2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

'முல்லைத்தீவு பற்றி யாருக்கும் அக்கறையில்லை'

George   / 2016 ஓகஸ்ட் 25 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

'வடமாகாணத்தில் ஒரு மாவட்டத்துக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதனால் தான் பிரதேசவாத கருத்துக்கள் தோற்றம் பெறுகின்றன' என வடமாகாண பிரதி அவைத்தலைவர் அன்டனி ஜெகநாதன் வடமாகாண சபை அமர்வில் இன்று தெரிவித்தார்.

'இராணுவ ஆக்கிரமிப்பு, சுவீகரிப்பில் ஐந்து மாவட்டத்தில் உள்ள மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் தனியே யாழ். மாவட்டத்தை சேர்ந்த வலி. வடக்கு மக்களின் காணி சுவீகரிப்பு பற்றியே பேசப்படுகின்றது. அதனால் அந்த காணி விடுவிக்கப்படுகின்றது.

ஆனால், இதுவரைக்கும் முல்லைத்தீவு மன்னார் மற்றும் வவுனியா மாவட்டத்தில் இராணுவ ஆக்கிரமிப்பு, காணி சுவீகரிப்பு பற்றி யாரும் பேசுவதில்லை. அங்கே ஒரு துண்டு காணியும் விடுவிக்கப்படவில்லை.
காணி அபகரிப்புக்கு எதிராக முல்லைத்தீவில் நடைபெறும் போராட்டங்கள் தொடர்பில் எவரும் கவனம் செலுத்துவதில்லை.  வட்டுவாகலில் 617 ஏக்கர் காணி இராணுவத்தினர் வசம் உள்ளது. அந்த காணி விடுவிக்கப்படவேண்டும்.

கேப்பாபுலவில் குடியிருந்த மக்களை சூரியபுரம் எனும் காட்டு பகுதியில் குடியிருத்தி விட்டு, மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ள அந்த இடத்தை கேப்பாபுலவு என பெயர் மாற்றி விட்டார்கள். ஒரு ஊரினையே அப்படியே வேறு இடத்துக்கு மாற்றி விட்டார்கள்.

கொக்கிளாயில் சிங்கள குடியேற்றத்துக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் தமிழ் மக்களுக்கு எதுவுமே செய்து கொடுக்கவில்லை.

கொக்கிளாயில் சிங்கள குடியேற்றத்தில் ஒரு குடிசைக்கு 26 மின்கம்பங்கள் நட்டு மின்சாரம் வழங்கி உள்ளார்கள். குடிசைக்கு மின்சாரம் வழங்க முடியாது என்பது வேறு விடயம்.

அதே பிரதான வீதிகளுக்கு அருகில் வசிக்கும் தமிழ் மக்களின் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை. இவை பற்றி கதைப்பதற்கு யாருமே இல்லை.

இதேவேளை, கிழக்கில் இரா.சம்பந்தனின் முயற்சியால் சம்பூர் நிலம் விடுவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் முல்லைத்தீவு பற்றி கதைக்கின்றார்கள் இல்லை.

மக்களால் தெரிவு செய்யப்பட்டு அனுப்பப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒழித்து விளையாட கூடாது. கை நாட்டு போடுபவர்களுக்குட் அரசியல் தெரியும். அதேநேரம் எல்லா நேரமும் மக்கள் ஒரு பக்கம் தான் நிற்பார்கள் எனவும் நினைக்க கூடாது' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .