2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சென்.கூம்ஸ் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளை ரூ.2,500 வழங்கப்படும்

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 24 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், எஸ்.சுஜிதா, ஆ.ரமேஷ், கு.புஸ்பராஜ்

லிந்துலை, சென்.கூம்ஸ் தோட்டத் தொழிலாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக வழங்கப்படாமலிருந்த 2,500 ரூபாய் இடைக்காலக் கொடுப்பனவு,  நாளை வியாழக்கிழமை (25) வழங்கப்படவுள்ள மாதாந்த முற்கொடுப்பனவுடன் இணைத்து வழங்கப்படுமென, தோட்ட நிர்வாகம் உறுதியளித்துள்ளது.

இடைக்காலக் கொடுப்பனவான 2,500 ரூபாய், கடந்த இரண்டு மாதங்களாக வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து, தேயிலைச் சபை மற்றும் தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் கீழ் இயங்கும் சென்.கூம்ஸ் தோட்டத் தொழிலாளர்கள், சென்.கூம்ஸ் தோட்டக் காரியாலத்துக்கு முன்பாக, நேற்றுப் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது தொழிலாளர்கள், தோட்ட அதிகாரிகள் மற்றும் வாகனங்களை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், அவ்விடத்தில் பதற்;றமான சூழ்நிலை ஏற்பட்டது. எனினும், பொலிஸார் வரவழைக்கப்பட்டதன் பின்னர் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

'தேயிலைச் சபை மற்றும் தேயிலை ஆராய்ச்சி நிலையம், பெருந்தோட்ட கைத்தொழில் துறை அமைச்சின் கீழ் வழிநடத்தப்பட்டு வருவதால், இடைக்காலக் கொடுப்பனவு பட்டியலில் சென்.கூம்ஸ் தோட்டம் உள்வாங்கப்படவில்லை' என அதிகாரிகள் தெரிவித்ததாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், ஏனைய தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டதைப் போன்று, ஜுன் மற்றும் ஜுலை மாதங்களுக்கான இடைக்காலக் கொடுப்பனவை தமக்கு வழங்குமாறு தொழிலாளர்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பில் தோட்ட அதிகாரி லக்ஸ்மன் ஜெயதிலக்கவிடம் வினாவிய போது,

'முதற்கட்டமாக 1,000 ரூபாய் வழங்குவதாகவும் மிகுதியை இரண்டு வாரங்களில் வழங்குவதாகவும் தெரிவித்தோம். இதற்கு உடன்படாத தொழிலாளர்கள், எமது காரியாலயத்தையும் வாகனங்களையும் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்' என்றார்.

இவ்விடயம் தொடர்பில் தேயிலை ஆராய்ச்சி நிலைய ஆணையாளர் கலாநிதி.சரத் அபேசிங்கவிடம் கலந்தாலோசிக்கப்பட்டதுடன்  தேயிலைச் சபை மற்றும் அமைச்சின் கவனத்துக்கும் கொண்டு வரப்பட்டது.

இதன்பின்னர்,  ஜுன் மாதத்துக்கான கொடுப்பனவை, நாளை வியாழக்கிழமை (25) மாதாந்த முற்பணத்தோடு வழங்கத் தீர்மானிக்கப்பட்டதுடன். ஜுலை மாதத்துக்கான கொடுப்பனவை  இரண்டு வாரங்களின் பின்னர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக தோட்ட அதிகாரி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .