2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அடிக்கல் நாட்டச்சென்ற ஜோனுக்கு 'ஹூ... ஹூ...'

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 29 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

வத்தளை, ஒலியமுல்லை, நவலோக்க உத்யானபுரவில் நிர்மாணிக்கப்படவுள்ள தமிழ் மகா வித்தியாலயத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தலைமையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற அமைச்சருக்கு, பிரதேசவாசிகள் மற்றும் பௌத்த பிக்குமார்கள் ஒன்றிணைந்து, எதிர்ப்புத் தெரிவித்துள்ளதுடன் ஹூ சத்தமிட்டு,முற்றுகைப் போராட்டமொன்றையும் நடத்தினர்.

விளையாட்டு மைதானமொன்றை நிர்மாணிப்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்த காணியிலேயே, மேற்படி பாடசாலை நிர்மாணிக்கவுள்ளதாகவும் அதனாலேயே, அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

நிகழ்வின் போது அமைச்சர் உரை நிகழ்த்த முற்பட்ட போது, பொலிஸ் பாதுகாப்புத் தடைகளையும் மீறி, மேடையை நோக்கி முன்னேறிய பிரதேசவாசிகள், தங்களது எதிர்ப்பைக் கடுமையாக வெளிப்படுத்தினர்.

எவ்வாறாயினும், விளையாட்டு மைதானத்துக்காக ஒதுக்கப்பட்ட காணியின் ஒரு பகுதியில் மாத்திரமே, இந்தப் பாடசாலை நிர்மாணிக்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர் அமரதுங்க, மிஞ்சிய காணியில், கட்டாயமாக விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என்றார்.  

அத்துடன், யார் என்ன செய்தாலும், குறித்த பகுதியில், தமிழ் மகா வித்தியாலயமொன்று நிர்மாணிக்கப்படுவதை, எவராலும் தடுக்க இயலாது என்றும் அமைச்சர் சூளுரைத்தார்.

இவ்வாறாக, அடிக்கல் நாட்டும் நிகழ்வை முடித்துக்கொண்டு அவ்விடத்தை விட்டு வெளியேற, அமைச்சர் முற்பட்ட போது, வீதியை மறித்த போராட்டக்காரர்கள், அமைச்சர் அங்கிருந்து நகர முடியாதவாறு சுற்றிவளைத்துக்கொண்டனர். இதனால், அவ்விடத்திலேயே, சில நிமிட நேரங்கள் காத்திருந்த அமைச்சரை, அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், மாற்று வீதியினூடாக, அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

எவ்வாறாயினும், அமைச்சரின் வாகனத் தொடரணியைப் பின்தொடர்ந்து ஓடிச்சென்ற போராட்டக்காரர்கள், 'ஹூ' சத்தமிட்டுத் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியது மாத்திரமன்றி, ஒலியமுல்ல சந்தியில் வைத்து, அமைச்சரின் உருவப்பொம்மையை எரித்து, தங்களது எதிர்ப்பைக் கடுமையாக வெளிப்படுத்தினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X