2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

'வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் ஒருபோதும் அகற்றப்பட மாட்டாது' (UPDATE)

George   / 2016 ஓகஸ்ட் 25 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ.ஜோர்ஜ்

வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள், ஒருபோதும் அகற்றப்பட மாட்டாது. அவ்வாறு அகற்றும் நோக்கமும் இல்லை எனக் கூறிய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டீ சில்வா, முகாம்களுக்கு மேலதிகமாக உள்ள காணிகளே தற்போது விடுவிக்கப்படுகின்றன என்றும் கூறினார்.

இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில், 'கொழும்பு பாதுகாப்பு மாநாடு 2016', எதிர்வரும் 1ஆம் 2ஆம் திகதிகளில், கொழும்பில் நடைபெறவுள்ளது. இது குறித்து அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு,  நேற்று வியாழக்கிழமை (25), கொழும்பிலுள்ள இராணுவ மின்சாரம் மற்றும் பொறியியற் பிரிவு முகாமில் நடைபெற்றது. அப்போதே, இராணுவத் தளபதி, மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது, 'வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்படும் என, பல்வேறு தரப்பினராலும் தெரிவிக்கப்படுகின்ற நிலையில், அது குறித்து இராணுவம் என்ன சொல்கின்றது?' என ஊடகவியலாளரொருவர் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த இராணுவத் தளபதி, 'இராணுவ முகாம் என்றால் என்ன என்பதை புரிந்துகொள்ள வேண்டும். நிலையாக அமைக்கப்பட்டுள்ளவையே இராணுவ முகாம்கள். இவை ஒருபோதும் அகற்றப்படமாட்டாது' என்றார்.

அத்துடன், 'இராணுவ முகாம்கள் அமைந்துள்ள பகுதிகளில், முகாம் தேவைக்கு மேலதிகமாக உள்ள காணிகள் மாத்திரமே விடுவிக்கப்படுகின்றன. எவ்வாறாயினும், வடக்கிலுள்ள முகாம்கள் அகற்றப்படாது.

மேலும், தேசிய பாதுகாப்புக்காக தம்மை அர்ப்பணித்துள்ள இராணுவம், நாட்டு மக்கள் அனைவருக்கும் அதிகபட்ச சேவையினை வழங்கும். அதிலிருந்து ஒருபோதும் பின்வாங்காது' என்றும் அவர் கூறினார்.

முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதாகக் கூறப்படுகின்றமை தொடர்பில், இராணுவத் தளபதியிடம் கேட்டபோது, 'அது முழுப்பொய். அப்படி ஒன்றும் நடக்கவேயில்லை' என்றும் அவர் குறிப்பிட்டார்.
'கொழும்பில் நடைபெறவுள்ள பாதுகாப்பு மாநாட்டில்  „மென்வலு மற்றும் உலகளாவிய விடயங்களில் அதன் செல்வாக்கு எனும் தொனிப்பொருளுக்கு அமைவான விடயங்கள் மட்டுமே பேசப்படும். இலங்கை இராணுவத்தினர் மீதான யுத்தக் குற்றச்சாட்டுக்களைக் களைவதற்கான ஒன்றாக நாம் இதனைச் செயற்படுத்தப் போவதில்லை. எனினும், அது தொடர்பில் மாநாட்டில் பேச்சு எழுந்தால், நாம் பதிலளிக்கத் தயாராக உள்ளோம்.

இலங்கை தற்போது சமாதானம் நிறைந்த நாடு. நாம் ஆசிய வலய மற்றும் சர்வதேச பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கையில் பங்களிப்பு செய்யவுள்ளோம். தற்போது உலகளாவிய ரீதியில் காணப்படும் மற்றும் அண்மைய சம்பவங்களை கருத்திற் கொண்டே இந்தத் தொனிபொருளை, மாநாட்டில் கலந்துரையாடத் தீர்மானித்தோம்' என, இராணுவத் தளபதி மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .