2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

'சிறந்த சமுதாயத்தைக் கட்டியெழுப்ப பல்வேறு வேலைத்திட்டங்கள்'

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 26 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டில் நல்லாட்சியை உருவாக்கியுள்ளதோடு சிறந்த சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்கும் பல்வேறு வேலைத்திட்டங்களை அமுல்படுத்தியுள்ளதாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.ஐ.எம்.அமீர் தெரிவித்தார்.

உணவு உற்பத்தி தேசிய செயற்றிட்டம் 2016 -2018 இன் கீழ் 'நெல் வீட்டுக்கு, வைக்கோல் வயலுக்கு' எனும் தொனிப்பொருளில் வைக்கோலை எரிப்பதற்கு எதிரான மாபெரும் விழிப்புணர்வுப் பேரணி அக்ரைப்பற்று பிரதேச செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை (25) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
 

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'விவசாயிகள் தரமற்ற உணவு உற்பத்தி செய்வதால் மக்கள் சிறுநீரக, புற்றுநோய் மற்றும் பல்வேறு வகையான தொற்றா நோய்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள்.

இலங்கையில் ஒரு வருடத்தில் சுமார் 02 இலட்சம் பேர் சிறுநீரக நோய்க்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கான காரணம் போசனையற்ற, தரமற்ற உணவு உற்பத்தியாகும்.

தேசிய நெல் உற்பத்தியில் அம்பாறை மாவட்ட 25 வீதத்தில் காணப்படுகின்றது. நெல் உற்பத்தியோடு இணைந்ததாக பாசிப் பயறு, பால் உற்பத்தி என்பன அதிகரித்து காணப்படுகின்றது.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் இவ்வாறான வேலைத் திட்டங்களை விவசாயிகள் கடைப்பிடித்து எதிர்கால சந்ததினர்களுக்காக நஞ்சற்ற உணவுகளை உற்பத்தி செய்ய வேண்டும்.

வேளாண்மைச் செய்கையின்போது, வயல் நிலங்களில் வைக்கோலைப் பசளையாகப் பாவிப்பதால்,  சிறந்த விளைச்சலை விவசாயிகள் பெறமுடியும். விவசாய நிலங்களில் வைக்கோலை எரிக்காமல் விடுவதால், நெற்பயிர்களுக்குத் தேவையான 20 வகையான மூலக்கூறுகள் வைக்கோல் மூலம் கிடைப்பதுடன், இரசாயன உரத்தைக் கொள்வனவு செய்வதற்கான பணமும் விவசாயிகளுக்கு மீதப்படுத்தப்படுகின்றது.

கரையோர பிரதேசங்களில் வயல்களில் சேதனப் பசளைகள் இடுவது குறைந்து காணப்படுகின்றது. இதனை அதிகரிக்கச் செய்து நஞ்சற்ற போசாக்கு நிறைந்த உணவுகளை உற்பத்தி செய்வதற்காக விவசாயிகள் மத்தியில் இவ்வாறான விழிப்புணர்வு வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது' என அவர் கூறினார்.

அக்கரைப்பற்று கமநல சேவைகள் மத்திய நிலையம், அக்கரைப்பற்று  பிரதேச செயலகம், அக்கரைப்பற்று விவசாயிகள் அமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இப்பேரணி, அக்கரைப்பற்று பிரதேச செயலகத்துக்கு முன்பாக ஆரம்பமாகி அக்கரைப்பற்று மணிக்கூட்டு கோபுரம் வரை சென்றடைந்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .