2024 மார்ச் 28, வியாழக்கிழமை

'ஹட்டன் நகர அபிவிருத்திக்கு ஒத்துழைக்கவும்'

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 26 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

'ஹட்டன் நகரை அபிவிருத்தி செய்வதற்கு முன்வந்துள்ள அமைச்சர் திகாம்பரத்துக்கு, ஹட்டன் நகர வர்த்தகர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

ஹட்டன் நகரின் ரயில் நிலையத்துக்கு முன்னாலுள்ள பகுதியில் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்படவுள்ள அங்காடி தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (28) அமைச்சர் ப.திகாம்பரம் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வு தொடர்பாக ஹட்டன் நகர வர்த்தகர்களுக்கும் ஏனையவர்களுக்கும் விளக்கமளிக்கும் கூட்டம் நேற்று வியாழக்கிழமை ஹட்டனில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.

'எதிர்வரும் 28 ஆம் திகதி ஹட்டன் நகருக்கு வருகைத்தரவுள்ள பிரதமர்  ரணில் விக்கிரமசிங்ஹவை வரவேற்பதற்கு நாம் பல ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளோம். அதேவேளை ஹட்டன் நகர அபிவிருத்தி திட்டத்தின் முதற்கட்டமாக ரயில் நிலையத்துக்கு அருகில் நிர்மாணிக்கப்படவுள்ள வர்த்தக கட்டிடத்தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வுகளில் ஹட்டன் நகர வர்த்தகர்களும் நகரை அண்டிய கிராம மக்களும் ஒற்றுமையுடன் கலந்துகொள்ள வேண்டும். நுவரெலியா மாவட்டத்தைப் பொறுத்த வரையில் மேல் கொத்மலைத்திட்டத்தின் ஊடாக தலவாக்கலை நகரம் மாத்திரமே அபிவிருத்தியடைந்துள்ளது.

ஆனால் ஹட்டன்,பொகவந்தலாவை, மஸ்கெலியா , சாமிமலை , நோர்வூட் , கினிகத்தேனை போன்ற நகரங்கள் அபிவிருத்தியடையவில்லை. இந்நிலையில் ஹட்டன் நகர வர்த்தகர்கள் தமது சொந்த நிதியைக் கொண்டு கட்டடங்களை அமைத்துள்ளனர். எனினும் அரசாங்கத்தின் நிதியின் ஊடாக ஹட்டன் நகரை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படவில்லை. ஹட்டன் நகரின் ரயில் நிலையத்துக்கும் பிரதான பாதைக்குமிடைப்பட்ட பகுதியிலிருந்த தகர தடுப்பை அமைச்சர் திகாம்பரத்தின் முயற்சியினால் அப்புறப்படுத்தப்பட்டு தற்போது வயர்நெட் அமைக்கப்பட்டுள்ளது. இதனை நகரவர்த்தகர்களும் ஏனையவர்களும் வரவேற்றுள்ளனர்' என்றார்.

'தற்போது நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் ஹட்டன் நகரை அபிவிருத்தி செய்வதற்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஹட்டன் நகரம் அபிவிருத்தியடைகின்றபோது, இந்த நகரைச் சேர்ந்த வர்த்தகர்களும் நகருக்கு வந்து செல்லுகின்ற மக்களுமே நன்மையடைவுள்ளனர். ஆகவே அமைச்சர் திகாம்பரம் முன்னெடுத்துச் செல்லுகின்ற வேலைத்திட்டங்களுக்கு ஹட்டன் நகர வர்த்தகர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X