல்ல முன்னணி நாடுகள் மறுத்தன. தாக்குதலுக்குப் பின்னர் டெஸ்ட், ஒருநாள் சர்வதேச, இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளென 317 போட்டிகளில் பாகிஸ்தான் அணி பங்குபற்றியது. அவற்றில் ஐந்தே ஐந்து போட்டிகள் தான் பாகிஸ்தானில் இடம்பெற்றன. அதுவும், 2015ஆம் ஆண்டு மே மாதத்தில் சிம்பாப்வே அணிக்கெதிரான 3 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், 2 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் மாத்திரமே. பாகிஸ்தானுக்குச் செல்வதற்கு ஏனைய நாடுகள் தயங்குவதில் வேண்டுமானால் நியாயமிருக்கலாம் - அந்நாட்டில் இன்னமும் தாக்குதல்களும் குண்டுவெடிப்புகளும் சாதாரணமாக இடம்பெற்று வருகின்றன. ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியைப் பொறுத்தவரை, சொந்த நாட்டில் போட்டிகளில் - குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் - பங்குபற்ற முடியாமையென்பது மாபெரும் இழப்பு.

சொந்த நாடென்பது அணிகளுக்கு எவ்வளவுக்கு முக்கியமானது என்பதை விளக்குவதற்கு, மார்ச் 6, 2016க்குப் பின்னர், தங்கள் நாட்டு மைதானங்களிலும் தங்கள் நாட்டுக்கு வெளியே (எதிரணியின் மைதானம் அல்லது மூன்றாவது நாடொன்றின்) உள்ள மைதானங்களில் அணிகள் எவ்வாறு பெறுபேறுகளை வெளிப்படுத்தியிருக்கின்றன என்பதைப் பார்ப்பது பொருத்தமானது.

அட்டவணை 1இன்படி, டெஸ்ட் விளையாடும் முன்னணி நாடுகளான இந்தியா (2ஆம் நிலை), அவுஸ்திரேலியா (3ஆம் நிலை), இங்கிலாந்து (4ஆம் நிலை) ஆகியன, சொந்த நாடுகளில் தங்கள் நாட்டில் முறையே 68.96, 65.78, 59.25 சதவீதமான போட்டிகளில் வெல்கின்றன. இதே நாடுகள், எதிரணியின் நாடுகளில் அல்லது மூன்றாவது நாடுகளில், முறையே 25.58, 36.17, 30.76 சதவீதமான போட்டிகளில் மாத்திரம் வெல்கின்றன. இரண்டுக்குமிடையிலான வித்தியாசம் முறையே 43.38, 29.61, 28.49 சதவீதங்கள் ஆகும். இவ்வாறு தான், வெளிநாடுகளில் போட்டிகளில் பங்குபற்றுவது, கடினமானதாக மாறியுள்ளது.

ஆனால் பாகிஸ்தானோ, டெஸ்ட்டில் தனது முழுப் போட்டிகளையும் வெளிநாடுகளிலேயே விளையாடி, இச்சிறப்பான நிலைமையை அடைந்துள்ளது. இதனால் தான், பாகிஸ்தானின் இந்தத் தரப்படுத்தல், முக்கியமானதும் பாராட்டப்பட வேண்டியதும் ஆகும்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இந்திய அணிக்குமிடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டியில் மழை பெய்து, இந்தியாவின் வெற்றியைத் தடுத்ததால் தான், பாகிஸ்தானுக்கு இந்தப் பெருமை கிடைத்தது, இந்தியாவின் அடுத்த பல தொடர்கள், சொந்த நாட்டில் இடம்பெறவுள்ள நிலையில், பாகிஸ்தானின் முதலிடமென்பது, தற்காலிகமானது என்று வாதிடக்கூடும். உண்மை தான். மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிராக இந்திய அணிக்கு வெற்றி கிடைத்திருந்தால், பாகிஸ்தானுக்கு முதலிடம் கிடைத்திருக்காது. ஆனால், மழை பெய்து, இந்தியாவின் வெற்றி வாய்ப்புப் பறிக்கப்பட்டதென்பது, ஒரேயொரு போட்டியில் தான். பாகிஸ்தான் அணியோ, சொந்த நாட்டில் விளையாடுவதற்கு 6 ஆண்டுகளாக இயலாமல் காணப்படும் சூழ்நிலையில், அவ்வணியின் முதலிடம் ஒருநாள் நீடித்தால் கூட, அது மிகப்பெரிய விடயமாகும்.

இந்த அடைவுக்கு, அவ்வணியின் தலைவரான மிஸ்பா உல் ஹக், மிகவும் முக்கியமான ஒருவர். ஸ்பொட் ‡பிக்சிங் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், தளர்ந்து போயிருந்த அணியைப் பொறுப்பேற்ற அவர், தனது 42ஆவது வயதில், இன்னமும் அணியின் நம்பிக்கைக்குரிய துடுப்பாட்ட வீரராக இருப்பதோடு மாத்திரமல்லாது, அணியை முன்னின்று வழிநடத்தியும் வருகிறார்.

எங்களுக்குப் பிரியமான அணியாக இலங்கையோ, இந்தியாவோ, அவுஸ்திரேலியாவோ, பங்களாதேஷோ, இங்கிலாந்தோ, மேற்கிந்தியத் தீவுகளோ, நியூசிலாந்தோ அல்லது சிம்பாப்வேயோ இருக்கலாம். ஆனால், பாகிஸ்தான் அணியின் இந்த அடைவை, ஒரு முறை எழுந்து நின்று பாராட்டுவதைத் தவிர, வேறு உணர்வுகள் எழுவதற்கு வாய்ப்பில்லை. இது, பாகிஸ்தானின் தருணம், முழுமையான பெருமையும், அவர்களுக்குரியது. வாழ்த்துகள், பாகிஸ்தான்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .