2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பொலிஸ் காவலில் இருந்து தப்பிச் சென்ற அருண்விஜய்

George   / 2016 ஓகஸ்ட் 28 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

குடி போதையில் காரை செலுத்தி பொலிஸ் வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்திய நடிகர் அருண் விஜய், பொலிஸாரிடமிருந்து தப்பிச் சென்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நட்சத்திர ஹோட்டலில், வெள்ளிக்கிழமை இரவு நடந்த, நடிகை ராதிகாவின் மகள் ரயானே- மற்றும் -மிதுன் ஆகியோரின் திருமண வரவேற்பில் பங்கேற்ற அருண்விஜய் சனிக்கிழமை அதிகாலை 3:00 மணியளவில், சொகுசு காரில், மனைவி ஆர்த்தியுடன், வீட்டுக்கு கிளம்பினார்.

அப்போது, நுங்கம்பாக்கம் பொலிஸ் நிலையம் அருகே தாறுமாறாக ஓடிய கார், அங்கு நிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் வாகனம் மீது மோதியது.

இருவரையும், பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்த போது, அருண் விஜய், செம போதையில் இருந்தது தெரியவந்தது. பரிசோதனையில், அவர் குடித்த மதுவின் அளவு, 59 சதவீதமாக இருந்துள்ளது.

வழக்கு பதிவு செய்யாமல் இருக்க, காவல் நிலையத்தில் அருண் விஜய், பேரம் பேசியதாகவும் அதற்கு உடன்பட மறுத்த பொலிஸார், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததாகவும்  நடிகர் விஜயகுமார் பொலிஸ் நிலையத்துக்கு வந்து சேதமடைந்த பொலிஸ் வாகனத்தை சரி செய்து தருவதாக கூறியுள்ளார்.

குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்துதல் போன்ற பிரிவுகளின்படி வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் அபராதம் செலுத்தி, காரை எடுத்து செல்லும்படி பொலிஸார் கூறியுள்ளனர்.

நுங்கம்பாக்கம் பொலிஸ் நிலையத்தில் இருந்து, பாண்டி பஜார் பொலிஸ் நிலையத்துக்கு, அருண் விஜயை பொலிஸார் அழைத்த போது, தந்தை விஜயகுமாரின் காரில் வருவதாக கூறியுள்ளார். ஆனால், பாண்டி பஜார் பொலிஸ் நிலையத்துக்கு வெகுநேரமாகியும் நடிகர் வரவில்லை.

இதனால், பொலிஸ் காவலில் இருந்து, தப்பிச் சென்றவர்கள் பட்டியலில், அருண் விஜய் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ராதிகாவின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், மது விருந்து நடந்தது. அதில் நடிகர், நடிகையர் மற்றும் பல திரை பிரபலங்கள் பங்கேற்றனர். விடியும் வரை நடைபெற்ற மது விருந்தில், அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாக, அருண் விஜய் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

நட்சத்திர ஓட்டலில் நடந்த மது விருந்துக்கு, பொலிஸார் பாதுகாப்பு அளித்துள்ளனர். பல நடிகர், நடிகையர், போதையில் கார் ஓட்டி சென்றதையும் பார்த்துள்ளனர்; ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X