2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

'இலங்கையில் எதிர்காலம் மென்டிஸ்'

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 25 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தின் எதிர்காலமாக, இளம் வீரர் குசல் மென்டிஸ் மாறுவார் என, அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய அணிக்கெதிரான 2ஆவது போட்டியில் வெற்றிபெற்ற பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் பகலிரவுப் போட்டியாக நேற்று முன்தினம் இடம்பெற்ற இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 3ஆவது ஓவரில் தனுஷ்க குணதிலகவை இழந்தவுடன் களமிறங்கிய குசல் மென்டிஸ், முதலாவது பந்தைச் சந்திக்க முன்னரே, அடுத்த விக்கெட்டாக திலகரட்ண டில்ஷான் ஆட்டமிழந்தார். எனினும், அதிரடியாக விளையாடிய குசல் மென்டிஸ், 48ஆவது பந்தில் தனது அரைச்சதத்தைப் பூர்த்தி செய்தார். 69 பந்துகளில் 69 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்த போதிலும், அவர் வழங்கிய சிறப்பான அடித்தளம் காரணமாக, ஏனைய வீரர்கள் சிறப்பாக விளையாடி, 48.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 288 ஓட்டங்களை இலங்கை பெற்றது.

போட்டியின் நாயகனான அஞ்சலோ மத்தியூஸ், குசல் மென்டிஸ் பற்றிக் கேட்கப்பட்டபோது, "எமக்கு, மிகப்பெரிய வீரராக அவர் மாறப்போகிறார். எங்களது துடுப்பாட்டத்தில் எதிர்காலமாக அவரே இருக்கப் போகிறார். இவ்வாறு அவர் தொடர்ந்து செயற்பட்டுக் கொண்டிருந்தால், இலங்கை அணிக்கு அவர் அதிசயங்கள் பலவற்றைச் செய்வார். அவருக்கு மிகச்சிறப்பான வாழ்த்துகளை நான் தெரிவிக்கிறேன். அற்புதமான இனிங்ஸ் ஒன்றை அவர் இன்று விளையாடினார்" என்று தெரிவித்தார்.

ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்த போதிலும், சிறப்பாக விளையாடிய மென்டிஸின் இயல்பைப் பாராட்டிய மத்தியூஸ், அவ்வாறான அழுத்தமான நிலையில், அனைவராலும் அவ்வாறு துடுப்பெடுத்தாட முடியாது எனத் தெரிவித்ததோடு, "வித்தியாசமான வகையான வீரர் அவர்" என்று புகழ்ந்தார்.

குசல் மென்டிஸ் தவிர, இளம் வீரரான அமில அபோன்ஸோவைப் புகழ்ந்த அஞ்சலோ மத்தியூஸ், பொறுப்புடன் விளையாடுவதாக, இலங்கையின் உப தலைவர் டினேஷ் சந்திமாலையும் புகழ்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .