2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

தமிழ் பாடசாலைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது மகிழ்ச்சி: மனோ

Gavitha   / 2016 ஓகஸ்ட் 28 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

வத்தளை ஒளியமுல்லை பிரதேச காணியில் தமிழ் பாடசாலை அமைப்பதற்கு, இன்று ஞாயிற்றுக்கிழமை (28) அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதையிட்டு, தான் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ள தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான அமைச்சர் மனோ கணேசன்,  இந்த அடிக்கல் நாட்டு நிகழ்வை குழப்ப முனைந்த இனவாதிகளையிட்டு தான் கவலையடைவதாகவும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு விவேகானந்தா கல்லூரி வளவில், தனது அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட முதலாவது முழுநாள் நடமாடும் சேவை, இன்று ஞாயற்றுக்கிழமை (28) இடம்பெற்றது. இதில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'இந்த பாடசாலை நிர்மாணிகள் இழுபறிக்கு உள்ளானமைக்கான முழு பொறுப்பையும் அமைச்சர் ஜோன் அமரதுங்க ஏற்றுக்கொள்ள வேண்டும். 1977ஆம் ஆண்டு முதல் கடந்த 40 வருடங்களாக இவர் அமைச்சராகவும் எம்.பியாகவும் இருக்கின்றார். ஒவ்வொரு தேர்தலிலும் வத்தளை தமிழ் மக்கள், இவருக்கு வாக்களித்துள்ளார்கள். தமிழ் வாக்குகள் கிடைத்திராவிட்டால் இவர் ஒருபோதும் வெற்றி பெறவே முடியாது. இந்நிலையில் இவர் 25 ஆண்டுகளுக்கு முன்னரே, ஏழை தமிழ் பிள்ளைகளுக்கான ஒரு தனித்தமிழ் பாடசாலையை வத்தளையில் நிர்மாணித்து, புண்ணியத்தை தேடியிருக்க வேண்டும். அதை அவர் செய்யவும் இல்லை. செய்ய முனைந்த எங்களை செய்ய விடவும் இல்லை' என்று அவர் தெரிவித்தார்.

'இந்நிலையில் எதிர்வரும் ஜனவரியில் தமிழ் பிள்ளைகள் முதலாம் வகுப்புக்கு அனுமதி பெறக்கூடியதாக, புதிய தனித்தமிழ் பாடசாலை தயாராக வேண்டும். இன்றைய அடிக்கல்லை கண்டு அகமகிழ்ந்து, அமைதியடைந்து மீண்டும் ஏமாற தமிழ் மக்கள் இம்முறை தயாராக இல்லை. நானும், அமரதுங்கவும் ஒரே அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருக்கின்றோம் என்பதற்காக நான் அமைதியாக இருக்க மாட்டேன். என்னைப்பற்றி ஜோன் அமரதுங்கவுக்கு மிக நன்றாக தெரியும். அன்று இவர்கள் திட்டமிட்டு, தமிழ் பாடசாலை திட்டத்துக்கு எதிராக  சிங்கள கத்தோலிக்க இனவாதத்தை கிளப்பினார்கள். இன்று சிங்கள பௌத்த இனவாதம் இவர்கள் மீது பாய்கிறது. இதுதான் உண்மை. இது இவர்கள் விதைத்த வினை.

'நானும் அரசியல் நோக்கில் ஓளியமுல்லைக்கு வந்து, ஒரு குழியை தோண்டி, ஒரு அடிக்கல்லை நாட்டி இருக்கலாம்.

எனினும் நானும் முதிர்ச்சியற்ற ஒரு சிறு குழந்தையை போல் நடந்துக்கொள்ள விரும்பவில்லை. ஜோன் அமரதுங்கவைவிட எனக்கு அரசியல் முதிர்ச்சி உள்ளது. தமிழ் பாடசாலை வத்தளையில் வேண்டும் என்பதே எமது நோக்கம்' என்றார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

'இந்தப் பாடசாலைக்கான அடிக்கல் நாட்டும் விழாவை, பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி, எமது நல்லாட்சியில் ஆரம்பிக்க நாம் முடிவு செய்திருந்தோம். இது மாகாணசபை பாடசாலை என்ற காரணத்தால் மேல்மாகாணசபை முதலமைச்சர் தலைமையில், எனது அழைப்பின் பேரில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, அமைச்சர் ஜோன் அமரதுங்க, அனைத்து கட்சி எம்.பிக்கள், மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோரை அழைத்து, இந்நிகழ்வை விமர்சையாக நடத்துவதற்கு இருந்தோம். ஆனால், அந்த நிகழ்வை அமைச்சர் அமரதுங்க அரசியல் நோக்கில் தடுத்து நிறுத்தினார். நாட்டின் மிகப்பெரும் தலைவர்கள் கலந்துக்கொள்ளும் நிகழ்வாக இருந்தால், இனவாதிகள் ஓடி ஒளிவார்கள் என எனக்கு தெரியும். ஆனால், அது ஜோன் அமரதுங்கவுக்கு தெரியவில்லையா அல்லது தமிழ் பாடசாலை கட்டுவதில் அவருக்கு உண்மையிலேயே அக்கறை இல்லையா என எனக்கு விளங்கவில்லை' என்று அவர் தெரிவித்தார்.

           

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X